முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், பிஜியில் தங்கி வேலை பார்க்கும் மகளின் நடவடிக்கை மீது சந்தேகம் கொண்ட பெற்றோர் கொடுத்த வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்
பிஜியில் இருக்கக்கூடிய ஒரு பெண்ணுடைய வழக்கு இது. அந்த பெண்ணுடைய பேரண்ட்ஸ் தான் என்னிடம் கேஸ் கொடுத்தார்கள். பெண்ணுக்கு பல்வேறு திருமண ஏற்பாடுகள் செய்தாலும், மாப்பிள்ளையை பார்க்க சரியான நேரத்தில் வராமலும், வரும் மாப்பிள்ளைகளை பிடிக்கவில்லை என்று சொல்கிறாள். அதனால் அவளது நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்படுகிறது என்று பேரண்ட்ஸ் சொன்னார்கள். தென் தமிழகத்தில் இருந்து, அந்த பெண் சென்னைக்கு வந்து பிஜியில் தங்கி வேலை பார்த்து வருவதாகச் சொன்னார்கள்.
நாங்கள் அந்த கேஸை எடுத்து கொண்டு, பெண் தங்கியிருந்த பிஜியின் அட்ரஸிற்கு சென்று பார்த்தோம். இரண்டு, மூன்று நாட்களாக அங்கு பார்த்த போதும், அந்த பெண் அங்கு இல்லை. அதன் பிறகு, அந்த பெண் வேலை பார்க்கும் ஆபிஸ் அட்ரஸிற்கு சென்று பார்த்தோம். கடைசியில் அந்த பெண்ணை அடையாளம் கண்டோம். பெற்றோருக்கு தெரியாமல், இங்கு ஒரு டூவீலர் வண்டியை அந்த பெண் வைத்திருக்கிறாள். ஆபிஸ் முடிந்து டூவிலரில் சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை ஃபாலோவ் செய்தோம். அந்த பெண், ஒரு பிளாட்டிற்குள் சென்றுவிட்டு, திரும்பி வெளியே வராததால், அடுத்த நாள் அந்த பிளாட் வாசலில் நிற்கிறோம். இந்த பெண் தனியாக வருவதும் போவதுமாக இருக்கிறாள்.
ஒரு வாரமாக இப்படியே செல்ல, சனிக்கிழமை அன்று, 25 வயது கொண்ட இந்த பெண், 35 வயதுடைய நபர் ஒருவருடன் வண்டியில் செல்கிறாள். அப்போது, அவர்கள் நண்பர்கள் மாதிரி பழகவில்லை எனத் தெரிந்தது. அதன் பிறகு, அந்த பெண் பிளாட்டில் அந்த நபரோடு இருப்பது எங்களுக்கு தெரிந்தது. உடனே, பெற்றோர்களிடம் போன் போட்டு விஷயத்தைச் சொல்லி வரவழைத்தோம். பெற்றோருடன், அந்த பிளாட்டின் கதவை தட்டினோம். அந்த பெண் கதவை திறந்து பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியடைந்தாள். பெண்ணும், அந்த நபரும் இருந்த வீட்டில், முழுக்க முழுக்க சிகரெட் துண்டுகளும், மது பாட்டில்களாகவும் இருந்தது. அந்த பெண்ணிடம் விசாரித்ததில், பிஜியில் தங்கிக் கொண்டும் சில நேரத்தில் இந்த பிளாட்டிற்கு வருவதாகவும் சொன்னார். இந்த ரிலேஷன்ஷிப்பிற்கு பெயர், ஸ்லீப் ஓவர் என்றும் சொன்னாள். பிஜியில் தங்கி அங்கேயும் பணத்தை கட்டிக்கொண்டு, போர் அடிக்கும் நேரத்தில் பிளாட்டிற்கு வந்து தங்குவதுமாக இருக்கிறாள்.
பெற்றோரை சமாதானப்படுத்தி, அந்த பெண்ணை வெளியே அழைத்து பேச ஆரம்பித்தேன். தானும், அந்த நபரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகச் சொன்னாள். அந்த நபரை தான் திருமணம் செய்வேன் என்று சொன்ன அந்த பெண்ணிடம் பேசி அறிவுரை கூறினேன். ஆனால், அவள் எடுத்த முடிவில் தீர்க்கமாக இருந்ததால், பெற்றோர் பற்றி யோசித்து பார்க்கச் சொல்லி அவளை கிளம்ப சொன்னேன். அவளும் அங்கிருந்து கிளம்பியதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். வயது வித்தாயசத்தில் ரிலேஷன்சிப்பில் உள்ளவர்களுக்கு போர் அடித்தால் திரும்ப வந்துவிடுவார்கள், அதனால் உங்களது பெண்ணும் திரும்ப வந்துவிடுவாள் என்று கூறி அவர்களை சமாதானப்படுத்தினேன். நாங்கள் நினைத்தப்படி, மூன்று மாதங்கள் கழித்து அந்த பெண் திரும்ப பெற்றோரிடமே வந்துவிட்டாள்.