![Piraisoodan](http://image.nakkheeran.in/cdn/farfuture/JFwBDGbEnyotGVZPyWNmHsma2rAXkBX0yt6Tjpsd3Z4/1636970730/sites/default/files/inline-images/109_8.jpg)
நடிகர் ராஜேஷ், சினிமா, இலக்கியம், ஜோதிடம், ஆன்மிகம், சினிமா பிரபலங்களுடனான அவருடைய நெருக்கம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், அண்மையில் மறைந்த கவிஞர் பிறைசூடன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
கவிஞர் பிறைசூடனின் உண்மையான பெயர் சந்திரசேகர். தஞ்சை மாவட்டம் நன்னிலம்தான் அவருடைய சொந்த ஊர். 1982 காலக்கட்டத்தின்போது ஒரு படப்பிடிப்பு தளத்தில் முதன்முறையாக பிறைசூடனை நான் சந்தித்தேன். நான் நடித்த படத்தில் அவரும் சிறு வேடத்தில் நடித்திருந்தார். அப்போது தமிழ் வரலாறு, ஜோதிடம், நாடி ஜோதிடம் குறித்து பல்வேறு விஷயங்கள் கூறினார். இவ்வளவு அறிவு உள்ள ஒருவர் எதற்காக நடிக்க வந்திருக்கிறார் என்று யோசித்தேன். அதன் பிறகுதான் அவர் கவிதை எழுதுவார் என்று எனக்குத் தெரியும். என்னுடைய ‘சிறை’ படத்தில்கூட பாடல்கள் எழுதியிருக்கிறார்.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/2wudC1exmzhEnfQfPOwA_In_juhLReFULMem_2PmTak/1636975225/sites/default/files/inline-images/jango-inside-news-ad_2.jpg)
என்னுடைய திருமணத்தின்போது பெரிய கவிதை ஒன்று வாசிக்கப்போகிறேன் என்றார். நானும் அனுமதி கொடுத்தேன். என்னை வாழ்த்தி மேடையில் ஒரு கவிதை வாசித்தார். மேடையில் இருந்த காளிமுத்து, கல்யாணசுந்தரம், என்.டி. சுந்தரவடிவேலு உட்பட அனைவரும் அந்தக் கவிதையை ரசித்தார்கள். பின்னர், தன்னுடைய பெயரை பிறைசூடன் என மாற்றி படிப்படியாக முன்னுக்கு வந்தார். ஆரம்பக்காலங்களில் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து நிறைய விளம்பரப் படங்களில் பணியாற்றியுள்ளார்.
எதையுமே வெளிப்படையாக பேசிவிடும் குணம் கொண்டவர் பிறைசூடன். சுயமரியாதை மிக்கவர். 400க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ள இவர், 1400க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார். மேலும், 5000க்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள் எழுதியுள்ளார். புராணப்படங்களுக்கு மிகச்சிறப்பாக வசனம் எழுதக்கூடியவர். அவர் இறந்துவிட்டார் என்ற திடீர் செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பிறைசூடன் மரணம் குறித்து அவருடைய மகன் கூறிய விஷயம் ஆச்சர்யமாக இருந்தது. அவர் பிறந்தது 1956ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி. 65 வருடங்கள் நான்கு மாதங்கள் 11 நாட்கள்தான் நான் உயிரோடு இருப்பேன் என்று முன்னரே பிறைசூடன் கூறினாராம். அவர் சொன்ன கணக்கிலிருந்து 4 மாதங்கள்தான் கூடுதலாக வாழ்ந்துள்ளார். ஒருவர் 60 வயதைக் கடந்து நல்லபடியாக வாழ்ந்து தன்னுடைய சொந்த வீட்டிலேயே மரணமடைவது என்பது மிகப்பெரிய பாக்கியம். அந்தப் பாக்கியம் பிறைசூடனுக்கு கிடைத்தது.