எதார்த்தத்தைத் திரையில் பிரதிபலிக்கும் இயக்குநர்கள் மிகச் சிலரே. அவர்களில் மிக முக்கியமான இயக்குநர் சீனு ராமசாமி. மனித வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை அதன் இயல்புகளோடு திரையில் உலவ விடும் சீனு ராமசாமிக்கு தற்போது அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் நடந்த திரைப்பட விழாவில் அளித்திருக்கும் கௌரவத்தின் மூலம் மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. 'மாமனிதன்' படத்திற்காகக் கிடைத்திருக்கும் இன்ஸ்பிரேசன் ப்யூச்சர் பிலிம் விருது அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விருது வழங்கும் விழாவில் பேசிய சீனு ராமசாமி, "இயற்கை என்னை ஆசீர்வதிக்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவிக்க விரும்புகிறேன். நான் இங்கு வருவதற்கு அவர்தான் எனக்கு உதவினார். என்னுடைய தயாரிப்பாளர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை நான் இயக்குநர் சத்யஜித்ரேவுக்கு டெடிகேட் செய்ய விரும்புகிறேன். கடந்த 15 நாட்களாக நான் இங்கு இருக்கிறேன். இது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத தருணம்.