Skip to main content

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; அதிமுக புறக்கணிப்பு - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 

Published on 11/01/2025 | Edited on 11/01/2025
Erode East by-election; ADMK Boycott  Official Notice Released 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத் தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று (11.11.2025) நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் 'அராஜகம், வன்முறை என்றாலே திமுக - திமுக என்றாலே அராஜகம், வன்முறை' என்று மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நடந்துகொண்டு வருவதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

திமுக ஆட்சிக் காலங்களில், திமுகவினரால் நிகழ்த்தப்பட்ட அராஜக, வன்முறைச் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை. கடந்த முறை நடைபெற்ற ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி திமுகவின் மிரட்டல் அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது.

வாக்காளர்களைப் பட்டியில் அடைத்த அவலமும் நடந்தேறியது. திமுகவினர் அழைக்கும் இடத்திற்கு வந்து காலை முதல் இரவு வரை உட்கார்ந்து இருக்கவில்லையென்றால், முதியோர் உதவித் தொகையோ, வேறு எந்த அரசு நலத் திட்டங்களோ வழங்கப்படமாட்டாது என்கிற மிரட்டலுக்குப் பயந்து, மக்கள் சொந்த மண்ணில் அகதிகளைப் போல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. இவ்வாறு, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து, மக்களாட்சியின் மகத்துவத்தை மறந்து, வன்முறையில் ஈடுபடுவது மட்டுமே திமுகவினரின் வாடிக்கை.

Erode East by-election; ADMK Boycott  Official Notice Released 

எனவே நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும்; பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, மக்களைச் சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும்; தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 05.02.2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்