குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
மெர்லின் என்பவருடைய வழக்கு இது. ஹிந்து பையனை காதல் செய்து திருமணம் ஏற்பாடு ஆகிறது. இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடைபெறுகிறது. பெண்ணிற்கு ஐம்பது பவுன் போட்டு பையனுக்கு ஐந்தரை பவுன் போடப்பட்டு மாப்பிளையிடமும் ஒரு லட்சம் பணத்தை கொடுக்கிறார் பெண்ணின் தந்தை. திருமணம் ஆன பின்னர் தான் எல்லாமே மாறுகிறது. சமையல் அறையில் அவளுக்கு அனுமதி கொடுக்கப்படவதில்லை. பேயிங் கெஸ்ட் மூலம் அவளுக்கு உணவு கொடுக்கப் படுகிறது. மாமியாருக்கு அவளைப் பிடிக்கவில்லை என்று புரிய வருகிறது. எல்லாரும் செலவுக்கு வேறு இவளிடம் பணம் கேட்கிறார்கள். கணவனும் வேலைக்கு போவதில்லை. இப்படியே அடிக்கடி தொகையைக் கேட்டு கொண்டே இருக்கின்றனர். ஒருமுறை மாமியார் பெண்ணிடம் வீட்டு கடனை அடைக்க வேண்டும் என அவளுக்கு போடப்பட்ட நகையைக் கேட்கிறார். பெண்ணின் பெற்றோர் இதைக் கூப்பிட்டு கேட்க மாமியார் கேட்கவில்லை என்று சமாளித்து விடுகிறார். ஆனாலும் லோனுக்கு கொடுக்க வேண்டியிருந்த தொகையை வங்கிக்கு சென்று பெண் பேரில் வைத்து கடனை கொடுக்கிறார். இதற்கு பின்னர் மாமியாருக்கு மருமகள் மீது வெறுப்பு வந்து விடுகிறது. பையனிடமும் பேசி மனதை மாற்றி விட அவனுக்கும் மனைவி மீது பிடிப்பு போய்விடுகிறது.
பெண்ணின் சம்பளம் கேட்டும், ஏ.டி.எம் கார்டு வாங்கியும் அடிக்கடி இஷ்டத்திற்கு செலவு செய்வது என்று போகிறது. பையனின் அம்மா இவளுக்கு குழந்தை பெறமுடியவில்லை என்று பேசி காட்ட இது நாங்கள் இருவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியது என்று சொன்னாலும் பையனோ இவளிடம் தவறான போக்கில் தான் பேசுகிறான். கொஞ்சம் செட்டில் ஆனவுடன் பார்த்து கொள்ளலாம் என்று எடுத்து சொல்கிறாள். இவள் பார்ப்பதோ ஐ.டி. வேலை. எனவே வேலை முடிந்து இரவு தாமதமாக வந்தாலும் மாமியார் இவள் நடத்தையைத் தப்பாக பேசுகிறார். இவளுக்கும் கணவன் மீது விருப்பம் போய் விடுகிறது. ஒருமுறை அம்மா பேச்சை கேட்டு கொண்டு அடிக்கும் வரை ஆகிறது. பின்னர் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து விட அவர்கள் வந்து பெண்ணை அழைத்து செல்கிறார்கள். தான் வந்து வீட்டில் விடுவதாக கணவன் சொல்லி காரில் வந்து பெண் வீட்டிலேயே விட்டு விட்டு காரை நிப்பாட்டி சென்று விடுகிறான்.
மறுநாள் காரை திருடிவிட்டார்கள் என்று போலீஸில் புகார் கொடுக்கிறான். நடந்ததை எடுத்து சொல்ல போலீஸ் அதிகாரியும் புரிந்து கொண்டு மாமியாருக்கு, பையன் வீட்டிற்கு அறிவுரை கூறி அனுப்பி விடுகிறார்கள். அவன் அதன் பின்னர் இவளை பார்க்க வருவதே இல்லை. அதற்கு பிறகு தான் என்னை மெர்லின் பார்க்க வந்திருந்தார். பெண்ணிற்கு கணவனுடன் வாழ வேண்டும் என்று தான் பிரியப்படுகிறாள். எனவே சேர்ந்து வாழ வேண்டும் என்று மனு போட அவனோ, இவள் மீது ஒழுக்கம் கெட்டவள் என்று வழக்கு போடுகிறான். இப்படியே இரண்டு வருடம் போகிறது. இருவரும் வழக்கு நடக்கும் போது கூட பையன் எங்கேயாவது போய் வரலாம் என்று அழைத்து பார்க்கிறான். ஆனால் பெண்ணின் பெற்றோர் அனுமதிக்கவில்லை.
இதற்கிடையில், ஒரு நாள் தனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று சொல்லி மெர்லினை சந்திக்க வர சொல்கிறான். போய் பார்க்கும்போது ஒரு லட்சம் பணத்தை கையில் கொடுத்து உன் அப்பா கொடுத்தது என்று சொல்லி கை நீட்டி காசு வாங்கி விட்டாய். எனவே நீ ஒரு ப்ராஸ்டிடியூட் உன்னுடன் வாழ முடியாது என்று அவமரியாதையாக பேசி சண்டை போடுகிறான். இதனைக் கண்ட ஆபிஸில் இருந்தவர்கள் அங்கே வருவதற்குள், அவன் கீழே இறங்கி காரை எடுக்க ஸ்டார்ட் செய்கிறான். பின்னாடியே சென்ற அவள், காரை எடுப்பதற்குள் முன் சீட்டில் அமர்கிறாள். காரில் ஏறியவுடன் மிக வேகமாக ஒட்டி அவளை பயமுறுத்துகிறான். மெர்லின் தன் சகோதரனுக்கு அவசர தகவல் கொடுத்ததால் போலீஸ் மூலம் வந்து காப்பாற்றினர். இதற்கு மேல் முடியாது என்று அந்தப் பெண்ணிற்கு புரிந்தது. ‘தி டிவோர்ஸ் ஆக்ட்’ மூலம் 10 கேப்பிடல் ஏ என்ற சட்ட பிரிவின் அடிப்படையிலே தாக்கல் செய்யப்பட்டு பையன் வீட்டில் திருப்பி கொடுக்க வேண்டியதை பெறப்பட்ட பின் விவாகரத்து ஆனது.