இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதைக்கு எதிராக போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா கடந்த 12ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
பல்வேறு நபர்களிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து வாங்கி வரும் நிலையில், திரைப்பிரபலங்களும் இதில் கையெழுத்திட்டு தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டனர்.
இந்த நிலையில், ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கையெழுத்திட்டுள்ளார். பல்வேறு ரசிகர்கள் ரஜினிகாந்த்தை பின்பற்றி வரும் சூழலில் போதைக்கு எதிராக ரஜினிகாந்த் ஆதரவளித்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஜினிகாந்த் தன் திரை வாழ்வின் ஆரம்பக் காலகட்டத்தில் போதைப்பொருட்களில் ஒன்றான சிகெரெட் பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். ஸ்டைலாக சிகெரெட் பிடித்த காரணத்தினால் தான் தனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது என்று பல பேட்டிகளில் சொல்லியுள்ளார். இந்த சிகெரெட் பழக்கத்தினால் பல்வேறு வகையிலும் அவதிப்பட்டார். இதனால் சிகரெட் பழக்கம் இருந்தால் அதை கைவிட்டுவிடுங்கள் என ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். சமீபத்தில் கூட சிகெரெட் பழக்கம் குறித்து ஒரு நிகழ்ச்சியில் வருத்தத்துடன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.