![rrr](http://image.nakkheeran.in/cdn/farfuture/HUf23eKvvAoeMKvtXqgy6htqY4c72f-8GBKhpSPHTq4/1621492080/sites/default/files/inline-images/64_10.jpg)
‘பாகுபலி’ படங்களின் வெற்றிக்குப் பிறகு, ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தை ராஜமௌலி இயக்கிவருகிறார். ராம் சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துவரும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்க, செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
2021 பொங்கல் வெளியீட்டை குறிவைத்தே ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பணிகளை ராஜமௌலி தொடங்கினார். முன்தயாரிப்பு பணிகள் திட்டமிட்டபடி சுமுகமாக முடிந்து, படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இயல்புநிலை திரும்பிய பிறகு, மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, இந்த வருடம் அக்டோபர் 13ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவித்து, அதற்கேற்ப பணிகளை முடுக்கிவிட்டது.
தற்போது நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலையால், இந்த முறையும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வெளியீடு 2022ஆம் ஆண்டிற்கு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஜூனியர் என்டிஆர் இன்று (20.05.2021) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ஜூனியர் என்டிஆரின் சிறப்பு போஸ்டர் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் வேல்கம்புடன் ஆக்ரோஷமாக ஜீனியர் என்டிஆர் சீறும் வகையில் உள்ள இந்தப் போஸ்டர், இணையத்தில் வைரலாகிவருகிறது.