பா.ரஞ்சித் மற்றும் அருண் பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பாட்டல் ராதா’. இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகியிருந்தது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் அமீர், வெற்றிமாறன். மிஸ்கின், லிங்குசாமி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்படம் வருகிற ஜனவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நிகழ்வில் பா.ரஞ்சித் கலந்து கொண்டு பேசுகையில், “தமிழ் சினிமாவை மாற்று பாதையில் பயணிக்க வைத்த லிங்குசாமி, அமீர், வெற்றிமாறன், மிஸ்கின் போன்ற இயக்குநர்கள் இங்கு இருப்பது ரொம்ப சந்தோஷம். அவர்களைப் பற்றி பேசிதான் நாங்கள் சினிமாவுக்குள் வந்தோம். காலேஜ் படிக்கும் போது அவர்களின் படங்களை பற்றி நிறைய விவாதிப்போம். பருத்திவீரன், ரன்...” என அவர் முன்பு சொன்ன இயக்குநர்களின் படங்களை ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு வந்தார். அடுத்து வெற்றிமாறன் படத்தை சொல்வதற்கு முன் அமைதியாக யோசித்து கொண்டிருந்த ரஞ்சித்திடம் பொல்லாதவன் என கூட்டத்தில் இருந்து சத்தம் எழுந்தது. பின்பு பேசிய ரஞ்சித், “பொல்லாதவன் படத்தை விட நாங்க அதிகமாக பேசியது ஆடுகளம் பற்றிதான். அந்த படத்தில் இருக்கும் கதாப்பாத்திரம், க்ளைமாக்ஸ் பற்றி நிறைய பேசினோம். அந்த படத்தில் பேட்டக்காரன் சாகவில்லை என்றால் அவன் திருந்திருப்பான் என்று நண்பர்கள் சொன்னாங்க. ஆனால் நான் ஒரு க்ளைமாக்ஸ் சொன்னேன்” என்று பேசிய அவர் பேட்டக்காரன் திருந்திருக்கமாட்டான், அவன் சாகவில்லை என்றால் கருப்பு பேட்டக்காரனை கொன்றிருப்பான் என்று கூறினார்.
தொடர்ந்து மிஸ்கின் படம் குறித்து பேசிய அவர், “ஒநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை பற்றி பேசியிருக்கிறோம். அவரது படங்களில் மனிதம் இருக்கும். குறிப்பாக திருநங்கை கதாபாத்திரத்தை அவர் பயன்படுத்தி பேசவைத்தது என்னை பயங்கரமாக எமோஷனலாக்கியது” என்றார்.