ஹாலிவுட் திரையுலகில் கடந்த மே மாதம் முதல் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில், சம்பளம் குறைவு, ஏஐ பிரச்சனை காரணமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெப் தொடர்கள் அதிகரித்து வருவதால் தங்களின் பணியும் அதிகரித்துள்ளதால் அதற்கேற்ப அதிக ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மையாக முன்வைக்கின்றனர். மேலும் ஏஐ வந்தால் பிற்காலத்தில் தங்களின் பணிக்கு ஆபத்தாக முடியும் என ஏஐக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்குப் பல்வேறு அமைப்புகள் ஆதரவு அளித்து வரும் நிலையில், அண்மையில் ஹாலிவுட் நடிகர்கள் கூட்டமைப்பு ஆதரவு அளித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு இரு சங்கங்களும் இணைந்து போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 13 ஆம் தேதி கிறிஸ்டஃபர் நோலனின் 'ஒப்பன்ஹெய்மெர்’ படத்தின் சிறப்புக் காட்சி லண்டனில் திரையிடத் திட்டமிடப்பட்டது. அதற்காக வருகை தந்த படக்குழுவினர், போராட்டம் குறித்து அறிந்தவுடன் விழாவைப் புறக்கணித்து எழுத்தாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தந்தனர். இந்த தொடர் போராட்டத்தால் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடரின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஹாலிவுட் திரையுலகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போராட்டத்துக்கு நடிகை பிரியங்கா சோப்ரா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.