திரைத்துறையைத் தாண்டி கார் ரேஸில் ஆர்வமுள்ள அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கார் ரேஸுக்கு திரும்பியுள்ளார். மேலும் அஜித்குமார் ரேஸிங் என்ற புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கியுள்ளார். இந்த அணி துபாயில் நடந்து முடிந்த 24ஹெச் சீரிஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் போட்டியில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்தது.
இதனை அஜித் உற்சாகமாக கொண்டாடினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு அஜித் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். மேலும் ரசிகர்களுக்கு அவர்களது வாழ்க்கையில் கவனம் செலுத்த அறிவுறுத்தி பேட்டி கொடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கலில் நடைபெற்ற தெற்கு ஐரோப்பிய தொடர் ஸ்பிரின்ட் கார் ரேஸிங்கில் அஜித் அணி கலந்து கொண்டது. இந்த தொடரின் முதல் சுற்று நடைபெற்றது. இதில் 4.653 கி.மீ அளவிலான பந்தய தூரத்தை, 1.49.13 லேப் டைமிங்கில் அஜித் அணி நிறைவு செய்துள்ளது. போட்டிக்கு முன் ரேஸ் ட்ராக்கில் அஜித் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் ரசிகர்களை பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்களை காதலிப்பதாக ஆங்கிலத்தில் சொன்ன அஜித், திடீரென தமிழில், “எல்லோரும் ஆரோக்கியமா சந்தோஷமா வாழுங்க” எனப் பேசினார்.
இந்த வீடியோ அஜித் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதுவரை அங்கு அஜித் கொடுத்த பேட்டிகளில் ஆங்கிலத்தில் மட்டுமே பேசிய நிலையில் தற்போது ரேஸ் ட்ராக்கில் இருந்து கொண்டு தமிழில் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக துபாய் ரேஸின் போது பேட்டி அல்லாமல் தனியாக தமிழில் பேசி அஜித் வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
AKs voice from the track. Hear him and it’s motivating.#ajithkumar #AjithKumarRacing #AKRacing #racing #porschesprintchallenge #europe pic.twitter.com/k7n6gmRr66— Ajithkumar Racing (@Akracingoffl) January 19, 2025