![hrhrdh](http://image.nakkheeran.in/cdn/farfuture/RhCJ8KviYTVKMw9EXijFXv_CmlyBYH12Cxp9xh1y_2M/1603356474/sites/default/files/inline-images/8f695211-c498-4195-8dde-d8607f7f0e46.jpg)
குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படைப்புகளை, ரசிக்கும் வண்ணம் கொடுக்கும், 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி ஒரு புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளார். அவரது மகன் ஜீவா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, பிரபல இயக்குநர் சசியின் உதவியாளர் சந்தோஷ் ராஜன் இயக்குகிறார். தற்போதைக்கு இப்படம், 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் “தயாரிப்பு எண் 91” எனக் குறிப்பிடப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குழு கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் நேற்று தொடங்கியது. இப்படம் குறித்து இயக்குநர் சந்தோஷ் ராஜன் பேசும்போது...
தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவராகத் திகழும் ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன், இயக்குநராக எனது திரைப்பயணம் துவங்குவது, மிகப்பெரும் மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது. பல பெரும் கலைஞர்களுக்கும், இயக்குநர்களுக்கும் திரையுலகில் திறவுகோலாக, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மூலம் வாய்ப்பளித்து, உருவாக்கிய பெருமை கொண்டவர் ஆர்.பி.சௌத்ரி.
அப்படியான நிறுவனத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் ஆசிர்வாதம். இத்தருணம் உற்சாகத்தையும், சுற்றிலும் நிறைய நேர்மறை எண்ணங்களையும் என்னுள் விதைத்திருக்கிறது. வழக்கமாக ரசிகர்கள், நடிகர்களையும், இயக்குநர்களையும் பார்த்து, அவர்களைப் பின்பற்றி படம் பார்த்து வந்த முறையை, தகர்த்தெறிந்தது 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' நிறுவனம். ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, தரமான குடும்பப் படங்களை, ரசிகர்கள் 100 சதவீதம் கொண்டாடும் வகையில் தொடர்ந்து தந்து வந்திருக்கிறது. எதிர்பார்ப்புகளைக் கூட்டுவது மட்டுமல்லாமல், அந்த எதிர்பார்ப்பை தவறாது பல தசாப்தங்களாக நிறைவேற்றி வந்திருக்கிறது. அதனால் தான், தென்னக சினிமாவின் முடிசூடா மன்னாக திகழ்கிறது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம்.
இது எனக்கு இரட்டை சந்தோஷ தருணம். ஜீவா அவர்கள் தமிழ் சினிமாவின் அரிய திறமைகளுல் ஒருவர். அவர் மிக ஆழமான படைப்புகளில் திறமையான நடிப்பை தந்தும், கமர்ஷியல் படங்களில் எளிதாக ரசிகர்களைக் கவர்ந்தும் சாதனை படைத்தவர். 'மாஸ்' மற்றும் 'க்ளாஸ்' எனும் இரண்டு திறமையும் கொண்டவர் அவர். இயக்குநர் சசி அவர்களின் “டிஷ்யூம்” படத்தில் உதவியாளராகப் பணிபுரிந்தபோது, படப்பிடிப்பில் நடிகர் ஜீவாவின் நடிப்பு திறமையைக் கண்டு வியந்திருக்கிறேன். அப்படத்தில் அவருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
![cnc](http://image.nakkheeran.in/cdn/farfuture/PL81U2OEyWi4fIc51p2Q-EYuanv6bRyAM1xzG7KYrSQ/1603347336/sites/default/files/inline-images/01%20%281%29_0.png)
இயல்பிலேயே மிகவும் எளிமையான, கலகலப்பான மனிதர். சுற்றியுள்ளவர்களைத் தன் கலகலப்பான குணத்தால் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். எனது கதையையும் அப்படியானதொரு கதாப்பாத்திரத்தைக் கொண்டிருப்பதால் அவரை அணுகினேன். தற்போது தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக வளர்ந்து, இந்திய அளவிலான முக்கிய நடிகராக மாறிவிட்ட போதிலும், அவர் அதே எளிமையுடனே தான் பழகுகிறார். இதுதான் எந்த ஒரு இயக்குநரும், அவருடன் பணிபுரிய விரும்பும் குணமாக இருக்கிறது. இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு, எனக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் ஆசிர்வாதம். மேலும், இப்படம் தரப்போகும் மிகச்சிறந்த அனுபவங்களுக்காக காத்திருக்கிறேன்.
காஷ்மீரா பர்தேஷி மற்றும் ப்ரயாகா நாக்ரா இப்படத்தின் நாயகிகளாக நடிக்கிறார்கள் அவர்களோடு வி.டி.வி கணேஷ், சித்திக், ஷா ரா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளார்கள்.