![allu arjun praised singer sid sriram](http://image.nakkheeran.in/cdn/farfuture/Nfgz2bepM125zzzomOXchYkythgmWGi4ElrZ-k1OTpM/1643603396/sites/default/files/inline-images/sri_12.jpg)
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் 'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்தது. குறிப்பாக சித் ஸ்ரீராம் பாடிய ஸ்ரீ வள்ளி பாடல் பெரும் ஹிட்டடித்தது.
இந்நிலையில், பாடகர் சித் ஸ்ரீ ராமை பாராட்டி நடிகர் அல்லு அர்ஜுன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், "எனது சகோதரர் சித் ஸ்ரீராம் ஒரு நிகழ்வில் 'ஸ்ரீவள்ளி' பாடலை மேடையில் பாடத் தொடங்கினார். அவரது குரலுக்குப் பின்னணியில் இசைக்கருவிகள் வாசிக்கப்படும் என்று நான் ஆர்வமுடன் காத்திருந்தேன். ஆனால் அவ்வாறு எதுவும் பின்னணியில் இசைக்கப்படவில்லை, அவர் குரல் மட்டுமே ஒலித்தது. எவ்வித இசைக்கருவிகளும் இல்லாமல் அவர் பாடியதைக் கேட்டு நான் அந்த இசை வெள்ளத்தில் மிதந்தேன். இவர் குரலில் ஏதோ மாயம் உள்ளது என்பது மட்டும் எனக்குள் ஓடிக்கொண்டு இருந்தது. இவருக்கு இசை தேவையில்லை, இவரே ஒரு இசைதான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் ஸ்ரீ வள்ளி பாடலுக்கு டேவிட் வார்னர், ஹ்ரித்திக் பாண்டிய உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல திரைப்பிரபலங்கள் நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.