கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி, மீசைய முறுக்கு படம் மூலம் ஹீரோவாக மாறினார். அப்படத்தை இயக்கியதோடு இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருந்தார். இவரது நடிப்பில் கடைசியாக பி.டி.சார் படம் வெளியானது. இதையடுத்து ‘கடைசி உலகப் போர்’ என்ற தலைப்பில் நடித்து இயக்கியும் உள்ளார். இப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனிடையே 'ரிட்டர்ன் ஆப் தி டிராகன்' என்ற பெயரில் இசைக் கச்சேரியை நடத்தி வருகிறார் ஹிப்ஹாப் ஆதி. லண்டன், மலேசியா போன்ற வெளிநாடுகளைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான கோயம்புத்தூரில் நேற்று இந்த இசை கச்சேரியை நடத்தியுள்ளார். கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற இந்த இசைநிகழ்ச்சியில் ஹிப்ஹாப் ஆதி பாடிக் கொண்டிருந்த போது, இரு தரப்பு இளைஞர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அடிதடியில் ஈடுபட்ட இளைஞர்களை அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அந்த இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஏ.ஆர் ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியின் போது, சரியான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் பெரும் குளறுபடி நடந்து பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.