புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஜகபர் அலி, திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கணிம வளம் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதனால், அவர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி ஜகபர் அலி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று ஜகபர் அலி மீது மோதி விபத்தானது. இந்த விபத்தில், ஜகபர் அலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், 4 பேரை கைது செய்த போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்படி, குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் சதீஷ், முருகானந்தம், காசி ஆகிய 4 பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், அதே நேரத்தில், இந்த விபத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கோரிக்கை வைத்தார். அதே போல், இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். இது குறித்து அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தி, ‘புதுக்கோட்டை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெபகர் அலி உயிரிழந்த சம்பவத்தில் முதல் கட்டமாக லாரி டிரைவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என்று புரியவில்லை. லாரி ஓட்டிச்சென்ற லாரி டிரைவரை கைது செய்தது வழக்கை திசை திருப்பும் செயலா? முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இவ்வாறு அவதூறு பரப்பலாமா? தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையே டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர்தானே என்று கடந்து போக வேண்டுமா?’ என்று தெரிவித்துள்ளார்.