மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வழக்குகளில் சிக்கி கொள்வது வழக்கம். அந்த வகையில் தமிழக முதல்வரை அவதூறாக திட்டி ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள வழக்கில் தற்போது சிக்கியுள்ளர். பேய காணோம் படத்தில் நடித்து வரும் மீரா மிதுன் சமூக வலைதளத்தில் படத்தின் தயாரிப்பாளர் சுருளிவேல், படத்தின் இயக்குநர் மற்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை அவதூறாக திட்டி ஆடியோ வெளியிட்டதாக தயாரிப்பாளர் சுருளிவேல் நடிகை மீரா மிதுன் மீது புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகை மீரா மிதுன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் அதில் சம்பந்தப்பட்ட ஆடியோ பதிவு வெளியான நாளில் நான் வேறு நிகழ்ச்சியில் இருந்ததாகவும், தன் மீது பொய் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் மீரா மிதுன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, இதேபோல ஒவ்வொருவர் மீதும் அவதூறு பரப்புவதையும், உண்மைக்கு புறம்பான கருத்துக்களையும் பதிவிடுவதே மீரா மிதுனுக்கு வாடிக்கை என்றும், தற்போது முதல்வர் குறித்தும் அவதூறு பரப்பிய உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் முன் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் கூறப்பட்டது.
இதையடுத்து முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டார். அத்துடன் சம்பந்தப்பட்ட ஆடியோ பதிவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டுள்ளார்.