தென் இந்தியா முழுவழுதும் உள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பட உலகில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதற்காக அந்த அமைப்புகள் தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி, அதை கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கடந்த 1ஆம் தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருவதை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இருதரப்பினருக்கும் பல கட்டங்களாக நடந்த சமரச பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்து விட்ட நிலையில் பட அதிபர்கள் வேலை நிறுத்தம் இன்று தொடர்ந்து 10வது நாளாக நீடித்து வருகிறது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் பெரிய மற்றும் சிறிய பட்ஜெட்டில் தயாரான படங்கள் திரைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த வாரமும் நேற்றும் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த வாரம் தாராவி படம் மட்டும் தடையை மீறி வெளிவந்தது. இந்நிலையில், தற்போது தியேட்டர்களில் திரையிட புதிய படங்கள் இல்லாததால் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், விஜய், அஜித்குமார் ஆகியோர் நடித்துள்ள நடித்த பழைய படங்களை மீண்டும் திரையிட்டு வருகிறார்கள். இன்னும் சில தியேட்டர்களில் ஏற்கனவே திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் ஜீவாவின் கலகலப்பு-2 விமலின் மன்னர் வகையறா, ஜோதிகாவின் நாச்சியார் உள்ளிட்ட சில படங்களை தொடர்ந்து திரையிட்டு வருகிறார்கள். இந்த படங்களுக்கும் கூட்டம் குறைவாக வருவதால் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு பெரும்பாலான தியேட்டர்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 10 நாட்களை சேர்த்து திரையரங்க உரிமையாளர்களுக்கு இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
Published on 10/03/2018 | Edited on 12/03/2018