அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு நொடி’. எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, கஜராஜா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார். இந்தப் படம் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் டீசரும் ட்ரைலரும் ஒரே நாளில் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடபெற்றது. இதில், நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி அர்ஜுனன் படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் சி.வி.குமார், நடிகரும், அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா, எழுத்தாளரும், நடிகருமான வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
அப்போது ஆரி அர்ஜுனன் பேசுகையில், “இந்தப் படக் குழுவினருக்கு இதுவரை தெரியாத ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். இப்போதுதான் ட்விட்டரை பார்த்தேன். 'அரண்மனை 4' படத்தின் வெளியீடு மே மூன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு நொடி படத்திற்கு போட்டியில்லை. உங்களுக்கு விஷால் நடித்திருக்கும் 'ரத்னம்' படம் மட்டும் தான் போட்டி.
தமன்- ஈரோடு மகேஷ்- நான் நெருங்கிய நண்பர்கள். இருந்தாலும் ஒரு கதாநாயகனின் வெற்றி என்பது ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பெரிய போராட்டத்தைப் போன்றது. ஏனெனில் நடிகர்கள் உடம்பை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். சாப்பிட வேண்டும். வாய்ப்புகளைத் தேடி ஓட வேண்டும். நல்ல படைப்புகள் வெளியாக வேண்டும். எனக்கும், தமனுக்கும் எங்களைப் போன்றவர்களுக்கும் என்ன பிரச்சனை என்றால், கடைசி நிமிடம் வரை வேலை செய்ய வேண்டிய சூழல் உண்டு. படத்தின் போஸ்டர் ஒட்டும் வேலையைக் கூட தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவரும் செய்வார்கள். ஆனால் நாயகன் என்பவர் திரையரங்கில் படம் ஓடும் கடைசி நாள் வரை வேலை செய்து கொண்டிருப்பார்.
'சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்காதீர்கள்' என்று விஷால் நல்ல நோக்கத்தில் தான் சொன்னார். ஆனால் பலரும் அதனை வேறு விதமாக புரிந்து கொண்டார்கள். ஆனால் ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள். சின்ன பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் படம், என்றில்லை. நல்ல கன்டென்ட் உள்ள படத்திற்கு மக்கள் எப்போது ஆதரவு தர தயாராகவே இருக்கிறார்கள். 'மஞ்சுமல் பாய்ஸ்', 'காந்தாரா' போன்ற படங்கள் பெரிய வசூலை தமிழில் பெற்றிருக்கிறது. நிறைய நல்ல படங்கள் இங்கு ஓடுவதற்கு மிக முக்கியமான காரணம் நல்ல கன்டென்ட்தான். நல்ல கதை, நல்ல திரைக்கதை, நேர்மையான உழைப்பு, இவையெல்லாம் ஒன்றிணைந்தால்.. அதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்” என்றார்.