மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.
இதனிடையே பல எதிர்ப்புக்கு மத்தியில், மன்சூர் அலிகான் விளக்கமளித்தார். அதில், “நான் எப்பொழுதும் என்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகின்றனர்” எனக் கூறியிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், “நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாகப் பேசவில்லை. உண்மையில் நான் அவரைப் பாராட்டித்தான் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை.” என்றார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் எனத் தொடர்ச்சியாக திரைத்துறை சம்பந்தமான சங்கங்களிடமிருந்து மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் எழுந்து வந்தது. பின்பு மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலி கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இதனிடையே முன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவில், ஆயிரம் விளக்கு காவல் நிலையம் என்பதற்கு பதில் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் என மாற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. காவல்நிலைய பெயரை மாற்றி குறிப்பிட்டதால் முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார். இதனால் நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று சொன்ன நீதிபதி, நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல எனக் கூறி கண்டனம் தெரிவித்தார்.
இந்த மனு மீண்டும் நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மன்சூர் அலிகான் தரப்பு, உள்நோக்கத்துடன் எந்தக் கருத்தையும் கூறவில்லை. மேலும் த்ரிஷா தரப்பில் எந்த புகாரும் அளிக்கவில்லை என்று கூறப்பட்டது. பின்பு இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடப்பதாக காவல்துறை தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணையை ஒத்தி வைத்தார். இன்று காலை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.