தற்கொலை செய்ய முயற்சித்த குழந்தையின் பெற்றோருக்குக் கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
திருமணமாகி 10 வருடங்களுக்கு மேல் ஒன்றாக இருக்கும் கணவர், மனைவி இருவரும் நல்ல வேலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு பெண் குழந்தையொன்று உள்ளது. அந்த கணவர் தன் மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். அதற்கு காரணமான மனைவியின் உடல் பருமனைச் சுட்டிக்காட்டி , தினம் அசிங்கப்படுத்தி இருக்கிறார். இது மனைவிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி இருக்கிறது. இதை கணவரிடம் வெளிக்காட்ட முடியாத மனைவி, தன் குழந்தையிடம் கோபமாக நடந்துகொண்டிருக்கிறார். குழந்தை கருப்பாகவும் குண்டாகவும் இருந்ததால், மோசமான சொற்களைப் பயன்படுத்தி குழந்தையின் உணவுப் பழக்க வழக்கத்தை மாற்ற முயற்சித்திருக்கிறார்.
கணவர் தன்னை எப்படியெல்லாம் கேலி கிண்டல் செய்து மட்டமாகப் பேசுகிறாரோ அதைவிட டபுள் மடங்காக அம்மா தனது குழந்தையை நடத்தியிருக்கிறார். அந்த பெண் குழந்தை, அம்மாவின் அந்த சித்திரவதையை அனுபவித்துக் கொண்டு ஒருபக்கம் பள்ளியில் உடல் ரீதியாக கேலி கிண்டல்களையும் அனுபவித்திருக்கிறார். இதனை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒரு நாள் இரவு தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். இதனைப் பார்த்த பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு, அந்த நேரத்தில் அழுதபடி கால் செய்தனர். அப்போது சில ஆறுதலான வார்த்தையைச் சொல்லிவிட்டு குடும்பமாக கவுன்சிலிங் வரச் சொன்னேன்.
அதன் பிறகு அந்த குழந்தையிடம் பேசும்போது, சின்ன உணவு விஷயங்களில் கூட கட்டுப்பாடு போட்டு அதைத் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடக்கூடாது என்று சொல்கின்றனர். கேட்டால் குண்டாகி தான் எதிர்காலத்தில் கஷ்டப்படுவேன் என்று சொல்லித் திட்டுகின்றனர் என்று சொல்லி அழுதது. அதற்காகத் தற்கொலை செய்வது தவறு என்று சொல்லுகின்ற விதத்தில் சொல்லிப் புரிய வைத்துவிட்டு அந்த குழந்தையின் அம்மாவிடம் பேச ஆரம்பித்தேன். அந்த அம்மா குழந்தையைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு கணவர் தன்னை உடல் ரீதியாக அசிங்கப்படுத்துவதை விவரித்தார். அதோடு இந்த கஷ்டமெல்லாம் தன்னுடைய குழந்தைக்கும் வந்துவிடக்கூடாது. குழந்தை பருவமடையும் வயது வந்துவிட்டதால் கடினமாக நடந்துகொள்கிறேன் என்றார். பின்பு அவரிடம் குழந்தைக்கு இன்னும் வயது இருக்கிறது. அதற்குள் உங்களுடைய பிரச்சனையைத் திணிக்க வேண்டாம். இந்த வயதில்தான் சில உணவுகளை சாப்பிடத் தோன்றும். அதனால் அதை லிமிட்டாக கொடுங்கள். அதோடு தனக்கான பிரச்சனையை மற்றவர்கள் மீது கோபமாக காட்டாதீர்கள் என்றேன்.
அந்த கணவரை அழைத்துப் பேசுகையில், உங்களின் தனிப்பட்ட விஷயத்தால் குழந்தை தற்கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது. அதனால் குழந்தை முன்பு நீங்களும் உங்கள் மனைவியும் சண்டை போடாமல் இருங்கள். இல்லையென்றால் குழந்தை படிப்பு ரீதியாக பாதிப்பு அடைவதுடன் மட்டுமில்லாமல் மன ரீதியாகவும் பாதிப்படையும். சில விஷயங்களை கனிவாக கையாள்வதன் மூலம் அதில் சிறப்பாக வர முடியும். அதற்கு கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை. முடிந்தளவு குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்படி, சந்தோஷமாக குழந்தையிடம் நேரத்தைச் செலவிடுங்கள் என்று அனுப்பி வைத்தேன் என்றார்.