2018, மத்திய பிரதேசம் தேர்தல் களம், வனவாசம் முடிந்தது, 'மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது' என்பதே காங்கிரஸ் கட்சியின் பிரதான பிரச்சாரமாக இருந்தது. மக்களும் அதை ஏற்றுக்கொண்டனர். இதே பிரச்சாரத்தை 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே காங்கிரஸை நோக்கி பாரதிய ஜனதா கட்சி வைத்தது. இந்த ஒற்றை வரி பிரச்சாரம் 15 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியை காலி செய்தது. தற்போது 13 ஆண்டுகாலம் முதல்வராக கோலோச்சிய பாஜகவின் சிவராஜ் சிங் சௌகான் ஆட்சியை காலி செய்துள்ளது.
இந்தியாவின் இதயம் என வர்ணிக்கப்படும் மாநிலம் மத்தியபிரதேசம். 7.2 கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் 80 சதவிதம் மக்கள் இந்துக்கள். மீதியுள்ள 20 சதவிதம் பிற மதத்தினர். விவசாயமே பிரதானம், தொழிற்துறை வளர்ச்சியும் அபாரம். சாதி கட்டுமானத்தின் பிடியில் உள்ள மாநிலமும் கூட.
1952 முதல் 1967 வரை மத்திய பிரதேசம் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. முதல் முதல்வராக ரவிசங்கர் சுக்லாவும், அதன் பின்னர் பகவான் ரத்தோர், கைலாஷ்நாத், துவர்க பிரசாத் மிஸ்ரா என காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பதவியில் இருந்தனர். 1967ஆம் ஆண்டே மத்திய பிரதேசத்தில் மாற்றம் வந்துவிட்டது. சம்யுக்த வித்யா தளம் என்கிற கட்சி, சம்யுக்த பொதுவுடமை கட்சி, பிரஜா பொதுவுடமை கட்சி மற்றும் ஜனசங்கம் இணைந்த கூட்டணி 1967ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விரட்டிவிட்டு அம்மாநில ஆட்சியை பிடித்தது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத முதல் முதல்வராக கோவிந்த் நாராயண் சிங் பதவிக்கு வந்தார். 1969 வரை அந்தப் பதவியில் இருந்தார். கூட்டணிக் குழப்பம் போன்றவற்றால் கோவிந்த் முதல்வர் பதவியில் இருந்து இறங்கிவிட நரேஷ் சந்திரசிங் முதல்வராகப் பதவியேற்றார். மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் 10 நாட்களில் பதவியில் இருந்து இறங்கினார். அந்தக் கூட்டணிக்குள் குழப்பத்தை உருவாக்கி எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை காட்டி ஷ்யாம் சரண் சுக்லா முதல்வர் பதவியில் அமர்ந்தார். சுமார் 3 வருடகாலம் அவர் ஆட்சி நடைபெற்றது.
அர்ஜுன் சிங்
1972ல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பிரகாஷ் சந்திரா பதவிக்கு வந்தார். காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தால் 3 ஆண்டுகளிலேயே பதவியில் இருந்து இறங்கினார், மீண்டும் ஷ்யாம் சரண் சுக்லா பதவியில் அமர்ந்தார். இந்திராகாந்தியின் நெருக்கடி நிலை சட்டம் வாபஸ் வாங்கப்பட்டபின் நடைபெற்ற 1977ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநில பொதுத்தேர்தலில், ஜனதா தளம் வெற்றி பெற்றது. அக்கட்சியை சேர்ந்த கைலாஷ் சந்திர ஜோஷி, விரேந்திரகுமார், சுந்தர்லால் பத்வா என 3 முதல்வர்கள் 1977 ல் இருந்து 1980 மார்ச்க்குள் அடுத்தடுத்து பதவியில் அமர்ந்து இறங்கினர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்து மத்தியபிரதேச ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தியது.
1980ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று அப்போது இளம் தலைவராக இருந்த அர்ஜுன் சிங் முதல்வராக்கப்பட்டார். 5 ஆண்டுகள் முதல்வராக இருந்தார் அர்ஜுன் சிங். 1984 டிசம்பர் மாதம் 3ந்தேதி மத்தியபிரதேச தலைநகர் போப்பாலில் யூனியன் கார்பைடு என்கிற தனியார் – அரசு கூட்டு நிறுவனத்தில் இருந்து விஷவாயு வெளியாகி காற்றில் பரவியால் 20 ஆயிரம் பேர் இறந்தனர், 6 லட்சம் பேர் உடனடி பாதிப்புக்கு உள்ளாகினர், இன்றுவரை பிறக்கும் குழந்தைகள் ஏதாவது ஒரு ஊனத்தோடு பிறக்கும் அளவுக்கான மாபெரும் விபத்து அது. இதில் அந்த கம்பெனியின் உரிமையாளருக்கு ஆதரவாக செயல்பட்டார் என குற்றச்சாட்டுகள் எழுந்ததால் முதல்வராக இருந்த அர்ஜுன் பதவி விலகினார். மற்றொரு மூத்த தலைவரான மோதிலால்வோரா முதல்வரானார்.
1985 தேர்தலிலும் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. மோதிலால் வோராவே மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். 3 ஆண்டுகள் முடியும் தருவாயில் காங்கிரஸ் தலைமை மோதிலாலிடம் இருந்த முதல்வர் பதவியை பறித்து அர்ஜுன் சிங்கிடம் தந்தது. பதவியில் இருந்த அர்ஜுன் சிங், பதவிக்கு வந்த ஓரே ஆண்டுக்குள் லாட்டரி ஊழலில் சிக்கினார். இதனால் மீண்டும் அவரின் பதவியை காங்கிரஸ் பறிக்க முடிவு செய்து அடுத்த முதல்வர் யார் என்கிற தேடலில் இறங்கியது. அப்போது எம்.பியாக இருந்த மாதவராவ் சிந்தியா பெரும் முயற்சி எடுத்தார். அவர் அந்தப் பதவிக்கு வந்துவிடக்கூடாதென அர்ஜுன்சிங் முடிவு செய்து தன் ஆதரவு எம்.எல்.ஏக்களை பாதுகாத்தார். இதனால் மாதவராவ் சிந்தியாவின் ஆசை நிராசையானது. மீண்டும் மோதிலால்வோரா முதல்வராக்கப்பட்டார். 10வது ஆண்டின் இறுதியில் ஆட்சி காலத்தின் கடைசி இரண்டு மாதம் மட்டும் ஷ்யாம் சந்திரசுக்லா என பதவியில் இருந்தார்.
மாதவராவ் சிந்தியா
காங்கிரஸ் மீதான பெரும் ஊழல் குற்றச்சாட்டுகள், போபால் விஷவாயு பிரச்சனை போன்றவை 1990ல் தேர்தல் களத்தில் எதிரொலித்தது. பாஜக சுலபமாக வெற்றி பெற்றது. அக்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சுந்தர்லால் பத்வா பதவிக்கு வந்தார். 3 ஆண்டுகளுக்குள் இந்த ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தது. ஓராண்டுக்குப் பின் தேர்தல் வந்தது. 1993ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திக் விஜய் சிங் முதல்வராகப் பொறுப்பேற்றார். தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் 2003 வரை முதல்வர் பதவியில் அமர்ந்து கோலோச்சினார்.
உமாபாரதி
2003ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் உமாபாரதி தலைமையில் தேர்தலை சந்தித்தது பாஜக. 'மாநிலத்தில் மாற்றம் வேண்டும்' என என்றும் '10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும்' என்றும் பிரச்சாரம் செய்து பாஜக மாபெரும் வெற்றி பெற்றது; உமாபாரதி முதல்வரானார். கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறாகப் பேசினார் என்கிற வழக்கில் அரஸ்ட் வாராண்ட் போடப்பட்டதால், பாஜகவின் உட்கட்சி எதிரிகள் உமாபாரதியின் முதல்வர் பதவியை பறிக்க வைத்தனர். இதனால் ஓராண்டு முடிவதற்குள் பதவியில் இருந்து இறங்கினார்.
அடுத்ததாக பாபுலால் குரார் என்பவர் முதல்வராக்கப்பட்டார். இவர் ஓராண்டு மூன்று மாதம் பதவியில் இருந்தார். அவரை அழகாக அந்த பதவியில் இருந்து காலி செய்தார் எம்.பியாக டெல்லியில் கோலோச்சிய ஒரு எம்.பி.அவர் 2005 நவம்பர் மாதம் முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பின்பே ஒருதொகுதியில் இடைத்தேர்தலை வரவைத்து வெற்றிபெற்றார். ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள், கொலை குற்றச்சாட்டுகள் அத்தனையையும் தாண்டி அடுத்து வந்த 13 வருடங்கள் இவர் தான் மத்தியபிரேதசத்தின் முதல்வர். இவரது ஆட்சியில் நடந்த ஊழல் ஒன்றில் சம்மந்தப்பட்ட சாட்சிகள், குற்றம் சாட்டியவர்கள் என 50 பேர் அடுத்தடுத்து பலவிதமாக மரணம் அடைந்தனர். அந்த முதல்வர், அவரது ஆட்சி நடந்த கதை, அது முடிந்த கதை... அடுத்த பகுதியில்.
முந்தைய பகுதி:
பாஜகவை சமாளிக்க இவர்தான் சரி? - முதல்வரைத் தெரியுமா? #11