இந்தியா சார்பில் நிலவை ஆராய சந்திரயான் - 3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோவின் தற்போதைய திட்டப்படி இன்று (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்திருக்கிறது.
இதனால் பெரும் ஆவலோடு சந்திரயான் - 3 தரையிறங்குவதைப் பார்க்க மக்கள் காத்திருக்கும் சூழலில் நடிகர் பிரகாஷ் ராஜ், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் "விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் தற்போது வந்துள்ளது" எனக் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில், நபர் ஒருவர் டீ ஆற்றுவது போன்ற கார்ட்டூன் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
இந்த பதிவு சந்திரயான்-3 மிஷனை கிண்டல் செய்யும் வகையில் பிரகாஷ் ராஜ் பகிர்ந்துள்ளதாக சர்ச்சை கிளம்பியது. மேலும் பிரகாஷ் ராஜுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வந்தனர். பின்பு இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்த பிரகாஷ் ராஜ், "வெறுப்பு வெறுப்பை தான் பார்க்கும். நான் ஆம்ஸ்ட்ராங் காலத்து நகைச்சுவையைக் குறிப்பிட்டேன். கேரளாவைச் சேர்ந்த நமது தேநீர்க் கடைக்காரர்களைக் கொண்டாடுகிறேன். என்னை நகைப்பவர்கள் எந்த தேநீர்க்காரரைப் பார்த்தார்கள். உங்களுக்கு நகைச்சுவை புரியவில்லையென்றால், நகைச்சுவை உங்களிடம் தான் உள்ளது. வளருங்கள்" என எக்ஸில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து இந்த பதிவு தொடர்பாக பிரகாஷ் ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்பின் தலைவர்களில் ஒருவர் கர்நாடக பாகல்கோட் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.