மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமும் கோவா மாநில அரசும் இணைந்து நடத்தும் 52ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்ட நிலையில், தமிழில் இருந்து பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் திரைப்படமும் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய ஸ்வீட் பிரியாணி குறும்படமும் திரையிடப்பட்டன. பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ள கூழாங்கல் திரைப்படமானது, இந்திய அரசு சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் தொடர்ந்து விருதுகளை வென்றுவருகிறது.
இந்த நிலையில், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் தன்னுடைய அம்மா, மனைவி, தம்பி என குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். நிகழ்வில் கூழாங்கல் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், படம் முடிந்ததும் எழுந்து நின்று பாராட்டுத் தெரிவித்தனர். பி.எஸ்.வினோத்ராஜுக்கு கிடைக்கும் பாராட்டை முதன்முதலாக நேரில் கண்ட அவரது குடும்பத்தினர் மிகவும் நெகிழ்ச்சியடைந்தனர்.
இது குறித்து அவரது அம்மா நம்மிடம் பேசுகையில், விருப்பமில்லாமல்தான் வினோத்தை சினிமாவுக்கு அனுப்பினோம். திருப்பூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவன், ஒருநாள் வந்து நான் சினிமாவிற்கு போகப்போகிறேன்னு சொன்னான். சினிமா பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாததால், இருக்கிற வேலையை விட்டுவிட்டு ஏன் இந்த முடிவு என நினைத்தோம். ஆனால், எட்டு வருடங்களில் ஜெயிச்சு வந்துட்டான்" என நெகிழ்ச்சியாகக் கூறினார்.
பி.எஸ்.வினோத்ராஜின் மனைவி அறிவு நிலா பேசுகையில், "நானும் வினோத்தும் லவ் மேரேஜ்தான் பண்ணிக்கிட்டோம். நாங்கள் முதன்முதலாக ரயிலில்தான் சந்தித்தோம். எங்களுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. கல்யாணம் ஆனதிலிருந்து, வெளிநாடுகளில் நடக்கும் திரைப்பட விழா, ஆஸ்கர் நாமினேஷன், கோவா சர்வதேச விழா என வினோத் ரொம்ப பிஸியாக இருக்கிறார். படம் முடிந்ததும் எல்லோரும் எழுந்து கைதட்டியதைப் பார்த்து எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது" எனக் கூறினார்.