1990 மற்றும் 2000களில் வில்லனாக பிரபலமடைந்த மன்சூர் அலிகான், அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் விஜய், த்ரிஷா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 19 ஆம் தேதி வெளியான லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.
இதனிடையே பல எதிர்ப்புக்கு மத்தியில், மன்சூர் அலிகான் விளக்கமளித்தார். அதில், “நான் எப்பொழுதும் என்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகின்றனர்” எனக் கூறியிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், “நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாகப் பேசவில்லை. உண்மையில் நான் அவரைப் பாராட்டித்தான் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். நடிகர் சங்கம் இவ்விவகாரத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. ஒரு விஷயம் சர்ச்சையானால் அதுபற்றி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எந்த விளக்கமும் கேட்கவில்லை. என் மீது தவறாக நடவடிக்கை எடுத்துள்ளனர். 4 மணி நேரத்துக்குள் அவர்கள் இந்த நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை.” என்றார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகானுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சினிமா துறையில் சக கலைஞர்களை மதிப்பது மிகவும் அவசியம். பெண்கள் சுயமாக வெளியுலகம் வரவும், சுய உழைப்பில் உயரவும் போராடும் காலம் இது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது. அதுவும் சினிமாவில் பெண்கள் என்றாலே ஒரு இளக்காரப் பார்வை பலரிடம் இருக்கிறது. ஆனால் பொதுவெளியை விட சினிமா இன்று பெண்களுக்கு நன்மதிப்பையும், உயர்ந்த நிலையையும், சமமாக அவர்களை மதிக்கும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இக்காலகட்டங்களில் நம்மைச் சுற்றிப் போராடி வெல்லும் பெண்களுக்கு உறுதுணையாக, தூணாக நின்று வாழ்த்த வேண்டியது நம் அனைவரின் கடமை. சில மேடைகள்...சில பேட்டிகள்...சில நேரங்கள், சில மனிதர்களின் சிந்தனையை...நாவைப் புரட்டிப்போடும். நா கவனமும்...மேடை நாகரிகமும் அனைத்து இடங்களிலும் மிக முக்கியமானது.
மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும். விடும் வார்த்தைகள் மற்றவர்களை வலிக்கச் செய்யுமே என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வரம்பு மீறி நாம் மதிக்கும் ஒரு சக நடிகை பற்றி பேசியிருக்கிறார். இன்றைய திரையுலகை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது. சகக் கலைஞர்களைப் பற்றிப் பேசும்போது பொறுப்புணர்ந்து பேச வேண்டும். அவ்வாறு பொறுப்புணராமல், தடித்த வார்த்தைகளைப் பேசியதற்கு, நமது சங்கம் சார்பில் என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தவிர, பாதிக்கப்பட்டவர் அவர் பேசியது தவறு. எனது நன்நிலையை அவ்வார்த்தைகள் பாதிக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் குரல் எழுப்பியுள்ள நிலையில், தானாக முன்வந்து மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல். மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல் என்று நாங்கள் அனைவரும் கருதுகிறோம்.