Skip to main content

ஜெயிலுக்குள் வாழ்க்கை புரிந்தது; வெளியே வந்ததும் உலகமே மாறி இருந்தது - சிறையின் மறுபக்கம்: 05

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

 siraiyin-marupakkam-05

 

'சிறையின் மறுபக்கம்' தொடரில் 18 வருட சிறை தண்டனை பெற்ற தாமோதரன் தன்னுடைய சிறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

 

உண்மை என்பது நிச்சயம் ஒரு நாள் வெளிவந்தே தீரும். இப்போது ஊரில் உள்ள அனைவருக்கும் நான் தவறு செய்யவில்லை என்பது தெரிந்திருக்கிறது. சிறையில் இருந்து வெளியே வந்தபோது உலகமே மாறியிருந்தது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. சிறையில் போதை வஸ்துக்கள் கிடைப்பது உண்மைதான். ஆனால் எப்போதாவது தான் அவை கிடைக்கும். சிறையில் இருக்கும்போது பேரறிவாளன் அவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு பாடல் பாடுவதிலும் எழுதுவதிலும் ஆர்வம் உண்டு. அவர் கிடார் வாசிப்பார். உண்மையில் அவர் மென்மையான ஒரு மனிதர்.

 

அவரின் மென்மையான இயல்பைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். சிறையில் எப்போது என்ன பிரச்சனை வரும் என்பது தெரியாது. நான் ரிலீசாகி வந்து ஆறு மாதத்தில் என்னுடைய அம்மா இறந்துவிட்டார். அவர் சுயநினைவு இல்லாமல் இருந்தபோது அவரை நான்தான் கவனித்துக்கொண்டேன். அவரை அந்த நிலையில் பார்ப்பது எனக்கு வேதனையாக இருந்தது. இந்த உலகத்தில் நிலைப்பதற்கு பணம் தேவைப்படுகிறது. சிறை சென்று வந்ததால் எனக்கு இதுவரை எந்த வேலையும் கிடைக்கவில்லை. வாழ்வாதாரத்திற்கும் வழியில்லை. ஆனால் உழைப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

 

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், வாழக்கூடாது என்று அனைத்தையும் சிறையில் கற்றுக்கொள்ளலாம். அறிவுரை செய்வது இப்போதிருக்கும் தலைமுறைக்கு பிடிப்பதில்லை. இப்போதிருப்பவர்கள் அறிவாளிகளாகவும், தெளிவாகவும் இருக்கிறார்கள். நான் பட்ட கஷ்டங்களை வேறு யாரும் படக்கூடாது. இப்போது கூட நான் சிறையில் இருப்பதுபோல் கனவு கண்டு அடிக்கடி எழுந்து பார்ப்பேன். வீட்டில் இருக்கிறோம் என்பதை உணர்ந்த பிறகு தான் நிம்மதியாக இருக்கும். எதிர்காலத் திட்டம் என்று எதுவும் இல்லை. நேர்மையாக வாழ வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய எண்ணம். 

 

சிறையில் இருக்கும்போது குடும்ப நிகழ்ச்சிகளில் நம்மால் பங்கேற்க முடியவில்லையே என்கிற ஏக்கம் இருக்கும். சிறையில் அனைத்து மத வழிபாடுகளுக்கான வாய்ப்பும் இருக்கிறது. அல்-உம்மா தீவிரவாதிகளையும் சிறையில் நான் சந்தித்திருக்கிறேன். முக்கியமான விஷயங்கள் குறித்து அவர்கள் நம்மோடு பேச மாட்டார்கள். ஆண்களை விட பெண்கள் சிறையில் அதிகம் பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்று கேள்விப்பட்டதுண்டு. மறுவாழ்வுக்கான வாய்ப்புகளும் அவர்களுக்கு மிகவும் குறைவு. சிறையிலிருந்து வருபவர்களுக்கு ஒரு வாழ்வாதாரத்தை அரசாங்கம் ஏற்படுத்தித் தர வேண்டும். அப்போதுதான் வெளியே வந்ததற்கான முழுமையான அர்த்தத்தை அவர்கள் உணர்வார்கள்.