அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் விடாமுயற்சி படம் அடுத்த மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது.
சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் ஆர்வம் கொண்ட அஜித், அதிலும் நேரம் கிடைக்கும் போது கவனம் செலுத்தி வருகிறார். 2003ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசிய பிஎம்டபள்யூ சேம்பியன்ஷிப், 2010ல் ஃபார்முலா 2 சேம்பியன்ஷிப் உள்ளிட சில போட்டிகளில் போட்டியிட்டார். இதைத் தொடர்ந்து எந்த கார் ரேசிலும் பங்கேற்காமல் இருந்த அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்கிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி கடந்த சில மாதங்களாக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
24ஹெச் துபாய் 2025, ஐரோப்பியன் 24ஹெச், போர்சே 992 ஜிடி3 கார் ஆகிய பந்தயங்களில் அஜித் மற்றும் அவரது அணி போட்டியிடுகிறது. முதலாவதாக துபாயில் நடைபெறும் 24ஹெச் பந்தயத்தில் அஜித் கலந்து கொள்ள இருந்தார். அதற்காக அண்மையில் பயிற்சி எடுத்த போது அவரது கார் விபத்துக்குள்ளனது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து போட்டியின் போது அவர் கொடுத்த பேட்டியில், நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை நடிக்க போவதில்லை என்றும் சினிமாவுக்கு வந்ததால் கார் ரேஸில் பங்கேற்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து அஜித் இன்னொரு முறை அங்கு பேட்டி கொடுக்கும் போது மைதானத்தில் அமர்திருந்த அஜித் ரசிகர்கள் ஆரவாரம் செய்ய, உடனே அஜித் அவர்களை எனக்கு சொல்லமுடியாத அளவிற்கு புடிக்கும் என சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. துபாய் ரேஸில் இருந்து அஜித்குமார் விலகியிருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் அஜித் பயிற்சி எடுக்கும் போது விபத்து ஏற்பட்டதால் அதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த அறிக்கையில், “அணியின் உரிமையாளர் என்ற முறையில் அணியின் நலனுக்காகவும் அணியின் வெற்றி வாய்ப்பை கணக்கிட்டும் அஜித் கலந்து கொள்ள வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களது அணி போட்டியிரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “அஜித் இன்று ரேஸில் கலந்து கொள்கிறார். அஜித் குமார் ரேசிங் அணியின் உரிமையாளராகக் கலந்து கொள்ளும் அவர், அதே வேளையில், ரசூனில் அணியின் சார்பில் கார் ஓட்டுகிறார்” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அஜித்குமார் ரேசிஸிங் அணி சார்பிலும் இதையே தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ajith sir is racing today. While remaining as the Team Owner for Ajith Kumar Racing, he will be driving for Ajith Kumar Racing by Razoon in a short while.— Suresh Chandra (@SureshChandraa) January 11, 2025