சென்னையில் நடிகர் கார்த்தி நடத்தும் உழவன் பவுண்டேசன் ஒருங்கிணைத்த உழவர் விருது 2023 வழங்கும் விழாவில் பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் கலந்து கொண்டார்கள். பல்வேறு நபர்களைப் பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் பொன் வண்ணன் பேசியதாவது...
"நீண்ட நெடிய பாரம்பரியமிக்க விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். அந்த விவசாய குடும்பத்தில் முதலில் படித்த பையனும் நான். படிப்பு என்பது பள்ளி பாட புத்தகத்தை தாண்டியும் நூலகமே கதி என்று இருந்தவன். அது ஒரு முரண்பாடான வாழ்க்கை. என்னுடைய தந்தை கிராமத்துச் சூழலில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர். விண்மீன்களின் நகர்வுகளையும், பறவைகளின் ஒலிகளையும் வைத்து நேரத்தைக் கணக்கிடும் அளவுக்கு இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்.
அவரிடம் பெரும்பாலும் மூணு அல்லது நாலு வேட்டி தான் இருக்கும். என்னுடைய அப்பாவை நான் பெரும்பாலும் கோவணத்தோடு தான் பார்த்து உள்ளேன். அவர் எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என்றாலும், அந்த கோவணத்தின் மேல் ஒரு வேட்டியை கட்டிக்கொண்டு தோளில் துண்டை போட்டுக்கொண்டு செல்வார். மாட்டு வண்டியில் போகும் கிராம வாழ்க்கை சூழல் இருந்தது. என்னுடைய அம்மா காலை நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து சமையல் வேலைகள் எல்லாம் முடித்து விட்டு காலை ஆறு மணிக்கு எல்லாம் வீட்டை விட்டு சென்று விடுவார்.
மாலை நாலு மணிக்கு எல்லாம் பள்ளி முடிந்து வரும் போது நேராக தோட்டத்திற்குச் சென்று அங்கு அம்மாவிற்கு உதவியாக அங்குள்ள வேலைகளைச் செய்வேன். புதன்கிழமை அன்று எங்கள் ஊரில் சந்தை கூடும் நாட்களில் காய்கறிகளை எங்க அம்மா தலையில் சுமந்து கொண்டு செல்வார். அவருக்கு பின்னாலேயே நானும் காய்கறிகளைச் சுமந்து கொண்டு செல்வேன். இப்படி செல்லும் போது பள்ளி நண்பர்கள் யாராவது நம்மை பார்த்து விடுவார்களா என்று நினைத்துக் கொண்டே செல்வேன். இவ்வாறு செல்வதை சில சமயங்களில் கௌரவ பிரச்சனையாகக் கூட கருதி இருக்கிறேன்.
வயது வயது கூடக் கூட எனக்கு விவசாயம் ஒத்து வரவில்லை. படிப்பும் கனவும் என்னை வேறு பக்கம் இழுத்துச் சென்றது. கம்யூனிச வாழ்க்கை, நாடகத்துறை, திரைத்துறை என வந்த பிறகும் கூட என்னுடைய அப்பா கடைசி வரைக்கும் விவசாய சூழலில் இருந்து மடிந்து விட்டார். ஆனால் என்னுடைய படிப்பு கற்று கொடுத்தது விவசாயத்தை விட்டு விட்ட நீ ஒரு முட்டாள் என்று. அதற்குள் வாழ்க்கை சூழல் மாறிவிட்டது. நான் மீண்டும் கிராமத்திற்குச் செல்லும் போது எதை இழந்தேனோ அதை உறவினர்கள் மற்றும் நட்பின் மூலம் அதை மீண்டும் பெற முயற்சிக்கிறேன்.
மனித இனம் கண்டுபிடித்த மிக கொடூரமான, பரிதாபமான ஒரு தேர்வு முறை விவசாயம். விவசாயம் என்பது மற்ற தொழில்களை போன்று சாதாரணமானது இல்லை. இயற்கையோடு இணைந்து பயணிக்க வேண்டி இருக்கிறது. வியாபாரத்தோடு இழப்புகளையம் சந்திக்க வேண்டி இருக்கிறது. பிரசவத்தில் ஆடு, மாடு இறந்து போவதைப் பார்த்து இருக்கிறேன். வறட்சியால் பயிர்களை மாடுகளை விட்டு மேய்ப்பதை பார்த்து இருக்கிறேன். ஆனால் அதற்காக எல்லாம் என் தந்தை வீட்டையோ, சமையல் அறையையோ மாற்றியது இல்லை. நிலத்தை வியாபாரத் தன்மையோடு அடையாளம் காட்டும் சூழல் வந்து விட்டது. இளைஞர்கள் முகநூலில் விவசாயத்தை பற்றி பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் விவசாயம் செய்வது என்பது ஒருவர் தனது வாழ்க்கையை தொலைத்து விட்டு பெரிய தியாகம் செய்யும் போது தான் உண்மையான விவசாயியாக இருக்க முடியும்" என்றார்.