/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/juices.jpg)
தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ள சிறிய நகரம் பாறசாலை. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் 23 வயதான ஷாரோன் ராஜ். பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் சிறைப்பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஷரோனுக்கு அவரது காதலி கிரீஷ்மா குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. அந்த குளிர்பானத்தை குடித்த ஷரோனுக்கு வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார்.
அவரது உடல்நிலை மோசமான காரணத்தினால் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர், ஷாரோனின் தந்தை ஜெயராஜ் பாறசாலை போலீஸில் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அதற்கு காரணம் அவரது காதலிதான் என்றும் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதில், கிரீஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் ஏற்பட்டதால், காதல் உறவை முறித்துக் கொள்ளுமாறு கிரீஷ்மா ஷரோனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் மறுத்ததால், அவரை வீட்டுக்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கிரீஷ்மா கொடுத்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக கேரள நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. கிரீஷ்மா கொலை நோக்கத்துடன் கடத்தல் மற்றும் சாட்சியங்களை அழித்தது போன்ற குற்றங்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. அதே நேரத்தில் அவரது மாமா நிர்மல்குமார் ஆதாரங்களை மறைத்ததற்காக ஐபிசி இன் பிரிவு 201 இன் கீழ் தண்டிக்கப்பட்டார். இருப்பினும், ஆதாரங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவரது தாயார் சிந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து, ஷரோன் ராஜ் கொலை வழக்கில் கிரீஷ்மாவை குற்றவாளி என கடந்த 17ஆம் தேதி கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், கிரீஷ்மா மற்றும் அவரது மாமா நிர்மல்குமாருக்கு இன்று (20-01-25) தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஷரோன் ராஜ் கொலை வழக்கில், காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. கிரீஷ்மாவின் மாமா நிர்மல்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)