Skip to main content

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #07

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

iraval edhiri part 7

 

இரவல் எதிரி - முந்தைய பகுதிகள்

 

மேகா தன் பெட்டியைத் திறந்து பொருட்களை அடுக்கிக் கொண்டு இருந்தாள் அலமாரியில்! சிறு பிள்ளையில் இருந்தே வாழ்ந்த வீடுதான் என்றாலும் ஒரு சிறு விலகலை திருமணம் கொண்டு வந்திருக்கிறது என்பது நகைமுரண். சராசரியான தாம்பத்திய வாழ்க்கையை அவள் மாறனுடன் மேற்கொண்டு இருந்திருந்தால் இப்படியொரு விலகல் தோன்றியிருக்காமல் போயிருக்கலாமோ?

 

லேப்டாப்பை எடுத்து மேஜையின் மீது வைத்தாள் ஸ்கீரின் ஓப்பன் ஆகி விஷ்வா குழந்தையாய் சிரித்தான். மெயிலை தொட்டதும். நான்கைந்து செய்திகள் அலுவலகத்தில் இருந்து வந்திருந்தது. அவளுடைய டீம் மெம்பர்ஸ் நாளை இரவு கிளம்புவதாகவும் மாலிற்கு ஒட்டினாற்போல ஒரு பிளாட்டில் அவர்கள் தங்க ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இண்டீரியர் ஒர்க் ஆரம்பித்து பாதிக்கும்மேல் ஆகிவிட்டது. நீங்கள் முதலில் கவனிக்க வேண்டிய வேலைகள் என்று சிறு பட்டியல் ஒன்றை ஜி.எம் அனுப்பியிருந்தார். அனைத்திற்கும் பதில் தகவல்களை அனுப்பிவிட்டு விரல்களை நெட்டி முறித்தாள். லேப்டாப்பில் நோட்பேடை ஓப்பன் செய்து நாளை முதலில் ஆரம்பிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டாள்.

 

காற்று ஜன்னலின் திரைச்சீலையை மீறி அவளை நனைத்தது. வேப்பமரத்தின் வாசமும் அதனோடு இழைந்தது. அம்மா கையில் சூடான எதையோ எடுத்து வந்தாள். ஹாலில் டிவியின் இரைச்சல், காணாமல் போன மாணவர்களின் நிலையைப் பற்றி உருக்கமாக விவாதித்துக் கொண்டு இருந்தார்கள். ‘இரண்டு பிள்ளைகள் இறந்த நிலையில் ஒரு மாணவன் மருத்துவ மனையில் அட்மிட் ஆகியிருக்கிறான். கேஸ் சிபிஐக்கு மாறிய பிறகும் இத்தனை மெத்தனம் இருக்கிறது. இனிவரும் காலங்களில் அரசு, சட்டம், போலீஸ் என்று யாரையும் நம்ப முடியாது.’ என்று பொதுமக்கள் தொடர்பாக ஒருவர் காரசாரமாகப் பேசிக் கொண்டு இருக்க, பாதி மூடியிருந்த கதவை அகல விரித்து உள்ளே வந்த அம்மாவின் கரங்களில் காபி இருந்தது.

“என்ன மேகா வேலை பார்க்கிறீயா?” காபி தம்ளர் கைமாறியது.

“மெயில் செக் பண்றேம்மா நாளையிலிருந்து போகணும். விஷ்வா எங்கே?”

“பரிதியோட விளையாடிட்டு இருக்கான். உங்க அண்ணியும் அண்ணனும் வீட்டிலே இல்லை அவ பக்கத்துல ஏதோ உறவுக்காரங்க விசேஷம்ன்னு போயிருக்காங்க. எனக்கு உன்கிட்டே கொஞ்சம் பேசணும் மேகா.” சொல்லிவிட்டு மகள் ஒப்புக்கொள்வாளா மாட்டாளா என்ற ஏக்கத்துடன் பார்க்கும் அம்மாவிடம்,

“என்கிட்டே பேச என்னம்மா பர்மிஷன் உனக்கு?” என்றாள்.

“நாம பார்த்து நல்லது கெட்டது செய்த பிள்ளைங்க ஒரு கட்டத்திற்கு உயரம் வந்தபிறகு எல்லாத்துக்கும் அவங்களை எதிர்பார்க்கிற நிலைமை பெத்தவங்களுக்கு வந்திடறதே. அதிலும் சொந்தக்கால்ல நிக்கிற பிள்ளைங்கன்னா தன்னோட வாழ்க்கைக்குள்ளே அபிப்ராயம் சொல்லக் கூட பெத்தவங்களை அவங்க அனுமதிக்கிறது இல்லை.”

 

அம்மாவின் கரத்தை எடுத்து தன் கரங்களில் புதைத்தாள் அதில் பொதிந்திருந்த இளஞ்சூடு ரம்மியமாக இருந்தது.

“நல்ல வைராக்கியம் மேகா உனக்கு. 13 வருஷம் ஒத்தையாளா புள்ளையும் வைச்சிகிட்டு நாங்களும் இல்லாம தனியா அல்லாடுனியே? உன்னை நினைக்காத நாளில்லை மேகா. இப்பக் கூட, கைக்குழந்தையோட சென்னை வரமாட்டேன்னு பிடிவாதமா நீ பேசினது நினைவுக்கு வருது. நாட்கள்தான் எத்தனை வேகமா போகுது. இப்போவாவது எங்கக்கூட வந்து இருக்கணும்ன்னு தோணுச்சே?”

“ம்....நாட்களுக்கு எந்த கவலையும் இல்லை, நகரும் கடிகார முட்களைப் போல அதுவும் தன் வேலை சரியா செய்யுது. கத்தியில நகரும் நத்தையின் நிலையிலே நான் இருந்தேனே, மாறனோட பிரிவுக்குப் பிறகு நான் என்னை நிலைப்படுத்திக் கொள்ள இந்த தனிமை தேவைப்பட்டது. சென்னையிலேயே அதை செய்து இருக்கலாம் ஆனால் அவரை அடிக்கடி சந்திக்க வேண்டி வருமேன்னுதான் நான் பெங்களூர் போனது.”

“ம்...என் வரையில் மாறன் இப்பவும் நல்லபிள்ளைதான். இந்த கால பிள்ளைங்க சின்ன தப்பைக் கூட அனுசரிக்க மாட்டேன்றீங்க? சட்டுன்னு பிரிஞ்சி போற முடிவை எடுத்துடறீங்க? நீ கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம் மேகா. நான் இப்போ பேசறது கூட உனக்குப் பிடிக்காம போகலாம். மாறன்கிட்டே தப்பிக்க மட்டுமல்ல எங்கிட்ட இருந்தும் தப்பிக்கத்தான் நீ பெங்களூர் போயிருக்கே மேகா. நீ உன் சொந்தக் கால்ல நிக்கலாம், பொருளாதாரம், வசதி,வைராக்கியம் எல்லாம் ஒரு கட்டத்திலே நம்மை ஒதுக்கி வைக்கும் மேகா. அப்பத்தான் உன் துணையோட நினைப்பு உனக்கு வரும்.”

“அம்மா.....”

“உன் அண்ணி ரொம்ப நல்லவ. நீ இங்கே வர்றேன்னு தகவல் சொன்னப்ப கூட மேகா நம்ம வீட்டு பொண்ணு. இத்தனை நாள் அவளைத் தனியா விட்டதே தப்பு. அவளோட பிடிவாதத்தை விட்டு இறங்கி இங்கே வர்றேன்னு சொல்றான்னா நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். அவளா சொல்கிறவரையில் தொந்தரவு பண்ண வேண்டான்னு எங்ககிட்டே திட்டவட்டமா சொல்லிட்டா?! மகனோட குடும்பம் தழைச்சி ஓங்குது நீ மட்டும் தனிமரமா நிற்பதைப் பார்க்க மனசுக்கு கஷ்டமாயிருக்குடி. மாறன் ஒண்ணும் அத்தனை மோசமான பையன் இல்லை மேகா.”

“அம்மா ....”

“உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஒத்துப் போகாத காரணம் எனக்குத் தெரியலை. ஆனா என் பொண்ணு தப்பா முடிவெடுக்க மாட்டான்னு உங்கப்பாவும், காலப்போக்கில் சரியாகுன்னு நானும் காத்திருந்தோம். நீ இங்கேயிருந்து போனபிறகு கூட மாறன் அடிக்கடி இங்கே வந்தார். அத்தை மேகாவை கண்டுபிடிக்கிறது ஒண்ணும் எனக்கு அத்தனை பெரிய கஷ்டமில்லை. ஆனா எங்களுக்கு ஒரு சின்ன பிணக்கு, அதை தீர்த்து வைக்க என் பக்கம் பெரியவங்க இல்லை. நீங்கதான் உதவணுன்னு நடையா நடந்தாரு. எனக்கு மேகா வேணுன்னு அப்பாகிட்டேயும் உங்க அண்ணன்கிட்டேயும் பேசினாரு, உன் பக்கத்தில் இருந்து ஒரு தகவலும் வராம போகவே இவங்க மெளனம் சாதிச்சாங்க. அதுக்குப்பிறகு அவனோட வரத்து நின்னுபோச்சு. மாறனைப் பார்த்து பல வருஷமாச்சு நீங்க இரண்டு பேரும் ஒண்ணு சேரணும்டி மேகா.”

“அம்மா எனக்கு மட்டும் என் வாழ்க்கையை இழக்கணும்ன்னு ஆசையா? கணவன் மனைவி உறவில் முக்கியம் பரஸ்பர அன்பும் நம்பிக்கையும், அது ஆட்டம் கண்டதே?”

“மேகா மாறனை நீ காதலிச்சித்தானே கல்யாணம் செய்துகிட்டே, அவருக்கு வேற யாரோடையாவது...?”

“இல்லைம்மா அவர் அப்படிப்பட்டவர் இல்லை.”

“ஒரு புருஷனை மனைவி வெறுக்கக் காரணம் அந்த துரோகம்தான் அதுவும் இல்லைன்னு சொல்றே பின்ன என்னதான் நடந்தது.”

“அம்மா இப்போ என்னோட நினைப்பு பூராவும் விஷ்வா மட்டும்தான் அவனைத்தாண்டி நான் எதையும் எனக்குன்னு யோசிக்கத் தயாரா இல்லை அதனால அந்த பேச்சை விடுங்க. கொஞ்சநாள்லே நானே எல்லாத்தையும் சொல்றேன் எனக்கு கொஞ்சம் டயம் கொடும்மா. ஆரம்பத்தில் இருந்த மனதைரியம் இப்போ இல்லைம்மா. வேலை பொருளாதாரன்னு அவனை நிறைய தனியா விட்டுட்டேன். என்னோட சின்னவயசுலே நான் அனுபவித்த உறவுகளின் அனுசரனையை என் பிள்ளைக்கு கொடுக்காம விட்ட குற்றவுணர்ச்சி என்னைக் கொல்லுது. பாட்டி தாத்தா மாமான்னு நியாயமான குடும்ப முறையைக் கூட அவனுக்கு தர என்னால முடியலை.”

“தந்தையோட கவனிப்பும், வழிநடத்தலையும் விட்டுட்டுடியே?! மேகா. காலம் எல்லாத்தையும் மாற்றும் இதுக்கா நாம கோபப்பட்டோம், தப்பான முடிவு எடுத்திட்டோமோன்னு யோசிக்க வைக்கும். விஷ்வாவைப் பத்தி கவலைப்படாதே அவன் ஐந்துதான் எப்படியும் வளைச்சிடலாம், தாய்மைக்கு வயசு வித்தியாசம் கிடையாது மேகா, உன் பிள்ளையின் எதிர்காலத்தைக் குறித்து நீ எத்தனை கவலைப்படறீயோ, அதே போலத்தான் நான் என் பிள்ளையின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படறேன். நீ சின்ன குழந்தையில்லை, விஷ்வாவுக்காக மறுபடியும் ஒரு முறை யோசி.” என்ற அம்மாவின் முகத்தை ஒருமுறை கூர்ந்து நோக்கிவிட்டு அவர் மடியில் சாய்ந்து கொண்டாள் மேகா. அம்மா சொன்னது உண்மைதான் காலம் தான் எத்தனை மாற்றங்களை செய்துவிடுகிறது. எத்தனை மறைத்தாலும் மாறன் இன்னமும் அடி மனதில் அமர்ந்து கொண்டு இம்சித்துத்தானே இருக்கிறான்.

 

மேகாவின் மனம் ஒருபுறம் குழப்பங்களால் சூழப்பட்டுக்கொண்டிருக்க, குழந்தை கடத்தல்காரர்களை பிடிக்க துப்புதுலக்கும் பணிகளில் தீவிரமாகியிருந்தது சிபிஐ.

 

வேந்தன் ஜீப்பில் இருந்து இறங்கி அந்த சிறுவனை கையைப் பிடித்து அழைத்து வந்தான். தட்டுத்தடுமாறி நடந்து வராமல் ஒரே நேர்க்கோட்டில் சீராக அந்த சிறுவன் நடந்து வந்தான். மாறன் திடுமென்று போன் செய்து அவனை அழைத்து வரச்சொல்லியிருந்தது வியப்பை ஏற்படுத்தியிருந்தது வேந்தனுக்கு என்னவாக இருக்கும் ஆனால் காரணம் இல்லாமல் மாறன் சார் ஏதும் செய்ய மாட்டார் என்று புரிந்ததால் வேந்தன் எந்த கேள்வியும் கேட்காமல் அவனை அழைத்து வந்திருந்தான்.

“என்ன சித்தப்பா தீடிர்னு இங்கே கூட்டிட்டு வந்திட்டீங்க?”

“சீனியர் ஆபிஸர் கூட்டிட்டு வரச்சொன்னாங்க சிவா. எதுக்குன்னு இனிமேதான் கேட்கணும்.”

“யார் அவர்?”

“மாறன். என்னோட சீனியர் ஆபிஸர், ஏன்டா தம்பி?”

“இல்லை நான் படிக்கணும். நீங்க புதுசா புக் வேற வாங்கிட்டு வந்து இருக்கீங்க இல்லையா அதனால்தான்”

“சீக்கிரம் போயிடலாம்.” வேந்தன் அந்த சிறுவனின் கையைப் பற்றி அழைத்து வந்தான். முகப்பை அடைந்ததும்,“உங்க ஆபீஸ் எப்படியிருக்கும் சித்தப்பா எனக்கு ஒண்ணுண்ணா சொல்லிட்டே வாங்களேன்.”

“இது கமிஷனர் ஆபீஸ் நிறைய போலீஸ்காரங்க காவல் இருப்பாங்க. அவங்க கையிலே துப்பாக்கி எல்லாம் இருக்கும். வரவேற்பில் இருக்கிறவங்க கிட்டே நாம எதுக்கு வந்திருக்கோன்னு சொன்னா அவங்க நம்மை கமிஷனரின் வசதி கேட்டு அங்கே கூட்டிட்டுப் போவாங்க, அதுவரைக்கும் காத்திருக்கணும்.”

“இங்கே நிறைய செடிகள் எல்லாம் இருக்குல்லை.....”

 

வேந்தன் சற்று நின்று,“உனக்கு எப்படி தெரியும்?”

“அதான் எல்லாத்துக்கும் தண்ணி தெளிக்கிறாங்களே வெயிலோடு அந்த நீர் மண்ணில் கலக்கும் போது ஒரு வாசனை வருமே நம்ம வீட்டுத் தோட்டத்திலேதான் தினமும் அந்த வாசனை வருமே?” கேமரா வழியாக மாறன் அவர்களைப் பார்த்துவிட்டு, அவர்களை நோக்கி வந்தான்.

“ஸார் இதுதான் சிவா, என் அண்ணன் மகன் நீங்க இவனை அழைச்சிட்டு வரச்சொன்னீங்களே?” என்று வேந்தன் சொன்னதும் மாறன் இருந்த திசை நோக்கி,“வணக்கம் மாறன் அங்கிள்.” என்றான். அவனின் தலை சற்றே உயர்ந்து மாறனின் முகத்தை நோக்கி பார்வையை வீசுவதைப் போல இருந்ததை மாறன் குறித்துக் கொண்டான்.

 

மாறன் கரங்களை அவனை நோக்கி நீட்டி கை பிடித்துக் குலுக்கினான். 

“அங்கிள் நீங்க எங்க சித்தப்பாவை விடவும் நல்ல உயரமாக இருக்கீங்க?”

“எப்படி கண்டுபிடிச்சே?”

“என்னோட கை அளவு உங்கிட்டே கை குடுக்கும் போது உயர்ந்தே அதை வைச்சித்தான். நீங்க நல்லா உயரமா இருப்பீங்கன்னு தெரிந்தது. உங்க உயரம் 6.2 சரியா இருக்கா? அதுவும் உங்க கை அளவை வச்சித்தான். என்னோட உயரத்துக்கும் நீங்க கை நீட்டின அளவினையும் அந்த இடைவெளியையும் கணக்கிட்டாவே போதுமே?!”

“சூப்பர் சிவா உனக்கு நல்ல அப்சர்வேஷன் பவர் இருக்கு.!”

“கண்களில் பார்க்க முடியாததை நான் மனக்கணக்கில் பார்க்கிறேன் அவ்வளவுதான் ஸார். உங்களுக்கு டைம் இருந்தா இந்த இடம் பற்றி கூட என்னாலே சொல்ல முடியும்.”

“சொல்லேன்...”

“நான் காரை விட்டு இறங்கியதும், இரண்டு பக்கமும் செடிகள் இருந்தது. நம்மைச் சுற்றி நாலு போலீஸ் ஆட்கள் நிற்கிறாங்க....நீங்க வரும்போது அவங்க தன்னோட ரைபிளை நகர்த்திட்டு உங்களுக்கு சல்யூட் வைச்சிசாங்க அவங்களோட ஷூ உரசும் சப்தம் சீரான மூச்சுன்னு எல்லாம் தெளிவாத் தெரிந்தது. அப்பறம் தன் காலில் இருந்த காலணியைக் கழட்டினான். இந்த தரை நல்ல பளபளன்னு மொசைக்கு வகையைச் சேர்ந்தது. ஜாக்கிரதையா நடக்கணும் இல்லைன்னா சட்டுன்னு வழுக்கிடும். இப்போதான் டெட்டால் போட்டு சுத்தம் பண்ணியிருக்காங்க போல ஆஸ்பிட்டலில் வர்றாமாதிரி ஒரு வாசனை வருது. இடது பக்கம் டிவியிலே ஏதோ நியூஸ் சேனல்....! எதிர்லே இன்னைக்கு ட்யூட்டியிலே ஒரு லேடி இருக்காங்க அவங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போனில் பேசும் போது கவனிச்சேன். நாம இப்போ கமிஷனரை பார்க்க வந்திருக்கோன்னு சித்தப்பா சொன்னாங்க. அவரோட அறை அநேகமா இடது பக்கத்தில் இருந்து ஒரு பத்து பதினைந்து அடி இருக்கிற லிப்டுக்கிட்டு இருந்து தொடரும். ஏன்னா நீங்க வரும்போது, வேந்தன் வந்தாச்சான்னு கேட்கிறதுக்கு முன்னாடி லிப்ட்டில வர்ற சின்ன பீப் சத்தம் கேட்டது. அதுக்கு பிறகு சரியா 30 விநாடிகளில் நீங்க வந்திட்டீங்க ஸோ நான் சொன்னது எல்லாம் சரியா அங்கிள்.”

 

மாறன் வாய்பிளந்து நின்று கொண்டிருந்தான். அவன் சொன்ன அத்தனையும் சரியாய் இருந்தது. “கிரேட் மை பாய். எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு சிவா. இன்னையில் இருந்து நீ என் பிரண்ட் சரியா?!” அச்சிறு கைகளைப் பற்றிக் குலுக்கினான். “வேந்தன் இந்த குட்டிப்பையன் நிச்சயம் பெரிய ஆளா வருவான் பாருங்க....!”

“தேங்யூ ஸார்.”

“அங்கிள் எனக்கும் உங்களை மாதிரி சிபிஐல சேரணுன்னு ரொம்பவும் ஆசை. ஆனா.....”

“உன்னால முடியும். அதுக்குண்டான எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். விக்ரம் இன்னும் படிச்சு பெரிய ஆளா வரணும். அதுக்கு முன்னாடி இப்போ உன்னோட ஐக்யூக்கு இன்னொரு டெஸ்ட் நீ ரெடியா?”

 

சிறுவன் உற்சாகமானான்.“நான் ரெடி அங்கிள் என்ன செய்யணும்.?”

 

மாறன் வேந்தனிடம் திரும்பினான் ‘வாங்க’ என்பதை போல சைகை காட்டி லிப்டில் ஏறி மூன்றாவது தளத்தை அடைந்தார்கள். “நம்ம கேஸ்லே ஒரு முக்கியமான க்ளூ கிடைச்சிருக்கு என்னன்னா? கடத்தப்பட்டு இறந்து போன பசங்களோட பிரேத பரிசோதனை அறிக்கை வந்திட்டது. அதில் ஒரு விசித்திரமான விஷயம், இறந்து போன பிள்ளைகளோட கைவிரல் நகங்களில் சிறு சிறு புள்ளிகள் ஒரே நேர்க்கோட்டில் போடப்பட்டு இருக்கு. எனக்கு அது கண்தெரியாதவர்கள் படிக்கிற பிரெய்லி வார்த்தைகளைப் போல தோணுது. மேபி அது சரியான்னு செக் பண்ணலான்னு தான் சிவாவைக் கூட்டிட்டு வரச்சொன்னேன்.”

“அவனால முடியுமா ஸார்? சொல்லியிருந்தா அவங்க டீச்சர் யாரையாவது கூட்டிட்டு வந்திருப்பேனே?”

“எனக்கு கொஞ்சநேரத்திற்கு முன்னாடி அந்த சந்தேகம் இருந்தது வேந்தன். இப்போ சத்தியமா இல்லை. அதுவும் விஷயம் வேற யார்மூலமாகவும் வெளியே போகக் கூடாது.” அவர்கள் கமிஷனரின் அறைக்கு முன்பு வந்திருந்தார்கள். கதவைத்தட்டி அனுமதி கேட்டு பெற்ற பின் உள்ளே நுழைந்தார்கள்.

“இந்த பிரச்சனைக்கு உண்டான தீர்வை இன்னும் கொஞ்ச நேரத்திலே தர்றேன்னு” சொன்ன மாறன் ஒரு பத்து பணிரெண்டு வயதில் சிறுவன் ஒருவனோடு உள்ளே நுழைவதைக் கண்ட கமிஷனரோ குழப்ப முடிச்சிகளை பற்றிக்கொண்டு வந்தார்.

 

தொடரும்...

 

- லதா சரவணன்.