முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலியின் பயோ-பிக்கை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கவுள்ளதாகக் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. கங்குலி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன், சித்தார்த் மல்ஹோத்ரா அல்லது ரன்பீர் கபூர் யாரேனும் ஒருவர் நடிப்பார்கள் எனச் சொல்லப்பட்டது.
பின்பு ரன்பீர் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் படப்பிடிப்பு கொல்கத்தாவில் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து விளக்கமளித்த ரன்பீர் கபூர், "கங்குலி ஒரு லெஜண்ட். அவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாவது மிகவும் சிறப்பான ஒன்று. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தில் கங்குலி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிக்கவுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாகவும் டிசம்பரில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் கதாபாத்திரத்திற்கான பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து 'ஓ சாத்தி சல்' என்ற தலைப்பில் இந்தியில் ஒரு படம் பண்ணவுள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆனால் அதன் பிறகு அந்த படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இதில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வருகிறது என்பதும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.