'சிறையின் மறுபக்கம்' தொடரில் 11 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற மைதீன் தன்னுடைய சிறை அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
அப்போது எனக்கு வயது 28. நண்பர்களுக்காக செய்த கொலை அது. நாங்கள் மொத்தம் ஆறு பேர். கொலை செய்யும்போது எங்களுடைய குடும்பத்தைப் பற்றி நாங்கள் யோசிக்கவில்லை. நம்முடைய குடும்பம் கஷ்டப்படும்போது தான் நண்பர்கள் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. நான் சிறையில் இருந்தபோது என்னைப் பார்க்க என்னுடைய நண்பர்கள் யாரும் வரவில்லை. என்னுடைய தாய், தகப்பன், மனைவி மட்டும்தான் எனக்கு உதவி செய்தனர். ஒரு சாராய வியாபாரியிடம் எங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. எங்களைக் கொன்றுவிடுவேன் என்று அவர் மிரட்டினார். கொடூரமான நபர் அவர்.
அவரைக் கொன்றுவிடலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். அதன்படியே கொன்றோம். ஒரு வாரம் கழித்து தான் நான் சரண்டர் ஆனேன். நமக்கு பரோல் வழங்கப்படும்போது அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதேனும் தவறோ அல்லது தாமதமோ செய்தால், அடுத்த முறை பரோல் வழங்க மாட்டார்கள். சிறையில் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன. படிக்காமலேயே நிறைய விஷயங்கள் தெரிந்த நபர்கள் சிறையில் இருக்கின்றனர். கிட்டத்தட்ட அது ஒரு கல்விக்கூடம் போல் தான். சட்டம் உட்பட பலவற்றையும் அங்கு கற்றுக்கொள்ளலாம்.
பலருடைய அனுபவங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு சிறையில் கிடைக்கும். சிறையில் சில அதிகாரிகள் எங்களோடு நன்கு பழகுவார்கள். நாங்கள் செய்யும் வேலைக்கு ஒரு நாளைக்கு எங்களுக்கு 10 ரூபாய் சம்பளம். இந்த விஷயத்தில் நம்மைத் துன்புறுத்த மாட்டார்கள். அங்கு இருப்பவற்றில் நமக்குப் பிடித்த வேலையை நாம் செய்யலாம். பெரிய ஆட்களும் சின்ன ஆட்களும் சிறையில் ஒன்றுதான். அனைவருக்கும் சாப்பாடு ஒரே அளவில் தான் வழங்கப்படும். யாருக்கும் தனி மரியாதை என்பதெல்லாம் கிடையாது.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான பலரையும் சிறையில் காண முடியும். தெரியாமல் போன் பேசினால் அதற்கான தண்டனையாக வேறு சிறைக்கு மாற்றிவிடுவார்கள். சிறைக்குள் பெரிய குற்றங்கள் செய்தால் அடி விழும். சிறை தான் எனக்கான பாடமாக இருந்தது. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பலர் குறித்தும் நம்மால் சிறையில் இருக்கும்போது அறிய முடியும். சிறையில் கற்ற பாடங்களை வைத்து தான் இப்போது திருந்தி வாழ்கிறேன். சிகிச்சை கொடுக்க நேரமாவதால் சிறையில் மாரடைப்பு ஏற்பட்டு பலர் மரணமடைந்திருக்கின்றனர். சிறையில் தற்கொலைகளும் நடைபெறும். கைதிகளுக்குள் நிறைய சண்டைகளும் ஏற்படும்.