Skip to main content

"எங்க கஷ்டம் தெரிஞ்ச நண்பன் பாலு..." - இளையராஜா, எஸ்.பி.பி, கங்கை அமரன் கச்சேரி அனுபவம்!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020
spb ilayaraja

 

 

நம் மனதில் நீங்காத இடம் பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமனியத்தின் நெடுநாள் நண்பரான கங்கை அமரன், தனது ‘பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’ நூலில் பகிர்ந்த எஸ்.பி.பி குறித்த நினைவுகளில் ஒரு பகுதி...

 

தன்னோட குழுவுல ஹார்மோனியம் வாசிக்கிற அனிருத்ராவ் வரமுடியாத சமயங்கள்ல... ராஜாண்ணனை கூப்பிட்டுக்குவார் எஸ்.பி.பி. அனிருத்ராவ் ஹார்மோனியம் வாசிக்கிறதைவிட, ராஜா ஹார்மோனியம் வாசிக்கிறது எஸ்.பி.பி.க்கு மாறுதலா இருந்தது. அதனால் ஒரு கட்டத்துல ராஜாவையே தன் கச்சேரிகளுக்கு வாசிக்க வச்சார். ராஜா ஹார்மோனியம், நான் கிடார், பாஸ்கரண்ணன் தபேலா -ஹாங்கோ டிரம்ஸ், ராதாகிருஷ்ணன் புளூட், பல்லவராவ் கிளாரிநெட், ஜோஸப் மேண்டலின், மது தபேலா... இப்படி எல்லாரும் சேர்ந்து "பாவலர் பிரதர்ஸ்'ங்கிற பேர்ல தனியாவும், எஸ்.பி.பி.யோட ட்ரூப்லயும் சேர்ந்து கச்சேரியில கலக்கிட்டிருந்தோம்.

 

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தோட சேர்ந்து நாங்க கச்சேரி பண்ணிக்கிட்டிருந்த சமயத்துல நடந்த ஒரு சம்பவம்... ஆந்திராவுல ஒரு சின்ன கிராமம். கலவர பூமிம்பாங்களே... அப்படியான கிராமமாம் அது. அந்த ஊர்ல ரெண்டு குரூப். அதுல ஒரு குரூப், பாலுவோட கச்சேரிய புக் பண்ணீருச்சு. நாங்களும் அந்தக் கிராமத்துக்குப் போயிட்டோம். கச்சேரி ஆரம்பிக்கப்போற நேரத்துல... திடீர்னு ரெண்டு கோஷ்டியும் அடிச்சுக்கிறாங்க. கொல விழுந்துபோச்சு. ஜனங்க பிச்சுக்கிட்டு ஓடுறாங்க. ஓடுறவங்கள... தொரத்தித் தொரத்தி வெட்றாங்க. பதட்டத்துல என்ன பண்றதுன்னே புரிபடல. பாலு எப்படியோ... தெலுங்குல பேசி... ஒரு வீட்டுக்குள்ள புகுந்துட்டாப்ல. ராஜாண்ணனும், பாஸ்கரண்ணனும் ஓட... அவங்க கையப் புடிச்சுக்கிட்டு வாத்தியங்கள தூக்கிக்கிட்டு ஓடுறோம். புளூட் வாசிக்கிற ராதாகிருஷ்ணனும் எங்ககூட ஓடி வர்றார்.

 

பின்னாடியே ஒரு கும்பல் தொரத்திக்கிட்டு வருது... உசுரக் காப்பாத்த ஓடிக்கிட்டிருக்கும்போது ஒரு கோயில் தெரிஞ்சது. "கோயிலுக்குள்ள போயிட்டா பிரச்சினை வராது'னு உள்ள போயிட்டோம். கோயிலுக்குள்ள நாதஸ்வர கோஷ்டி வாசிச்சுக்கிட்டிருந்தாங்க. நாங்களும் அவங்ககூட ஒக்காந்து... வாசிக்கிற மாதிரியே ரியாக்ட் பண்ணினோம். ஒருவழியா கலவரத்தோட தீவிரம் குறைய ஆரம்பிச்சதும்... அடுச்சுப்பிடிச்சு... பதட்டத்தோட... ஆனா பத்திரமா சென்னை வந்து சேர்ந்தோம். கிடார் வாசிக்கிறதோட, பாலுவோட கச்சேரிக்கு இன்சார்ஜாவும் வேல பார்த்துக்கிட்டிருந்தேன். குழுவுல இருக்க ஒவ்வொரு மியூஸிஸியனோட வீட்டுக்கும் போய்... ‘"இன்ன தேதியில... இன்ன ஊர்ல, இன்ன இடத்துல கச்சேரி... இத்தன மணிக்கு வந்துடணும்'னு தகவல் சொல்றதுதான் இன்ஜார்ஜோட வேல. ஆந்திரா, கர்நாடகானு பல இடங்களுக்கு கச்சேரி பண்ண ரயில்லதான் போவோம். டிக்கெட் முன்கூட்டியே ரிஸர்வ் பண்ணி போகமாட்டோம். அன்ரிசர்வ்டு கோச்லதான் போவோம். எம்புட்டு சிரமம்னு பார்த்துக்கங்க.

 

இந்த மாதிரி ரயில்ல போகும்போது... ஒவ்வொருத்தருக்கும் சாப்பாட்டு காசுனு 25 ரூபா குடுப்பாப்ல பாலு. சம்பளம்... 75 ரூபாயிலருந்து 100 ரூபா வரைக்கும் கிடைக்கும். நான், ராஜாண்ணன், பாஸ்கரண்ணன்... மூணுபேரும் எங்களுக்கு தரப்படுற சாப்பாட்டுக் காச... சாப்பாட்டுக்கு செலவழிக்காம பத்திரமா வச்சுக்குவோம். கச்சேரிக்கு ஏற்பாடு செஞ்சவங்க நல்லா விருந்து சாப்பாடு குடுப்பாங்களே. அதனால பட்டினியாவே போவோம். "சாப்பாட்டுக்கு குடுத்த பணத்த செலவழிக்காமலேயே வர்றீங்களேடா... கஞ்சப்பிசுநாரிப்  பசங்களா...'னு பாலு கிண்டல் பண்ணுவான். ஒரு தடவ பெங்களூருல கச்சேரி முடிஞ்சது. பாலுவோட கார்ல நானும், புளூட் ராதாகிருஷ்ணனும் ஏறி சென்னைக்கி வந்துக்கிட்டிருக்கோம். ராணிப்பேட்டை வந்தப்போ... கார் ரிப்பேர் ஆகிப்போச்சு. பாலு அப்ப பெரிய பாடகர். ஆனாலும் இப்ப மாதிரி டி.வி. மீடியா இல்ல. அதனால பாலுவோட முகம் மக்களுக்குத் தெரியல. கைல இருந்த கொஞ்ச காச போட்டு, கடன் சொல்லி கார் ரிப்பேரை சரிபண்ணிக்கிட்டு... பட்டினியாவே சென்னை வந்து சேர்ந்தோம். பாலு சினிமாவுல பெரிய பாடகனா இருந்தும்கூட கைல காசில்லாம கஷ்டப்பட்டத சொல்றதுக்காகத்தான் இந்த சம்பவத்தச் சொல்றேன். எங்க கஷ்டம் தெரிஞ்ச நண்பன் பாலு. "பாவலர் பிரதர்ஸ்'ங்கிற பேர்ல பாலுகூட சேர்ந்து கச்சேரி பண்ணினோம்கிற அடையாளத்த குடுத்த பாலுவுக்கு நன்றி.

 

இன்னும் பல நினைவுகள், சுவாரசியங்கள்... கிண்டிலில் படித்து மகிழ க்ளிக் செய்யுங்கள்...

பண்ணைப்புரம்

 

சார்ந்த செய்திகள்