ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் 2023ஆம் ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் 95வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக குஜராத்தி படம் 'செல்லோ ஷோ' தேர்வானதால் தனிப்பட்ட முயற்சியில் 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு விண்ணப்பித்துள்ளனர் ஆர்.ஆர்.ஆர் படக்குழு. இதன் காரணமாகத் தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஜமௌலி.
இதனிடையே, திரைத்துறையில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருது அமெரிக்காவில் நடைபெற இருந்தது. இந்த விருதுக்காக இறுதியாகப் பரிந்துரை செய்யப்பட்டதில் 5 இடங்களைப் பிடித்த படங்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. அதில் ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவில் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படமும் சிறந்த பாடல் பிரிவில் அப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு’ பாடலும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போது தேர்வில் வெற்றி பெற்று கோல்டன் குளோப் விருது ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர் கீரவாணிக்கு கிடைத்திருக்கிறது. அதை அவர் விழா மேடைக்குச் சென்று பெற்றுக்கொண்டார். இதற்கு ராஜமெளலி வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பதிவில் “பேச்சற்றிருக்கிறேன், இசைக்கு உண்மையில் எல்லைகள் தெரியாது. எனக்கு நாட்டு நாட்டு பாடல் கொடுத்ததற்கு வாழ்த்துகள் & நன்றி பெத்தண்ணா. உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு ரசிகரும் தங்கள் காலை அசைத்து அதைப் பிரபலமாக்கியதற்காக நான் நன்றி கூறுகிறேன்”. எனப் பதிவிட்டிருந்தார். மேலும், இசையமைப்பாளர் ரஹ்மான் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்