பள்ளியில் படிக்கும் பெண்ணுக்கு ஏற்பட்ட காதலால், பெற்றோரை வெறுத்த சிறுமிக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
பிளஸ் 2 படித்துக்கொண்டே நீட் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு பெண், 4 வருடமாக ஒரு பையனை காதலித்துக் கொண்டிருக்கிறாள். சிறுமி 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போதே இந்த விஷயத்தைத் தெரிந்துக்கொண்ட பெற்றோர், மகளை திட்டியும், அடித்தும் பார்த்துகிறார்கள். ஆனால், அந்த பெண் பிடிவாதமாக இருந்துள்ளார். காலப்போக்கில், அப்பா அம்மா மீது கோபம் வந்து, பையன் மீது பையனுடைய குடும்பத்தின் மீது அதிகளவில் அட்டாச்மெண்டாக இருந்திருக்கிறார். சிறுமியினுடைய அப்பா அம்மாவை பற்றி தப்பு தப்பாக பையன் சொன்னதன் காரணமாக, ஒரு காலக்கட்டத்தில் அம்மா அப்பாவை நம்பாமல் அவர்களிடம் பேசுவதையே சிறுமி நிறுத்திவிட்டார். இதில் இருந்து மகளை மாற்ற வேண்டும் என்று தான் அப்பா அம்மா என்னிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.
பையனை பற்றி விசாரித்ததில் பெண்ணுடைய பெற்றோருக்கு இதில் விருப்பமில்லை. அந்த பெண்ணிடம் நான் பேசியதில், என்ன நடந்தாலும், அந்த பையனை மட்டும் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என அந்த பெண் பிடிவாதமாக இருக்கிறார். தினமும், இந்த பிரச்சனை தான் நடந்துகொண்டிருக்கிறது. அப்பா அம்மாவை மீறி திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்றும் சிறுமி சொல்கிறாள். எப்போது, தனியாகவே இருக்கிறாள், தங்களிடம் பேச மாட்டிக்கிறாள் என்று பெற்றோர் சொல்கின்றனர். எப்போது, அடித்தும் திட்டுவதுமாக இருந்தால் எப்படி பேச தோன்றும் என்று சிறுமி சொல்கிறாள்.
படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நீட் தேர்வு வரை அந்த காதலை சில காலம் நிறுத்தி வைத்துக்கொள்ளும்படி அந்த பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுத்தேன். காதலராக இருந்தாலும், உனக்கான பவுண்டரிஸை எப்போதும் செட் செய்துக்கொள்ளும்படி அவளிடம் சொன்னேன். காதலை பற்றி பேசுவதை மகளிடம் பேச வேண்டாம் என்று பெற்றோரிடம் சொன்னேன். சிறுமி கேட்டதன் பேரில், அப்பா அம்மாவும் அந்த பையனிடம் மகள் எப்போதாவது பேச அனுமதித்தனர். மகளை அடிக்காமல், காதலை பற்றி பேசாமல் அவளிடம் அன்பு காட்டி இந்த விஷயத்தை தள்ளிபோடும்படி பெற்றோரிடம் சொல்லி புரியவைத்தேன். முதலில், அப்பா அம்மாவினுடைய உண்மையான அன்பை அவள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக இந்த விஷயத்தை ஆறப்போடுமாறு கூறியிருக்கிறேன்.