நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று (13.05.2024) நடைபெற்று வருகிறது.
அதன்படி ஆந்திரா - 25 தொகுதிகளுக்கும், தெலங்கானா - 17 தொகுதிகளுக்கும், பீகார் - 5 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் - 4 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசம் - 8 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா - 11 தொகுதிகளுக்கும், ஒடிசா - 4 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசம் - 13 தொகுதிகளுக்கும், மேற்குவங்கம் - 8 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீர் 1 தொகுதிக்கும் என 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 28 பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் திரைப் பிரபலங்கள் சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், மஞ்சு மனோஜ், நாகச் சைத்தன்யா, ஸ்ரீகாந்த், கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ், இயக்குநர் ராஜமௌலி, மனைவி ரமா ராஜமௌலி, கல்யாண் ராம் உள்ளிட்ட பலர் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். பின்பு செய்தியாளர்களிடம் அனைவரும் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
அல்லு அர்ஜுன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனில்லை. எனக்கு நெருக்கமானவர்களுக்கு கட்சி வேறுபாடின்றி ஆதரவளிப்பேன். ரவீந்திர கிஷோர் ரெட்டி எனது நண்பர் என்பதால் மட்டுமே ஆதரித்தேன்” என்றார். சமீபத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ரவீந்திர கிஷோர் ரெட்டிக்கு அவரது வீட்டில் வாக்கு சேகரித்தார். அதே போல் மற்றொரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அவரது மாமாவும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணுக்கும் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.