சினிமா என்றொரு பிம்பம் பல கலைகளால் ஆவது. எழுத்து, ஒளிப்பதிவு, இசை, இயக்கம், கலை என பல வேலைகளை கொண்டுதான் ஒரு திரைப்படம் உருவாகிறது. இப்பொழுது உலகம் முழுவதும் உள்ள அத்தனை மொழி திரைப்படங்களையும் எளிய முறையில் காண முடிகிறது. அப்படி பார்த்த பல படைப்புகளில் முக்கியமாக 3 விஷயங்கள் மிக அருமையாக உள்ளது. அது ஒளிப்பதிவு (CINEMATOGRAPHY), இசை(MUSIC), ஒலிப்பதிவு (SOUND EFFECTS & SOUND DESIGN). நம் தமிழ் சினிமாவிலும் இம்மூன்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பல இயக்குனர்கள் உள்ளனர். அதில் சமீப காலமாக தனது படங்களில் உள்ள காட்சியை மிக நுணுக்கமாக இம்மூன்று கலைகளையும் வைத்து கூறக்கூடிய ஒரு இயக்குனர் 'காக்கா முட்டை' மணிகண்டன் என்று அறியப்படும் M.மணிகண்டன். இவரது படங்கள் காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை.
மணிகண்டன் அவரது திரைப்படங்களுக்கு அவரே ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஆண்டவன் கட்டளை படத்திற்கு ஷண்முகசுந்தரம் பணியாற்றியிருப்பினும், தன்னுடைய படங்களில் ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் எப்படி இருக்க வேண்டும் என்பதை மணிகண்டன் படத்தை எழுதும் இடத்திலேயே முடிவு செய்பவர், இதை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். ஒளிப்பதிவு எனப்படுவது ஒரு காட்சியை அப்படியே படம் பிடிப்பதன்று. ஒரு காதலர்கள் காதலை கூறும் காட்சி என்றால்....அது அதிகாலையில், காலையில், மதியம், மாலை, இரவு, நடு இரவு என எப்படி வேண்டுமானாலும் காட்சி படுத்தலாம். ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு உணர்வை கொடுக்கும். இப்படி பொழுதிலிருந்து ஒரு காலம் வரை ஒரு ஒளிப்பதிவாளர் ஈடுபட்டால் அங்கு ஒரு மிகச் சிறந்த காட்சியமைப்பு உருவாக்கப்படுகிறது. அப்படியான ஒரு இயக்குனரே மணிகண்டன்.
காக்கா முட்டை
காக்கா முட்டை படத்தை அவரே ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். அது மிகவும் கடினமான ஒன்று அதே சமயம் வசதியான ஒன்று. தனக்கான காட்சிகளை தன் மூளையில் இருக்கும்படியே எடுத்துவிட இயலும். காக்க முட்டையில் முக்கிய கதாபாத்திரங்கள் அந்த இரு சிறுவர்கள், அவர்களை சுற்றியே கதை. அதை மக்களுக்கு மிக சிறப்பான முறையில் கனெக்ட் செய்துகொள்ள உதவியது ஒளிப்பதிவே. அந்த சிறுவர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அவர்களை பின்தொடர்ந்தே கேமரா செல்லும். இதை சினிமா மொழியில் சப்ஜெக்ட்டிவ்(Subjective) என கூறுவார்கள்.
அந்த சிறுவர்கள் உடன் நாமும் பயணிப்போம். அவர்கள் கண் பார்வையிலேயே நாம் பல விஷயங்களை பார்ப்போம். உதாரணமாக அவர்கள் சென்னை சிட்டி சென்டருக்கு செல்வார்கள். அவர்கள் அதைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு அது பெரிய இடமாக தெரியும். அதை மக்களிடமும் அதே முறையில் காண்பித்திருப்பார் மணிகண்டன். அப்படி பார்க்கும் பொழுது நாம் அந்த சிறுவர்களுடன் இன்னும் சுலபமாக கனெக்ட் செய்துகொள்கிறோம்.
இப்படியாக இந்தப் படத்தில் பல காட்சிகள் இந்த சப்ஜெக்ட்டிவ் முறையிலே செல்ல ஒரு இடத்தில் அது உடைகிறது. அந்த சிறுவர்கள் ஆப்ஜெக்ட்டிவ்(Objective) ஆக மாறுகிறார்கள். அந்த சிறுவர்கள் பீட்ஸா (Pizza) சாப்பிட செல்லும் பொது அந்த கடையின் மேனேஜர் ஒரு சிறுவனை அடிக்க அதை வேறு ஒரு சிறுவன் படம் பிடிப்பான். அந்த இடத்திலிருந்து கதையில் அந்த சிறுவர்கள் ஆப்ஜெக்ட்டிவ் ஆக மாறிவிடுவார்கள். அதவாது கதை அவர்களை வைத்து நகரும். கேமரா ஒரே இடத்தில இருக்கும். அந்த சிறுவர்களுடன் நகராது. அதற்கேற்றாற்போல் கதையிலும் அந்த சிறுவர்களுக்கு தங்களை வைத்துதான் ஒரு பெரிய விஷயம் நடந்து கொண்டிருக்கிறதென தெரியாதபடி இருக்கும்.
நுட்பமான ஒளிப்பதிவின் மூலம் கதை சொல்லியிருப்பார் மணிகண்டன். அதே போல் மணிகண்டன் சிறப்பாக வரையக்கூடியவர். ஆகையால் நிறங்களைப் பற்றி நன்கு அறிந்துவைத்திருக்கும் ஒரு ஒளிப்பதிவாளர். படம் முழுவதுமே Reddish - Brown நிறங்களே அதிகமாக இருக்கும். அதே போல் இவ்வளவு வறுமை எதிர்மறைகள் இருந்தும் படம் பார்ப்பவர்களுக்கு எந்த ஒரு இடத்திலும் அழுகை வராமால் இருந்ததற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவும் இசையும். மிகவும் சந்தோஷமான பாடல்கள், பின்னணி இசைக்கோர்ப்பு. படத்தின் இறுதியில் வரும் "எதை நினைத்தோம்" என்கிற பாடல் ஒரு முழு படத்தை பார்த்த ஒரு உணர்வை தரும்.
இப்படத்தில் பின்னணி வசனங்களும் ஒலிகளும் மிகவும் துல்லியமாக அதே சமயம் கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக அந்த 2 சிறுவர்களும் ஒரு மரத்தில் ஏறி காக்க முட்டையை எடுத்துக் குடிப்பார்கள். அதில் பின்னணியில் வேறு சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருப்பனர். அவர்களுக்கான வசனங்கள் அங்கு முக்கியமாக இல்லாதபோதும் அவர்கள் எதையோ ஒன்றை பேசிக்கொண்டே தான் விளையாடிக்கொண்டிருப்பார்கள். இப்படியான பின்னணி வசனங்களும் ஒலிகளும் படம் முழுவதிலும் மிகவும் கச்சிதமான முறையில் வடிவமைக்கப்பட்டதும் படத்தை நாம் ஒன்றி பார்ப்பதற்கு காரணமாக இருக்கிறது.
குற்றமே தண்டனை
காக்கா முட்டையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைப்படம் இது. படத்தின் டிரீட்மெண்ட்டில் இருந்து அனைத்தும் மாறுபட்டிருக்கும். அவரது படங்களில் நாம் பேசக் கூடிய இம்மூன்று முக்கியமான அம்சங்களும் மிக அற்புதமாக இருக்கும். இது ஒரு திரில்லர் படம் என்றாலும் இதில் முக்கிய கதாபாத்திரமான ரவி (நடிகர் விதார்த்) மனநிலையை அதிகம் வெளிக்காட்டக் கூடிய ஒரு படம். படம் முழுவதிலும் நாம் மற்ற படங்களை காட்டிலும் இதில் Contrast குறைவாக இருக்கும். நிறங்களை வைத்து மிகவும் அழகாகக் கதை சொல்லியிருப்பார். படம் முழுவதுமே ஒளிக்கற்றையில் நீல நிறத்தை சுற்றியே நிறங்கள் இருக்கும். விதார்த் வீட்டின் நிறம், நடிகர்களின் உடை என அனைத்திலும் நீலம் சுற்றியே இருக்கும்.
ஆனால் அது நம் கண்ணிற்கு உறுத்தாதபடி செய்ததே இப்படத்தின் ஒளிப்பதிவிற்கான வெற்றி. நேச்சுரல் லைட் மூலமே பெரும்பாலான காட்சிகள் படமாக்க பட்டிருக்கும். அந்த நிறம் என்பது வெறும் பார்ப்பவரை மயக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமில்லாமல், அந்த நிறம் அதை சரியான அளவு பயன்படுத்தி இருப்பது நம்மை அந்த ரவி என்கிற கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போக வைக்கிறது. படத்தில் பெரும்பாலும் ரவியின் பார்வையிலே நாமும் நிகழ்வுகளை காண்கிறோம். விதார்த் வாழும் அந்த ஹவுசிங் போர்ட் அவ்வளவு இயல்பாக இருக்கும். அதை வானத்திலிருந்து ஒரு காட்சியாக காண்பித்திருப்பார். அந்த ஒரு காட்சியே இது வழக்கமான படங்களில் இருந்து சற்று விலகி இருக்கும் என காட்டியது.
அதே போல ஒலி. படத்தில் நிறைய இடங்களில் அமைதி நிலவும். அமைதியை இசையாகப் பார்க்கும் இசையமைப்பாளர்கள் வெகு குறைவே. அதிலும் என்றும் ராஜாவாக இருப்பவர்தான் இளையராஜா. ஒரு அழுகையோ, சிரிப்போ எந்த ஒரு காட்சியானாலும் அந்த எமோஷன் உடன் இசையை கோர்த்து, நாம் பார்க்கும் மக்களை கனெக்ட் செய்து விட வேண்டும் என்றே பெரும்பாலான படங்களில் நிகழும். ஆனால் இப்படத்தில் இளையராஜா கொஞ்சம் பொறுமையாக மௌனம் என்கிற ஆயுதத்தை எடுத்து இன்னும் அதிகமாக எமோஷன்களை மக்கள் மனதில் பதியவைக்கிறார். எங்குமே பெரிய இசையோ, விறுவிறுப்பு கூட்டவோ எதையும் செய்யவில்லை. வழக்கமான திரில்லர் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு இசைக்கோர்ப்பு. ராஜா என்றும் ராஜா தான் சந்தேகமில்லை.
அதே போல் படத்தில் இருக்கும் சப்தங்களை நுணுக்கமாக பார்த்தால், விதார்த் சிகரட்டை பற்றவைக்கும் பொழுது வரும் சப்தம், ஐஸ்வர்யா வீட்டு கிளிகள் கத்திக்கொண்டிருக்கும் சப்தம் என இப்படத்தின் சப்தங்கள் இசையுடன் சேர்ந்தே பயணித்து வரும். வழக்கமாக இசை வந்துவிட்டால் பின்னணி சப்தங்கள் முற்றிலும் அடங்கி விடும். அப்படியே நாமும் பார்த்து பழகிவிட்டோம். ஆனால் இப்படி ஒலிகளுக்கான முக்கியத்துவத்தைக் கொடுத்து வரும் படங்களை பார்க்கும் பொழுது, இப்படிப்பட்ட படங்களை இசைக்கோர்ப்பு இல்லாமல் சப்தங்களை மட்டுமே வைத்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்றெண்ணத் தூண்டுகிறது
ஆண்டவன் கட்டளை
காக்கா முட்டையைப் போல் குடும்பத்துடன் பார்க்கப்பட்ட ஒரு மகிழ்ச்சியான திரைப்படம். ஒரு லாஜிக் இல்லாத காமெடி படமாக இல்லாமல் அதில் ஒரு கதையை வைத்து, திரைக்கதை முறையில் Sub-Plots, Inciting Incidents, Middle Point என திரைக்கதையில் மெனக்கடல் அதிகம் செய்து எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் ஷண்முகசுந்தரம். படத்தின் முக்கிய கதாபாத்திரம் காந்தி. அவரைச் சுற்றி நடக்கும் நாடகமே ஆண்டவன் கட்டளை. ஆம், ஆண்டவன் கட்டளை ஒரு மேடை நாடகம் பார்ப்பது போன்ற உணர்வையே கொடுக்கும். காக்கா முட்டையில் நாம் அந்த சிறுவர்களுடன் பயணிப்போம். ஆனால் ஆண்டவன் கட்டளையில் நாம் மூன்றாவது மனிதராக உட்கார்ந்து ஒரு நாடகத்தை பார்ப்போம். அப்படியான வகையில்தான் இந்தப் படத்தின் காட்சிகளும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் அதிகமாக Close up ஷாட்களே கிடையாது. படத்தில் வந்து போகும் அனைத்து கதாபாத்திரங்களும் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் வகையில் அத்தனை பேருக்கும் Close Up என போகாமல் அழகாக கம்போஸ் செய்து ஒரு மிட் லாங் ஷாட்டிலேயே காட்சிகளை விவரித்திருப்பார்.
அந்த ஒளிப்பதிவே நம்மை ஒரு நாடகம் பார்க்கும் உணர்வை கொடுக்கும். கவனிக்கவும் இதில் நாடகம் என்று கூறப்படுவது படத்தின் கதை அல்ல, கதையை கூறியிருக்கும் விதமே. இதில் அதிகமாக மஞ்சள் நிறத்தைக் காணலாம். படம் முழுவதுமே மஞ்சள் பிரதானமாகத் தோன்றும். அதுவே இப்படத்தின் டோன். அதே போல் உற்று கவனித்தால் கேமராவில் ஒரு சின்ன அசைவு இருந்து கொண்டே இருக்கும். காரணம் அதுவே ஒரு உயிரோட்டமான உணர்வைக் கொடுக்கும். அந்த சின்ன கேமரா அசைவுகூட கதையை எதார்த்தமாகக் காட்ட உதவியிருக்கும்.
இப்படத்தின் ஒலி என்று முக்கியமாக கூறப்படுவது இசை. இசையமைப்பாளர் கே. முதலில் வரும் "யாரோ பெத்த பிள்ளை" தவிர்த்து வேற எதுவும் முழு நீல பாட்டு இல்லை. இதில் பாடல்கள் அனைத்தும் பார்க்கும் மக்களுக்கு சற்று கதை கவனிப்பதில் ஒரு சிறிய இளைப்பாற்றல் போலவே வரும். ஆனால் பாடல்களின் காட்சிகள் அனைத்தும் கதையுடன் ஒன்றியிருக்கும். வீடு தேடும் காட்சி ஒன்று ஆரம்பத்தில் வரும். அவர்கள் வீடு தேடும் போது பின்னணியில் ஒரு பாடல் ஓடும். ஆனால் நமக்கு அந்தப் பாடலை விட காட்சிகள் மீதே கவனம் அதிகமாக இருக்கும். இசைக்கோர்ப்பை தவிர்த்து அங்கு ஒரு பாடலை குறிப்பிட்ட அளவிற்கு ஏற்றார் போல் வைத்ததே பல இடங்களில் நமக்கு சிரிப்பை வரவழைத்தது. ஆக ஆண்டவன் கட்டளை வழக்கமான வெகுஜன சினிமாவில் இருந்து மாறுபட்ட ஒரு சிறந்த வெகுஜன படமே.
மணிகண்டன் ஒரு சிறந்த படைப்பாளி. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு வகையாகக் கொடுத்தவர். தன்னுடைய தேவைக்கேற்ப மட்டும் இல்லாமல் படத்தின் தேவையை மிக தெளிவாக அறிந்து செயல்பட கூடிய ஒரு இயக்குனர். அவரின் அடுத்த படமான 'கடைசி விவசாயி'யும் அப்படி ஒரு படைப்பாக இருக்குமென நிச்சயமாக நம்புவோம்.