
சென்னை கிண்டியில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு சார்பாக ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தகம் தொடர்பான தென்னிந்திய மாநாடு நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்பு மாநாட்டில் நடந்த உரையாடல் நிகழ்ச்சியில் கமலும் த்ரிஷாவும் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது கமலிடம் தக் லைஃப் படத்தில் அவர் நடித்துள்ள ரங்கராஜ சக்திவேல் நாயக்கர் கதாபாத்திரம் குறித்து அக்கதாபாத்திரம் நல்லவரா கெட்டவரா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், “படம் பார்த்தா தான் அது தெரியும்.
நான் மீண்டும் மணிரத்னத்தை மீட் பண்ண வேண்டாமா. அவர் என்னிடம், என்ன சார் இங்கு நான் கஷ்டப்பட்டு எடிட் பண்ணிக்கிட்டு இருக்கேன், நீங்க எடிட்டிங்கே இல்லாம அங்க மொத்த கதையும் சொல்லிட்டீங்கன்னு கேட்டா நான் என்ன சொல்றது. இந்த படம் பார்த்தாலும் நல்லவரா கெட்டவரா என்பதற்கு பதில் கிடைக்காது. அக்கதாபாத்திரம் நல்லதும் கெட்டதும் சேர்ந்ததுதான். கணக்குக்கு எது முக்கியம். ப்ளஸா, மைனஸானு கேட்டா என்ன பண்றது. அதுமாதிரி தான் இதுவும்” என்றார்.
நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி வைத்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.