திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஹீரோ லைஃப்டைம் என்பது அவரவர் வெற்றியை பொருத்தும் பின்னணியை பொருத்தும் மாறுபடும். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோர் வெற்றிகரமான கதாநாயகர்களாகவே இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தவர்கள். தற்போதுள்ள நாயகர்களில் விஜய், அஜித் போன்றோர் நாயகர்களாகவே இருபது ஆண்டுகளை கடந்திருப்பவர்கள். தமிழ் சினிமா கண்ட நாயகர்களில் சிலர் குறுகிய காலத்தில் மிகப்பெரும் வெற்றிகளைக் கொடுத்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டு சில ஆண்டுகளிலேயே புகழ் வெளிச்சத்திலிருந்து மறைந்தும் போவதுண்டு. மோகன், ராமராஜன் போன்ற நடிகர்கள் சில ஆண்டுகளுக்குள் பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமாகி இன்னும் சில ஆண்டுகளில் தொடர் தோல்விகளால் நடிப்பதை நிறுத்திவிட்டவர்கள்.
சத்யராஜ், பிரபு, சரத்குமார், அர்ஜுன் போன்ற நடிகர்கள் நீண்ட காலமாக திரைத்துறையில் இருப்பவர்கள். நல்ல வெற்றிகள், அவ்வப்போது தோல்விகள், பின்னர் நாயகனல்லாத வேறு வேடங்கள் என நடிப்புப் பாதையை அமைத்துக் கொண்டவர்கள். வெற்றிகரமான நாயகர்களாக இருந்த மூத்த நடிகர்களுக்கு வில்லன் மற்றும் அப்பா, மாமா போன்ற குணச்சித்திர வேடங்களில் முக்கியத்துவம் அளிக்கிறார்கள் இன்றைய இயக்குனர்கள். அப்படி, பல நல்ல பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர்கள் பிரபு, சத்யராஜ். தற்போது சரத்குமார், அர்ஜுன் ஆகியோரும் அத்தகைய பாத்திரங்களில் கவனம் செலுத்துகிறார்கள்.
சத்யராஜ், ஆரம்பத்தில் நாயகன் வேடத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று உறுதியாக இருந்தவர். விருமாண்டி, சிவாஜி உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க அழைத்தும் மறுத்தவர். பின்னர், தனது கொள்கையை தளர்த்திக்கொண்டு குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தார். ஹீரோவாக அவர் தமிழகத்தில்தான் பிரபலம். 'கட்டப்பா'வாக இன்று அவர் இந்தியா முழுவதும் பிரபலமாக அவர் ஏற்ற குணச்சித்திர பாத்திரமே உதவியது. ஹீரோவாக நடித்த நான் பிற வேடங்களில் நடிப்பதில்லை என்ற உறுதியில் இன்னும் நிற்பவர்கள் மோகன், ராமராஜன். சில பல நல்ல வாய்ப்புகளையும் கூட மறுத்தவர்கள். அரவிந்த் சாமி, நாயகனாக இருந்தபோது தனது அழகால், தோற்றப்பொலிவால் தமிழக இளம் பெண்களை கவர்ந்தவர். இன்று அவர் 'டெரிஃபிக்' வில்லனாக கலக்கினார். அவரது இரண்டாவது அத்தியாயத்துக்கு அந்த முடிவு உதவியது.
இப்படி, நடிகர்களின் கேரியர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கால அளவு வெற்றிகரமாக இருக்கிறது. தமிழில் 1990களில் சில படங்களில் நாயகர்களாகவும் பல படங்களில் துணைப் பாத்திரங்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர்கள் ஆனந்த், ராஜா. இவர்களில் ஆனந்த், பாலச்சந்தர் தயாரிப்பில் அவரது உதவியாளரான அமீர்ஜான் இயக்கத்தில் 'வண்ணக்கனவுகள்' என்ற படத்தில் அறிமுகமானவர். பல படங்களில் நாயகராகவும் நடித்துள்ள இவர், சில வெற்றிப்படங்களிலும் நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் சத்யா, அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் உள்ளிட்ட பல முக்கிய இயக்குனர்கள் படத்தில் நடித்த ஆனந்த், அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். 90ஸ் கிட்ஸுக்கு 'திருடா திருடா' மூலம் நன்கு அறிமுகமான இவர், 2K கிட்ஸுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. 2000 ஆண்டுக்குப் பிறகு தமிழில் இவர் அதிகம் தென்படவில்லை. மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்து இவர், சமீபத்தில் வெளிவந்த விஜய் தேவரகொண்டாவின் 'டியர் காமரேட்' படத்தில் அவரது தந்தையாக வந்து தமிழ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்தார். தமிழில் கடைசியாக 'ரங்கூன்' படத்தில் தோன்றியிருந்தார்.
நடிகர் ராஜா, 90களின் அழகிய அமெரிக்க மாப்பிள்ளை ஆவார். 80களிலேயே அறிமுகமாகி 90களில் பாரதிராஜாவின் படங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் 2000ஆண்டுக்குப் பிறகு திரைப்படங்களில் தென்படவில்லை. தனது பிசினஸில் பிஸியாக இருந்த ராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தெலுங்கில் வெளியான என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்றுப் படங்களான 'கதாநாயகுடு', 'மகாநாயகுடு' படங்களில் என்.டி.ஆரின் சகோதரர் பாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமான ‘ஆதித்ய வர்மா’ படத்தில் துருவ்வின் தந்தையாக நடித்திருந்தார் ராஜா. விக்ரம் கேட்டுக்கொண்டதால் இந்தப் படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவின் மேலும் ஒரு முக்கியமான 90ஸ் ஹேண்ட்ஸம் ஹீரோ பிரஷாந்த். 'டாப்ஸ்டார்' என தன் ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவரது முந்தைய பட்டப்பெயர் ஆணழகன். எக்கச்சக்கமான பெண் ரசிகைகளைக் கொண்ட இவர் பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்தவர். இயக்குனர் ஹரியின் முதல் படமான 'தமிழ்' கடைசியாக இவருக்கு அமைந்த ஆல்-க்ளாஸ் கமர்ஷியல் வெற்றிப்படமாகும். சமீபத்தில் வெளியான 'ஜானி' படம் வரை இவரது படங்கள் அவ்வப்போது தமிழில் வெளிவந்தாலும் தெலுங்கில் ராம் சரண் தேஜா நடித்த 'வினய விதேய ராமா' படத்தில் அவரது அண்ணனாக பிரஷாந்த் தோன்றியது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. முழுக்க முழுக்க ராம் சரணுக்கு முக்கியத்துவம் உள்ள பக்கா தெலுங்கு மசாலா படமான அதில் பிரஷாந்த் துணை பாத்திரத்தில் நடித்ததே அந்த ஆச்சரியத்துக்குக் காரணம். வில்லனாக நடிக்க விரும்பினால் இவருக்கு பல பெரிய படங்கள் அமையுமென்றும் திரையுலகில் கூறப்படுகிறது. சரத்குமார், சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற மகேஷ் பாபுவின் 'பரத் அன்னே நேனு' படத்தில் மகேஷ் பாபுவின் தந்தை பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி, 90களின் தமிழ் ஹேண்ட்ஸம் ஹீரோக்களான பலர் தற்போது தெலுங்கு சினிமா உலகில் உலா வருகிறார்கள்.