நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூ-ட்யூப் சேனலில் சினிமா டைரீஸ் என்ற நிகழ்ச்சி வாயிலாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் அறியாத பக்கங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், இயக்குநர் மணிவண்ணன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
மறைந்த இயக்குநர் மணிவண்ணனின் நினைவுநாள் சமீபத்தில் வந்தது. அன்றைய தினத்தில் மணிவண்ணன் பற்றி நடிகர் சத்யராஜ் பதிவிட்டிருந்த பதிவு மிகவும் நெகிழ்வாக இருந்தது. மணிவண்ணன் மறக்கமுடியாத மாபெரும் கலைஞன். பொதுவாக ஒரு இயக்குநரிடம் தொழில் கற்றுக்கொள்கிறார்கள் என்றால் அவரது பாணியையே பின்னாட்களில் சிலர் பின்பற்றுவார்கள். ஆனால், மணிவண்ணன் அப்படிப்பட்டவர் அல்ல. அவர் இயக்குநர் இமையம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். அவரிடம் இருந்து சினிமா கற்றுக்கொண்டாலும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு அரசியல், கிராமத்து கதைகள், நையாண்டி, திகில் என எல்லா வகையான படங்களையும் வெற்றிகரமாக எடுத்தவர். அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு கதை எழுதியவர் மணிவண்ணன்தான். அந்தப்படத்திற்கு தமிழக அரசின் விருது அவருக்குக் கிடைத்தது. அந்தப்படம் வெளியான சமயத்தில் அதன் கிளைமேக்ஸ் காட்சி தமிழகத்தையே அதிர வைத்தது. சினிமாவில் சத்யராஜ் பாணி என்று சொல்லப்படுவது இயக்குநர் மணிவண்ணனின் பாணிதான். அவர் இயல்பில் அப்படித்தான் இருப்பார்.
ஒருமுறை படப்பிடிப்பில் இருந்த மணிவண்ணனை ஒரு கும்பல் தொந்தரவு செய்துகொண்டே இருந்துள்ளது. வேறு யாராவது அந்த இடத்தில் இருந்திருந்தால் கோபப்பட்டிருப்பார்கள். ஆனால், அது எதையும் பொருட்படுத்தாமல் அங்கேயே கேமரா இடத்தை மாற்றுவது, ஆட்களை இடம் மாற்றி நிற்கவைப்பது என ஒருநாள் முழுவதும் படப்பிடிப்பு நடத்தியுள்ளார். அந்த அளவிற்கு தொழில்நுட்ப ரீதியாகவும் திறமை வாய்ந்தவர் மணிவண்ணன். கடைசியில் அந்தக் கும்பல் மணிவண்ணனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றதாகக் கூறுவார்கள். அவர் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில்கூட 'லண்டனில் ஒரு சோழர் பரம்பரை தாதா' என்ற மணிவண்ணனின் வசனம் இடம்பெற்றிருந்தது. இந்தத் தலைமுறையிலும் அவரது படைப்புகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது மணிவண்ணன் எவ்வளவு பெரிய படைப்பாளி என்பதைக் காட்டுகிறது.
நான் ஒரு முன்னணி பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் மணிவண்ணனைப் பேட்டி காண்பதற்காக அவரது அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். எங்கள் பத்திரிகையில் வேலை பார்க்கும் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு அவரைத் தெரியுமா என்றார். நான் தெரியும் என்றவுடன் அவரிடம் கேட்டுவிட்டு நான் பேட்டி கொடுக்கிறேன். நீங்கள் நாளைக்கு வாங்க எனக் கூறிவிட்டார். மணிவண்ணனின் அந்தச் செயல் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நான் மறுநாள் செல்லவில்லை. அதன் பிறகு, மணிவண்ணனை ஒரு முறை சந்தித்தபோது 'மறுநாள் வர்றேன்னு சொன்னீங்க... ஆனால், வரல' என்றார். இன்னொருவரிடம் கேட்டுவிட்டு பேட்டி கொடுப்பதாக அவர் சொன்னது எனக்குக் கோபத்தை ஏற்படுத்தியதாக அவரிடம் கூறினேன். வேறு யாரவது இருந்தால் நான் கூறியதைக் கேட்டு கோபமடைந்திருப்பார்கள். ஆனால், மணிவண்ணன் என்னுடைய கோபத்தை ரசித்தார். என்னுடைய சுயமரியாதைக்கு மதிப்பளித்தார். சிலர், நான் ஒரு பத்திரிகை நிருபர் என்று போலியாகக் கூறி அவரிடம் சென்று பேச நினைப்பார்கள். அதனால் அவருக்கு நேர விரயம் ஏற்படும். வந்திருப்பவரிடம் நீங்கள் உண்மையிலேயே பத்திரிகையாளர்தானா என்று கேட்க முடியாதல்லவா. அதனால்தான் அவர் என்னை அன்று அனுப்பிவிட்டு மறுநாள் வரச் சொன்னார். அதற்கான காரணம் எனக்குத் தெரிந்தாலும் அது என்னைக் கோபமூட்டியது. ஆனால், அடுத்த சந்திப்பில் மணிவண்ணன் மிகவும் தன்மையாக நடந்துகொண்டார். அதன் பிறகு அவர் எடுத்த படங்களின் விழாக்களுக்கு அடிக்கடி செல்வேன். எனக்கும் அவருக்குமான உறவு பத்திரிகையாளராகவே நீண்ட நாட்கள் தொடர்ந்தது.
பின்பு, ஆர்.வி.உதயகுமாரிடம் உதவி இயக்குநராக நான் பணிக்குச் சேர்ந்தேன். அந்த சமயத்தில் எங்கள் இயக்குநர் ஒரு படமெடுக்கும் முயற்சியில் இருந்தார். அது கவுண்டமணிக்கும் செந்திலுக்கு இடையே சிறு விரிசல் ஏற்பட்டிருந்த காலம். மணிவண்ணன் அப்போதுதான் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கியிருந்தார். நான் உடனே எங்கள் இயக்குநரிடம் மணிவண்ணன் - செந்தில் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று யோசனை கூறினேன். படக்குழுவில் இருந்த அனைவருக்கும் அது சரியாகப்பட்டதால் மணிவண்ணன் செந்தில் சேர்ந்து அந்தப்படத்தில் நடித்தனர். அப்படி உருவான படம்தான் 'சின்ன ராமசாமி பெரிய ராமசாமி'. படத்தில் இடம்பெற்ற மணிவண்ணன் - செந்தில் கூட்டணி காமெடி காட்சிகளுக்குத் திரையரங்கில் கைத்தட்டல் அள்ளியது.
'சின்ன ராமசாமி பெரிய ராமசாமி' படத்தின் படப்பிடிப்பின் போதே நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றன. படப்பிடிப்பு தளத்தில் வசனங்களை இயக்குநர் மாற்றிக்கொண்டே இருப்பார். ஒவ்வொரு டேக்கிற்கும் இடையே வசனத்தை மாற்றுவார். திடீரென அவருக்குத் தோன்றும் யோசனையை வைத்து வசனத்தை மாற்றுவதால் வசனம் நன்கு மெருகடையும். ஆனால், அதைக் குறிப்பெடுத்துக்கொண்டிருக்கும் எனக்குத்தான் அதை மாற்றி மாற்றி எழுதுவது பெரிய வேலையாக இருக்கும். சில நேரங்களில் எனக்கு எரிச்சலாக இருக்கும். அப்படி நான் எரிச்சலடைந்து வசனத்தை மாற்றி எழுதுவதை மணிவண்ணன் தூரத்திலிருந்து தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்துள்ளார். ஒருநாள், படப்பிடிப்பின்போது என் அருகே வந்து தோளில் கைபோட்ட மணிவண்ணன், இதே கொடுமைதான் தலைவா எங்க டேரக்டர்கிட்டயும். அவர்கிட்ட நான் பட்ட கஷ்டங்களை நீங்களும் அப்படியே படுறீங்க என்றார்.
ஒருநாள் டீக்கடையில் வைத்து ஒரு காட்சி படமாக்க வேண்டியிருந்தது. அந்த டீக்கடையில் சினிமா விளம்பர நோட்டிஸ் ஒட்டினோம். வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரும் தமிழ் சினிமாவில் பெரிய நடிகருமான ஒரு நடிகர் படத்தின் போஸ்டரை ஒட்டியிருந்தோம். அடுத்து வேறோரு காட்சிக்காக வேறு ஒரு நடிகரின் போஸ்டரை ஒட்டினோம். வேறு மாநிலத்தைச் சேர்ந்த அவர் வெளிமாநில படங்களில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அப்போதுதான் எண்ட்ரியாகி இருந்தார். அப்போது என்னை அழைத்த மணிவண்ணன், ஏன்பா நம்ம ஆட்கள் படத்தையெல்லாம் ஒட்டமாட்டிங்களா... ஒருத்தர் வேறு மாநிலத்தில் இருந்து இங்க வந்து நடித்தவர்; இன்னொருத்தர் வேறு மாநிலத்தில் நடித்து இங்கு வந்தவர்; நம்ம ஆட்கள் படமே உங்ககிட்ட இல்லையா என்றார். நான் ஒரு நடிகரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் படத்தை ஒட்டலாமா சார்... அவர் நம்ம ஆளா என்றேன். அருகில் இருந்த இடத்தில் அப்படியே இருவரும் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம். மணிவண்ணன் இன்று மிகப்பெரிய தமிழ்த்தேசியவாதியாக பார்க்கப்படுகிறார். சீமானுக்கு வழிகாட்டியாக இருந்தார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போன்றவர்கள் எல்லாம் அந்த வழியைப் பின்பற்றி வந்தவர்கள்தான். இவர்களுக்கெல்லாம் முன்பே மணிவண்ணன் எவ்வளவு பெரிய தமிழ்த்தேசியவாதி என்பதை உணர்வதற்கான வாய்ப்பு பல வருடங்களுக்கு முன்னரே எனக்கு கிடைத்தது.