வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியான ‘விடுதலை 2’ திரைப்படம் பலரின் கவனத்தைப் பெற்றது. கம்யூனிஸத்தை மையமாக வைத்து வெளியான இந்த படத்தின் இறுதி காட்சியில், ‘தத்துவம் இல்லாத தலைவர்கள் வெறும் ரசிகர்களை மட்டுமே உருவாக்குவார்கள்; அதனால் தலைவர்களை விடத் தத்துவம்தான் முக்கியம்’ என்று கூறியிருப்பார்கள். இந்த வசனம் தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக கூட மாறியது. இந்த நிலையில் வெற்றிமாறனின் இந்த கருத்தில் இருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சற்று வேறுபடுவதாக தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது இல்லத்தில் நூலக திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “தத்துவத்திற்கு தலைவர் மிகவும் முக்கியம்; அண்மையில் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை பார்த்தேன். அந்த படத்தில் ‘தலைவர் முக்கியமல்ல, தத்துவம் தான் முக்கியம்’ என்று கூறியிருப்பார்கள். ஆனால் எனக்கு அந்த கருத்தில் உடன்பாடு இல்லை. கார்ல் மார்க்ஸ் மிகவும் மோசமான வறுமை நிலையில் இருந்து ‘தாஸ் கேப்பிடல்’ என்ற புத்தகத்தை எழுதினார். அந்த சமயத்தில் அவரின் மூன்று குழந்தைகளுக்கு உணவில்லை, நான்காவது குழந்தைக்குத் தாயின் மார்பில் பால் இல்லாமல் ரத்தம் தான் வந்திருக்கிறது. ஆனால் அப்படியான சூழலிலும் மார்க்ஸ் மக்களை நினைத்து உருகி எழுதி செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்து ஆரம்பித்து ஏங்கல்ஸ், லெனின் என்று பல தலைவர்கள் வந்தார்கள்.
ஆனால் கோர்பசேவ் வரும் போது இந்த தத்துவம் என்னானது? என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ‘தலைவர் முக்கியமல்ல; தத்துவம் தான் முக்கியம்..’ என்று சொல்லும்போது கேட்பதற்கு நன்றாக இருக்கும். மார்க்ஸ் எழுதிய அதே தத்துவம்தான் கோர்பசேவ் உள்ளபோதும் இருந்தது. ஆனால், ஏன் செயல்படாமல் போனது? அதன்பிறகு பிறகு என்ன ஆனது? என்று உங்களுக்கே தெரியும், என்னுடைய பொறுப்பில் இருந்து இதற்குமேல் என்னால் பேசமுடியாது. வேண்டுமென்றால் ஓய்வுபெற்றபிறகு கூறுகிறேன்” என்றார்.