Skip to main content

"துரோகங்களின் சவுக்கடியில் சிதைந்து ரணமாகியிருக்கிறது அவனின் இதயத் தசைகள்.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #23

Published on 29/02/2020 | Edited on 07/03/2020


மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு பெரும்பாலும் காரணம் துரோகம் என்ற ஒற்றைச் சொல்லே! முகத்திற்கு நேரே தேன்னொழுக பேசிவிட்டு முதுகிற்கு பின்னர் வாள்வீசும் மறைமுகத் துரோகம்தான் மலிந்து போய் இருக்கிறது. இயேசு, கட்டபொம்பன் ஏன் தற்போது வெளிவந்த பட்டாசு படத்தில் தனுஷ் கூட இந்த மறைமுக துரோகம் தான் வீழ்த்தியிருக்கிறது. இன்றைய செய்திகள் பத்திரிக்கைகள் இவை நாள்தோறும் சுமந்து வரும் ஒவ்வொரு செய்தியும் ஒரு துரோகத்தின் அடையாளம்தான்! இன்னாரென்று இன்னது என்று அடையாளம் காட்டப்படாத காட்ட முடியாத துரோகங்கள் மலிந்து கிடக்கிறது நம் கண்களுக்கு முன்னர். பொங்கலுக்கு வெளிவந்த சப்பாக் திரைப்படம் ஒரு உன்னதமான கதை. அந்த பெண்ணின் விழிப்படலம் சுமந்து இறுகிய முகத்தின் அமிலம் குடித்த சதை குழம்புகள். அண்ணன் என்று நினைத்த ஒருவனின் நம்பிக்கைத் துரோகம் தாயாய் பிள்ளையாய் பழகிய அண்டை வீட்டாரின் நயவஞ்சகத்தின் உச்சம். அமிலத்தின் ஒவ்வொரு துளியும் ரசித்து ரசித்து மிக கொடூரமாக முகச் சதைகளை தன் கோர நாக்கிற்கு விருந்தாக்கும் போது ஏற்படும் வலியை விடவும் இந்த சமூகம் அவர்களுக்கு தரும் வலி கொடுமையானது. 30 ரூபாய்க்கு பெண் தன் உறுப்புகளை முடமாக்கிக்கொள்ள வைக்கிறான் அந்தக் கொடூரன்.

வரி வரியாய் பேனாக்கள் சுமந்த மசியின் வீரியம் பேசியப் பார்த்து சட்டத்தின் அமிலத்தின் மூலத்தை அழித்துவிடச் சொல்லி அரங்கேறிய சட்டத்தையும் தாண்டி இன்று பெண் அவள் தன் முகத்திற்கு அவள் விரும்பாமலேயே அமிலப்பூச்சினை முகப்பூச்சாக ஏற்றுக் கொள்கிறாள். ஒரு திருமணத்திற்கு தயாராகும் அந்தப் பெண்ணின் முகமலர்ச்சி அவளின் சந்தோஷம். பச்சைக் குழந்தையாய் ரசித்து அவளின் ஒவ்வொரு வளர்ச்சியையும் கண்டு பூரித்து நின்ற அன்னையின் முன்பே மகள் அலறித் துடிக்கிறாள் அமிலத்தின் கைகள் அவளைத் தீண்டியதால்! அந்தத் திரைப்படத்தின் கடைசி காட்சி பார்க்கும் போதே மனம் பதைக்கிறது. அனுபவித்தவளின் வலியை விவரிக்க சொற்களுக்கு இல்லை. என் விரல்கள் சுமக்கும் பேனா மசிக்கும் வலு இல்லை. 2019 டிசம்பர் மாதம் கூட இப்படி ஒவ்வொரு சம்பவம் நடந்ததாக ஒரு பதிவு உண்டு. எங்கும் சுயநலம் எதிலும் சுயநலம். ஒரு நொடி சுகத்திற்காக மூன்று வயது பிஞ்சைக் கொன்ற கொடூரம் எங்கு நோக்கிலும் அறிந்தவர்கள் தெரிந்தவர்களே எதிரிகளாய் நம் கண்முன்னே?! அடுக்குமாடிக் குடியிருப்பில் 11 வயது மனநலம் குன்றியை சிறுமியை சிதைத்து கொடூரர்களுக்கு ஆதரவாக சில பெண்கள் அந்த பச்சைப் பிள்ளையையும், அவளைப் பெற்றவர்களையும் அசிங்கப்படுத்தும் கொடூரம் என எங்கு நோக்கிலும் பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சொல்லும் சமூகம்.
 

k



உறக்கத்தில் உயிரைக் காவு வாங்கிய சுனாமியைப் போல உறங்கிக் கொண்டிருந்த சொந்த அத்தை குடும்பத்தை சேர்ந்த 6 பேரை உயிரோடு எரித்த சம்பவம் அதிர்வை ஏற்படுத்தியது காரணம் அத்தையின் மகளை விரும்பியிருக்கிறார் பெண் கேட்டபோது படிப்பு காரணம் காட்டி தர மறுத்து வேறு இடத்தில் நிச்சயம் செய்திருக்கிறார்கள் அந்த பெண்ணுக்கு அதனால் கோபம் கொண்டு குடும்பத்தையே எரித்து இருக்கிறான். அந்த கொடூரம். எந்நேரமும் நம் குடும்பத்தினருக்கு நாமே பாதுகாப்பாக இருக்க இயலாத நிலையில் அக்கம்பக்கத்தினர் தான் முதலில் பிரச்சனைக்கு உதவுவார்கள் அதன் பின்னர்தான் தகவல் தெரிந்து உறவினர்களே வருவார்கள் என்ற நிலை மாறி இப்போது அக்கம் பக்கத்தினரைக் கூட நம்பக் கூடிய சூழ்நிலையில் இல்லையென்பது தான் வருத்தத்திற்குரிய விஷயமாக மாறுகிறது. சேலம் பக்கத்தில் உள்ள குக்கிராமத்தில் பக்கத்து வீட்டில் உள்ள 13 வயது சிறுமியை தாயின் கண்முன்னால் அரிவாளால் வெட்டி தலையை எடுத்து கொண்டு வந்த வெறித்தனம் காரணம் அந்தச் சிறுமி அவர்களை விடவும் கீழ் சாதியைச் சேர்ந்தவளாம். அவள் என் பிள்ளைகளுடன் சரிக்கு சமமமாக விளையாடுவது பிடிக்கவில்லை என்பது தான் கொலைகாரனின் வாதம். ஆனால் உண்மையென்னவெனில் இவன் அந்த சிறுமியை வன்புணர்வு செய்திருக்கிறான். எங்கே அந்தப் பெண் அதை வெளியில் சொல்லி விடப்போகிறதோ என்ற பயத்தில் கொன்றிருக்கிறான்.

ஒரு சிறுமியின் உடலை வேட்டையாட தடை சொல்லாத ஜாதி அந்தச் சிறுமி இயல்பாய் வளைய வர மட்டும் தடையாய் நின்று உயிரையே எடுத்திருக்கிறது. பலவகையான துரோகங்கள் பங்குதாரரைப் போல் வாழ்வில் வளைய வரும் நிலையில் ஆணின் துரோகத்தை மட்டும் அடையாளம் காட்டப்படுகிறது. ஆனால் பெண்களின் துரோகம். திருமணமாகி நான்கு வருடங்கள் உடலையும் உள்ளத்தையும் பகிர்ந்து கொண்டு வாழ்ந்த தாம்பத்தியத்தை தொலைத்த ஒரு பெண்ணின் துரோகம். ஒரு ஆண் தாலிகட்டியப் பெண்ணை விட்டு பிரியும் போது அவளுக்கு எத்தனை நெருக்கடிகள் ஏற்படுகிறதோ அதே போன்ற நெருக்கடிகள் ஆணுக்கும் ஏற்படத்தான் செய்கிறது. பலபேருக்கு வேடிக்கை செய்யும் காட்சிப்பொருளாய் அவன் நிறுத்தப் படுகிறான். ரவியின் மனைவி தேவி பெண் பார்க்க வரும் போதே மாப்பிள்ளை கருப்பு வேற பையன் பார்க்கலாமா என்ற அப்பாவின் காதோர கிசுகிசுப்பை வேண்டாம் என்று மறுத்து தலையசைத்தாள் நல்ல பையன்னு சொல்லிட்டீங்கப்பா வேற என்ன வேணும் அம்மா இல்லாத என்னை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தீங்க நீங்க யாரைக் கல்யாணம் செய்து கொள்ள சொன்னாலும் சரி என்று சொன்ன மகளை பெருமையோடு பார்த்த தந்தைக்கு தெரியாது அவளின் மனதில் காசிமேடு கடற்கரையில் மீன்பிடிக்கும் ஜோசப் அவள் மனதைப் பிடித்துவிட்டான். ஆனால் ஒரு கொலை முயற்சிக் குற்றத்திற்காக நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை அவன் ஏற்றதால் தான் மகள் இந்த மணமகனை ஏற்றிருக்கிறாள் என்று.
 

 

hj



அதிகம் படிக்கவில்லையென்றாலும், நன்கு படித்த அழகான பெண் மனைவியாக வந்துவிட்ட குஷியில் ரவியைக் கையில் பிடிக்கமுடியவில்லை, தந்தையில்லாத அவன் தாயில்லாமல் அவள் இருவருக்கும் மாமியார் மாமானார் என்ற உறவில் தாயும் தந்தையும் கிடைக்க ஒன்றாகவே வாழ்ந்து வந்தார்கள். சம்பந்தி என்ற நிலைதாண்டி ரவி தாயார் தன் சம்பந்திக்கும் உணவு சமைத்தார். நன்றாக போய் கொண்டிருந்த தேவியின் வாழ்வில் குழந்தையில்லை என்ற ஒரு குறையைத் தவிர வேறு எந்த குறையும் இல்லை, நீரு பூத்த நெருப்பாக ஜோசப்பின் காதல் அடி ஆழத்தில் புதைந்திருந்ததை யாரும் அறியவில்லை, நான்கு முழுவருடங்கள் கடந்த நிலையில் ரவி அழுதுகொண்டே தேவியைக் காணோம் என்று போலீஸில் புகார் கொடுத்தான்.

என்னப்பா பிரச்சனையா?

இல்லைங்க காலையிலேயே வேலைக்குப் போகும் போது ஏதோ தயங்கித் தயங்கி சொல்ல வந்தது. ஆனா கலங்கிய கண்களோடு என்னைப் பார்த்தது அவ்வளவுதான் அந்தப்பொண்ணோட பொருட்கள் சிலவற்றை காணோம் நாங்க வாங்கிய நகைகள், ரவியின் ஓவர் ட்யூட்டி பார்த்து வாங்கிய பணத்தை சேர்த்து வைத்த உண்டியல் என அனைத்தும் காணாமல் போயிருக்க ஏதோ பொறி தட்டியது. அவளின் திருமணத்திற்கு முந்திய காலத்தில் நடந்த காதல் அம்பலத்திற்கு வந்தது. உடைந்து போனான் ரவி. சரியாய் பத்துநாட்கள் தந்தையின் வீட்டில் மீண்டும் மாலையும் கழுத்துமாய் கழுத்தில் மட்டும் ரவி கட்டிய தாலிச்சரடு. அப்பா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு வீட்டை விட்டு துரத்தினார். மருமகனே இனி எனக்கு மகன் என்று! தான் கேலிக்கு உரிய பொம்மையாக்கப் பட்டுவிட்டோம் என்று உணர்ந்த ரவியின் நிலைமையோ ரொம்பவும் பரிதாபம்.

கோர்ட்டில் விவாகரத்து வழக்கு. காரணம் அவனால் எனக்குப் பிள்ளை தர முடியவில்லை என்று உரக்கவே குற்றம் சாட்டினாள். கொஞ்சநாள் போகட்டும் மாமா இப்ப எனக்கு விருப்பம் இல்லை என்று தன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சியது ரவியின் படுக்கையறைச் சுவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். வழக்கு முடியும் போது அவள் கைகளில் குழந்தையிருந்தது காது மூக்கு கழுத்து எல்லாம் வெறுமையாய். தினம் தினம் ரசித்த கண்கள் உள்ளடங்கி தன் தவறை உணர்ந்ததை பறைசாற்றின. அவள் மீண்டும் ரவியிடம் தனிமையில் ஒருமுறை மன்னிசிடுங்க புத்தி கெட்டுப்போய் தப்பு பண்ணிட்டேன் தயவு செய்து பிள்ளையோட என்னை ஏத்துக்கோங்க என்று கெஞ்ச அதைியாய் கடந்து விட்டான் ரவி. மனதில் ஆழமான தாய்க்கு பிள்ளையின் நலன் முக்கியம் இல்லை. அவர் மட்டும் மீண்டும் தன் பிள்ளையை மணக்கோலத்தில் கண்டுவிடும் ஆசையுடன் ஏம்மா அதான் முத பொண்டாட்டி பிள்ளை கொடுக்க தகுதியில்லைன்னு பொட்டிலடிச்சாப் போல சொல்லிட்டாளே இனிமே பொண்ணு கொடுக்க எனக்கென்ன பைத்தியமா? கேள்விகள் நாலாப்பக்கமும் சம்மடியாய் இறங்கின. இயந்திரமாய் இனி இல்லறம் வேண்டாம் தங்கையின் குழந்தைகளே போதும் என்று நினைவில் ரவி தனிமரமாய்! துரோகங்களின் சவுக்கடியில் சிதைந்து ரணமாகியிருக்கிறது அவனின் இதயத் தசைகள்.



அடுத்த பகுதி - "அடங்கிப் போ என்று பெண் பிள்ளைகளுக்கு சொல்லித்தருவதை விட அரணாய் இரு என்று.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #24