95வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்று முடிந்த நிலையில் அதில் விருது பெற்றவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட பொம்மன், பெள்ளி ஆகிய இரு பழங்குடிகளைப் பற்றிய கதை இது. இதை குனீத் மோங்கா என்பவர் தயாரிக்க கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கியிருந்தார். ஆஸ்கர் வாங்கிய பிறகு படத்தை பலரும் பார்த்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது பொம்மன், பெள்ளி ஆகிய இருவரையும் நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார். இருவரும் முதல்வரைச் சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றனர். முதல்வர் இருவருக்கும் சால்வை அணிந்து கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
இதனிடையே இந்தப் படத்தை பார்த்த நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆஸ்கர் விருதுக்குப் பிறகு குழந்தைகளுடன் தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ் பார்த்தேன். நான் ஒரு குழந்தையைப் போல மகிழ்ச்சியடைந்தேன். இயற்கையையும் வனவிலங்குகளையும் பாதுகாத்து பராமரிக்கும் அனைவரையும் பற்றியே மனம் நினைக்கிறது" எனக் குறிப்பிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.