Skip to main content

“நீங்கள் சொல்கின்ற பொய்கள் உங்களை தரம் தாழ்த்தி விடுகிறது” - ஆர்த்தி தாயார் பரபரப்பு அறிக்கை

Published on 17/05/2025 | Edited on 17/05/2025
aarti mother sujatha vijayakumar about ravi mohan issue

ரவி மோகன் கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இந்த சூழலில் ரவி மோகன் ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார். ஆனால் ஆர்த்தி இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவென்றும் என்னுடைய ஒப்புதல் இல்லாமல் எடுத்த முடிவென்றும் கூறியிருந்தார். பின்னர் ரவி மோகன், ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இரண்டு பேரும் ஆஜராகி விளக்கமளித்தனர். இருப்பினும் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. நிலுவையில் இருக்கிறது. 

இதனிடையே ரவி மோகனின் விவகாரத்து முடிவிற்கு பெங்களூரூவை சேர்ந்த பாடகி கெனிஷா தான் காரணம் என ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் நக்கீரனுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்தார். அதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்திருந்தார். இந்த தகவலை மறுத்த ரவி மோகன், ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், “நானும் கெனிஷாவும் எதிர்காலத்தில் ஒரு ஹீலிங் சென்டர் ஆரம்பிக்க இருக்கிறோம். அதன் மூலம் பல பேருக்கு உதவ வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதை கெடுக்காதீங்க” என கூறியிருந்தார். பின்பு பாடகி கெனிஷாவும் ரவி மோகனின் விவாகரத்து முடிவிற்கு நான் காரணமில்லை என விளக்கமளித்திருந்தார். அதன் பிறகு இந்த விவகாரம் அமைதியாக இருக்க சமீபத்தில் ரவி மோகனும் கெனிஷாவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்வில் ஜோடியாக கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக மீண்டும் விவகாரம் பெரிதானது. இருவரும் ஏற்கனவே வந்த தகவல்களை மறுத்த நிலையில் தற்போது ஒன்றாக பொதுவெளியில் தோன்றியது கோலிவுட்டில் பேசு பொருளாக மாறியது. 

இது தொடர்பாக ஆர்த்தி சமீபத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “அப்பா என்பது உறவுமட்டுமல்ல அது ஒரு உயர்ந்த பொறுப்பு. இன்று எங்கள் வாழ்க்கையில் குறுக்கே வந்தவர்களால் என் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.  என்னை அவரது முன்னாள் மனைவி என்று ஊடகவியலாளர்கள் அடையாளப்படுத்த வேண்டாம்” எனக் குறிப்பிட்டு ரவி மோகன் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இவருக்கு நடிகைகள் குஷ்பு, ராதிகா உள்ளிட்ட சிலர் ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரவி மோகன் ஆர்த்தி கூறுவது பொய் குற்றச்சாட்டு என நீண்ட அறிக்கை வெளியிட்டார். அதில் கெனிஷா பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அதாவது, கெனிஷாதான், தான் ஒன்றுமே இல்லாமல் இருந்த போது துணை நின்றார். அவர் ஒரு அழகான தோழி. அவருடைய குணத்துக்கும் தொழிலுக்கும் சிறு அளவில் கூட அவமரியாதை ஏற்பட நான் அனுமதிக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி இருவரும் தங்களது தரப்பு நியாயங்களை அறிக்கையாக வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர். 

இந்த நிலையில் ஆர்த்தியின் தாயாரான தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “கடந்த சில காலமாகவே கொடுமைக்காரி, குடும்பத்தை பிரித்தவன், பணப்பேய் சொத்தை அபகரித்தவன் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் என்னைப் பற்றி உலவி வருகின்றன. அப்பொழுதே இதற்கு விளக்கம் தர வேண்டும் என விரும்பினேன் ஆனால் என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி மௌனமாய் இருந்து விட்டேன். இப்பொழுதும் நான் பதில் சொல்லவில்லை என்றால் என்னைப் பற்றி திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வரும் பொய்கள் உண்மையாகிவிடு என்பதனால் இந்த விளக்கம். கடந்த 2007 ஆம் ஆண்டு வீராப்பு என்ற திரைப்படத்தை முதலில் தயாரித்தேன்.

சுந்தர்.சி கதாநாயகனாக நடித்த அப்படம் எனக்கு வெற்றியை கொடுத்தது தொடர்ந்து சின்னத்திரை தயாரிப்பில் மட்டுமே சுவனம் செதுத்தி வந்த எனக்கு, 2017 ஆம் ஆண்டு என் மாப்பிள்ளை ஜெயம் ரவி நீங்கள் திரைப்படமும் தயாரிக்க வேண்டும் என்ற யோசனையை வழங்கினார். அதனால் மீண்டும் திரைப்படம் தயாரிக்க துவங்கினேன். ஆனாலும் உறவு ரீதியாக நெருங்கிய ஓருவரை தொழில் ரீதியாக அணுகும் பொழுது அது குடும்பம் மற்றும் தொழில் இரண்டையும் பாதித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட அடங்க மறு என்ற திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமாக அமையவில்லை இருந்த போதிலும் தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும் என்கிற ஆலோசனையை என் மாப்பிள்ளை ஜெயம் ரவி கூறினார். அந்த ஆலோசனையின் பெயரில் தான் நான் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்

இந்த காலத்தில் ஒரு திரைப்பட தயாரிப்பாளரின் பணி அந்தத் திரைப்படத்தின் துவக்கத்தின் போது கேமராக்களுக்கு முன் கூப்பி நிற்பதும், பட வெளியீட்டின் போது யைனான்சியர்களின் முன் கைகட்டி நிற்பது என்று ஆகிவிட்டது. இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. அடங்க மறு, பூமி மற்றும் சைரன் என மூன்று திரைப்படங்களை தொடர்ந்து என் மாப்பிள்ளை ஜெயம் ரவியை கதாநாயகனாக வைத்து எடுத்தேன். இந்த படங்களுக்காக கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கும் மேலாக பைனான்சியர்களிடமிருந்து கடன் வாங்கி இருக்கிறேன். அந்தப் பணத்தில் 20 சதவிதத்தை ஜெயம் ரவிக்கு ஊதியமாக வழங்கி உள்ளேன். இதற்கு என்னிடத்தில் அவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அவர் வங்கி கணக்குக்கு செலுத்திய பரிமாற்றம் அவருக்காக நான் செலுத்திய வரி என அனைத்து ஆதாரங்களும் உள்ளது. இப்பொழுது ஜெயம் ரவி இந்தப் படங்களின் வெளியீட்டின் போது அவரை நான் பல கோடி ரூபாய் என்னுடைய கடன்களுக்காக பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை.

ஜெயம் ரவியை வெறும் கதாநாயகனாக மட்டுமே நான் பார்த்திருந்தால் கூட அப்படி நிர்பந்தப்படுத்தியிருக்க மாட்டேன். ஆனால் அவரை என் மாப்பிள்ளை என்பதைத் தாண்டி என் சொந்த மகனாகவே கருதினேன். அதனால் அவருக்கு எந்த ஒரு கஷ்டமும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு பெண் என்ற நிலையையும் கடந்து ஒவ்வொரு படம் வெளியீட்டின் போதும் விடியற்காலை ஐந்து மணி வரை வாங்கிய கடனுக்காக கிட்டத்தட்ட ஒரு வெள்ளை சுவரை தவிர பைனான்சியர்கள் நீட்டும் எல்லா இடங்களிலும் கையெழுத்து போட்டு பல கோடி ரூபாய் நஷ்டத்தையும் மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக் கொண்டேன். இன்று வரை அந்தக் கடன்களுக்கான வட்டியை நான் மட்டுமே கட்டி வருகிறேன் சைரன் பட வெளியீட்டின் போது கூட ஜெயம் ரவி, நஷ்டத்தை ஈடுகட்ட எனக்கு அடுத்த படம் நடித்துக் கொடுப்பதாகத்தான் கடிதம் கொடுத்தாரே தவிர எங்கேயும் எப்பொழுதும் கடனுக்கு பொறுப்பேற்று தான் கட்டுவதாக யாருக்கும் கையெழுத்து போடவில்லை மேலும் ஜெயம் ரவி எனக்கு நடித்துக் கொடுப்பதாக சொன்ன அடுத்த படத்திற்கு அவரே ஒரு இயக்குநரை தேர்வு செய்து அவருக்கு முன் பணம் கொடுக்கச் சொன்னார். எந்தவித மறுப்பும் இல்லாமல் அதையும் நான் செய்தேன்.

ஒரு வருடமாக நான் பலமுறை முயற்சி செய்தும் எங்களை சந்திப்பதை தவிர்த்து வந்த ஜெயம் ரவி இதை சாக்காக வைத்து சந்தித்து பேசி குடும்பத்திற்குள் சமாதானத்தை எட்டலாம் என்பதற்காக மட்டுமே ஒரு தயாரிப்பாளராக அல்ல தாயாக பத்து நாட்களுக்கு முன்பு அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் மாறாக அவர் சொன்னது போல் அவரை நிர்பந்தப்படுத்துவதற்காக அல்ல இன்றும் நான் மகனாகவே நினைக்கும் ஜெயம் ரவிக்கு ஒரு வேண்டுகோள். எப்பொழுதும் உங்களை ஒரு கதாநாயக பிம்பத்திலேயே நாங்கள் பார்க்கிறோம். நடந்து வருகின்ற பிரச்சனையில் உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அறிக்கைகளில் நீங்கள் சொல்கின்ற பொய்கள் அந்த கதாநாயக பிம்பத்திலிருந்து உங்களை தரம் தாழ்த்தி விடுகிறது என்றும் நீங்கள் ஹீரோவாகவே இருக்க வேண்டும் இது வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் அம்மா அம்மா என்று அழைப்பீர்களே அந்த அம்மாவின் ஆசை.

இன்று வரை என் பேர குழந்தைகளுக்காக அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன். அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும். அந்த துர்பாக்கியம் எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள் சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள் அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

சார்ந்த செய்திகள்