நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூ-ட்யூப் சேனலில் சினிமா டைரீஸ் என்ற நிகழ்ச்சி வாயிலாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் அறியாத பக்கங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், இயக்குநர் மணிவண்ணன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
'சின்ன ராமசாமி பெரிய ராமசாமி' படத்தில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரும் நடித்திருந்தார். அவரது மாமாவாக மணிவண்ணன் நடித்திருப்பார். ஆர்.வி.உதயகுமார் ஒரு பொண்ணைக் காதலிப்பார். மறுநாள் அந்தப்பெண்ணிடம் லவ் லெட்டர் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார். அதற்கு மணிவண்ணன் ஐடியா கொடுப்பது போன்று ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சிக்கான வசனத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் நான், மணிவண்ணன், எங்கள் இயக்குநர் என மூவரும் சேர்ந்து மேம்படுத்திக்கொண்டிருந்தோம். 'ஒன்னுமில்ல... நாளைக்கு காலைல எந்திரி... பல்லு விளக்கிட்டு பாத்ரூம் போய்ட்டு உட்கார்ந்து லெட்டர் எழுது... பிறகு அதை நேரா போய் கொடுத்துரு என மணிவண்ணன் ஒரு வசனத்தை கூறினார். ஆனால், இது சாதாரணமாக இருப்பதுபோல இருந்தது. சார் நான் ஒரு திருத்தம் சொல்லலாமா என மணிவண்ணனிடம் கேட்டேன். அவர் சொல்லுங்கள் என்றார். நீங்கள் கூறிய வசனத்தில் 'முடிஞ்சா குளி' என ஒரு வார்த்தையை சேர்த்துக்கொள்வோமா சார் என்றேன். அந்த வார்த்தை அந்தக் கதாபாத்திரத்தை அப்படியே பிரதிபலிப்பதுபோல இருந்ததால் மணிவண்ணன் சார் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்துவிட்டார். பின்பு, டேக் ஆரம்பித்துவிட்டது. அவரால் 'முடிஞ்சா குளி' என்ற வார்த்தையைச் சொல்ல முடியவில்லை. டேக் நன்றாக போய்கிட்டு இருக்கும். அதைச் சொல்லும்போது பலமாக சிரித்துவிடுவார். மணிவண்ணன் பேசாத நகைச்சுவை வசனமேயில்லை. ஆனால், அவ்வளவு பெரிய மேதை நான் கூறிய வசனத்திற்கு வியந்தது என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.
இந்தியாவின் மிகச்சிறந்த சினிமாக்காரர் யார் என்று பிரபல பத்திரிகை நிறுவனம் 2000ஆம் ஆண்டில் விவாதம் வைத்தது. அதற்கு மணிவண்ணன்தான் நடுவர். நிறைய பேர் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். இறுதியில் எம்.ஜி.ஆரா சத்யஜித் ரேவா என விவாதம் நீண்டு கொண்டிருந்தது. நடுவர் மணிவண்ணன் இந்தியாவின் சிறந்த சினிமாக்காரர் என எம்.ஜி.,ஆரை தேர்வு செய்தார். மணிவண்ணனின் தேர்வு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதன் பிறகு, அவருடன் தனியாகப் பேசிக்கொண்டிருக்கையில் அதற்கான காரணத்தை அவரிடம் கேட்டேன். அதற்கு, "இல்ல தலைவா... ரே பெரிய இயக்குநர்தான் அதில் சந்தேகமில்லை... ஆனால், நம்முடைய நாடு வளரும் நாடு. இங்கு கலைகள் மக்களுக்கு படிப்பினையைக் கொடுக்கும். அரசியல் ரீதியாக எனக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காவிட்டாலும் அவர் நடிகனாக மக்களுக்கு படிப்பினையைக் கொடுத்தவர் என்பதை மறுக்க முடியாது. மக்கள் அறியாமை மிகுந்த இந்த நாட்டில் சிறந்த சினிமாக்காரர் என்றால் எம்.ஜி.ஆர்தான்" என அவர் கூறிய காரணம் சமூக அக்கறை நிறைந்ததாக இருந்தது.