"பறவையை பிரிந்த வலி ,
தரையில் புரண்டு அழுகிறது ,
ஒற்றை இறகு.
"வெட்டப்படும் மரம்
குயில் பாடுகிறது
இரங்கல் பாட்டு." -படைப்புக்குழுமம் வெளியிட்ட ’சாம்பல் மேட்டில் அமரும் வண்ணத்துப் பூச்சி’ என்னும் ஹைக்கூ தொகுப்பில் இருந்து, இப்படிப்பட்ட மென்மையாக கவிதைகளையும் அதில் பொத்தி வைக்கப்பட்டிருக்கும் வலிகளையும் தேடிப்பிடித்து ரசித்து ’உச்’ கொட்டிய மென்மையான ரசனை கொண்ட ராம், வதம் செய்யப் போகிறேன் என்று சொன்னதைக் கேட்டு கவியும், திலகாவும் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனார்கள்.
"டேய் ...ராம். என்னடா இது? இப்படி எல்லாம் பேசுற?" என்று அதிர்ச்சி விலகாத குரலில் கேட்டார் திலகா. " ஏன் சித்தி, நான் பேசுவதில் என்ன தப்பு இருக்கு? ரோட்டில் போகும் ஒரு நாயைக் கல்லால் அடித்தால், அது கூடத் திருப்பிக் குரைக்கிறது. கடிக்க வருகிறது. பெண்கள் மட்டும் எல்லா தவறுகளையும் பொறுத்துக் கொண்டு போகணுமா?ஆசிரியர்கள் என்பதன் அர்த்தம் தெரியுமா? "ஆசு " என்றால் குற்றம். குற்றங்களை நீக்கறவங்க தான் ஆசிரியர்கள். அவர்களே குற்றவாளிகளாய் ஆனால் , சட்டத்தை மக்கள் கையில் எடுக்க வேண்டியது நிலை வரத்தான் செய்யும்." என்று பொங்கினான் ராம்.
இரு கனம் தீர்க்கமாக அம்மாவையும் ராமையும் கூர்ந்து பார்த்த கவி, அழுத்தமான குரலில் பேச ஆரம்பித்தாள்.
"ராம், நீ சொல்றது கரெக்ட். உனக்கே இப்படியொரு தார்மீகக் கோபம் வருதுன்னா, உன் தங்கையான எனக்கு எப்படி வரும். அதிலும் பக்கத்தில் இருந்து கொடுமைகளைப் பார்க்க நேரும் போது என் மனநிலை எப்படி இருக்கும்?” என்று கேட்ட கவி... தொடர்ந்தாள்.
”பெத்து வளர்த்து ஆளாக்கும் அம்மாவிடமே ஒரு பெண் தன் அந்தரங்க விசயங்களை சொல்ல வெட்கப்படும் சமுதாயத்தில், பெண்மையை கேவலப்படுத்துவதும், பெண்களுக்கு அசிங்கமாக மெசேஜ் அனுப்புவதும், அசிங்கமான செய்திகளை அனுப்புவதும், அவர்களை அதற்கு உடன்பட வைக்க நிர்பந்தம் கொடுப்பதுமாக ஒரு பெண்ணே இருந்தால், அதுவும் ஒரு ஆசிரியையே அப்படி இருந்தால், பாதிக்கப்பட்ட மாணவி என்ன செய்வாள்? யாரிடம் போய் சொல்வாள்? பிள்ளைகள் தவறு செய்யும் போது அந்தக் காலத்தில், "கண்ணை மட்டும் விட்டுவிட்டு உடம்பை உரிச்சிடுங்க. என் பிள்ளை திருந்தனும்" -னு ஆசிரியர்களிடம் அம்மாக்கள் முறையிடுவாங்க. இப்ப ஆசிரியர்களே தவறு செய்தால் யார் தண்டிப்பது? அதான் நாங்களே சட்டத்தை கையில் எடுக்க நினைக்கிறோம்”. என்று கம்பீரமாக சொன்னாள் கவி.
கவியும், ராமும் பேசுவதைக்கேட்டு ஜவுளிக்கடை பொம்மை மாதிரி வாயடைத்து நின்றாள் திலகா.
திடீரென்று ராம்... "சித்தி. இதுக்கே இப்படி மைதாமாவில் கிண்டிய அல்வாவை சாப்பிட்ட மாதிரி வாய் அடைத்தால் எப்படி? கவி ஒரு கொலையே செய்திருக்கிறாள் தெரியுமா?”என்று சொல்ல, அதைக் கேட்டதும் திலகாவிற்கு இதயம் படபடவென்று அடித்து, கண்கள் இருண்டு, வயிறு அமிலம் சுரந்து, ஒரே நொடியில் நிற்க முடியாமல் தரையில் தள்ளாடி உட்கார்ந்தாள்.
அம்மாவின் நிலை கண்டு பதறிய கவி, அம்மா என்றபடி ஓடிப்போய் தண்ணீரை எடுத்து வந்து, குடிக்கக் கொடுத்து ஆசுவாசப் படுத்தினாள்.
ராமை முறைத்துப் பார்த்த கவி... "டேய் ராம் திரும்ப திரும்ப என் மீது உனக்கு சந்தேகமா? கொலை செய்கிற அளவுக்கு எல்லாம் நான் துணிச்சல்காரி இல்லைடா" என்று முயலுக்கு மூன்று கால்தான் என்பது போல சாதித்தாள்.
"கவி.. நீ நேரடியாக கொலை செய்யலை ஆனால் திட்டம் போட்டு கொடுத்தது உன்னுடைய இந்த மூளைதான்"
"நானா.. திட்டம் போட்டேனா"? என்று சிவாஜி அளவுக்கு நடிக்க முயற்சி பண்ணி பவர் ஸ்டார் மாதிரி சொதப்பினாள்.
"ஆமாம்.. லில்லி மிஸ்ஸை கொன்றது கவி அண்ட் கோ தான். எனக்கு தெரியும்"
"சும்மா ..உளறாதே ராம்"- என்று கடுப்பானாள் கவி.
" நான் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டேன். பி.டி.மிஸ் சாதனா, மாணவி தாரணி. நீ. மூன்று பேரும் சேர்ந்துதான் லில்லி மிஸ்ஸை கொலை பண்ணீங்க. எனக்கு எல்லா விஷயமும் தெரியும் கவி" என்று உண்மையை அழுத்தமாக சொன்னான் ராம்.
இவ்வளவு நேரம் உறுமிக் கொண்டிருந்த கவி உண்மையை ராம் கண்டுபிடித்து விட்டான் என்று அறிந்ததும் மயக்க ஊசி போட்ட சிங்கமென மதிமயங்கி நின்றாள்.
"கவி லில்லி மிஸ் விஷயத்தில் என்ன நடந்ததுன்னு நான் சொல்றதை விட, உன் திருவாய் மலர்ந்தால் ஆண்டாளின் திருப்பாவை மாதிரி இதமா இருக்கும்" என்று கிண்டல் செய்தான்.
" ராம் .. எப்படிடா ? இந்த மனநிலையிலும் இப்படி கிண்டலா பேசுற" என்று திலகா வியந்தாள்.
" சித்தி.. மனசுக்கு ரொம்ப அழுத்தம் கொடுத்தால் பலூன் மாதிரி வெடித்துவிடும். சில நேரங்களில் எண்ணங்களை பலூனில் இருக்கும் காற்று மாதிரி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்று தத்துவம் பேசி விட்டு, "கவி ..லில்லி மிஸ் விஷயத்தில் என்ன நடந்ததுன்னு சொல்லு" என்று ஆணியை திரும்ப திரும்ப அடித்தான்.
"லில்லி.. டீச்சர் மாணவிகளை தகாத பாதைக்கு தூண்டினார். தாரணி சொன்ன அத்தனை செயல்களும் தியாவுக்கும் நடந்தது. ஃபோனில் பேச சொல்றது, பிரின்ஸிபல் செய்யும் லீலைகளுக்கு ஒத்துப் போக சொல்றதுன்னு ஏகப்பட்ட டார்ச்சர் கொடுக்க, வேற வழி இல்லாம இவங்களை எல்லாம் சமாளிக்க வழி தெரியாம, தியா இறந்தாள். ஆனால் தாரணி எல்லா உண்மைகளையும் சாதனாவிடம் சொன்னாள். சாதனாவும் நானும் லில்லியை லேபில் விபத்து ஏற்பட வைத்து அதன் மூலம் கொலை செய்வது என்று முடிவு பண்ணினோம். லில்லி டீச்சர் பிராக்டிகல் தேர்வு வருவதால் அதிக நேரம் லேபில் தான் இருப்பார் என்ற செய்தியை தாரணி சொல்லிவிட்டு, லேபில் இருக்கக் கூடிய வேதிப் பொருள்கள் பெயர்களை எல்லாம் லிஸ்ட் எடுத்து கொடுத்தாள்...:
”ம்... சொல்லு சொல்லு...”-ராம் அவசரப்படுத்தினான்.
”அந்த கெமிக்கல் லிஸ்டை வைத்து கூகுளில் தேடினேன் எந்த அமிலத்தை வைத்து எப்படி விபத்து ஏற்படுத்த முடியும்? என்று அதில் கிடைத்ததுதான் பிக்ரிக் அமிலம் பத்தின டீட்டெய்ல். இதை வெப்பப்படுத்தும் போது வெடிக்கும் தன்மை கொண்டது. ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை விட இது அடர்த்தியானது என்று தெரிந்தவுடன், அதற்கான சூழ்நிலையை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்” என்று சொல்லிக்கொண்டே வந்த கவி சற்று நிறுத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
இந்த சிறிது இடைவெளியைக் கூட திலகாவால் பொறுக்க முடியாமல் "அடுத்து என்ன ஆயிற்று?" என்று ஆர்வமும் திகிலும் கலந்து கேட்டாள்.
“ஒருநாள் லில்லி டீச்சர் லேபில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருப்பதை எதிர் வகுப்பில் இருந்து பார்த்த தாரணி சாதனாவிடம் சென்று சொன்னாள். உடனே சாதனா பிரின்சிபாலிடம் எதையோ சொல்லி, லில்லி டீச்சரை லேபில் இருந்து வெளியே அனுப்பினாள். தாரணி இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, லேபுக்குள் நுழைந்தாள். தாரணி தான் அமிலங்கள் எல்லாத்தையும் அடுக்கி வைப்பதால் அவளுக்கு பிக்ரிக் அமிலம் எந்த இடத்தில் இருக்கும் என்று தெரியும். சூடு செய்வதற்காக பிக்கரில் தண்ணீர் இருந்தது. அதை கொட்டிவிட்டு, அதற்கு பதில் பிக்ரிக் அமிலத்தை மாற்றினாள் தாரணி. பிரின்சிபல் திட்டிய குழப்பத்தில் இருந்த லில்லி டீச்சர், பீக்கரில் இருந்தது தண்ணீர் என நினைத்து அதை வெப்பப்படுத்தும் போது வெடித்து விட்டது. நாங்க எதிர் பார்த்த மாதிரியே மரணக் காயம்” என்று கவி சொல்லி முடிக்க....
"சரியான தண்டனை கவி. இதுமாதிரி பெண் இனத்திற்கு கேடு நினைக்கும் பெண்கள் எல்லாம் உயிரோடவே இருக்க கூடாது" என்று திடீரென வீரத்துடன் பேசினார் திலகா.
"இதுல ஹைலைட் என்னென்னா இன்ஸ்பெக்டர் இதை கண்டுபிடித்து விட்டார். இப்படித்தான் நடந்திருக்கும் என்று தெளிவாக ஸ்கெட்ச் போட்டு விட்டார். நல்ல வேளை அவரின் மகளும் தியாவும் டியூஷன் தோழிகள் என்பதால் இன்ஸ்பெக்டரை கேசை முடிக்க வைத்தாள் அவர் மகள்" என்று ராம் சொன்னான்.
"இந்த விசயம் உனக்கெப்படி தெரியும்"? என்று கேட்ட கவிக்கு "இன்ஸ்பெக்டர் என்னிடம் உங்க பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, நிலைமை மோசமாவதற்குள் சரிசெய்து கொள்னு அட்வைஸ் பண்ணார்"என்றான் ராம்.
"நியாயக்காரன் படகில் போனால் படகு ஒன்பது ஓட்டை என்றாலும் பத்திரமாக கரை சேர இறைவன் அருள் புரிவான்" என்ற கண்ணதாசனின் வரிகள் திலகாவிற்கு நினைவுக்கு வந்தது.
" கவி உன்னை மகளாக பெற்றதற்கு நான் ரொம்ப பெருமை படறேன் மா. வேலு நாச்சியார் போல அநீதிக்கு எதிராக போராடுகிறாய்" என்று உச்சி முகர்ந்தாள் திலகா. "அம்மா எல்லாரும் வேலுநாச்சியார் பற்றியே பேசறோமே தவிர அவர் வெற்றி பெறுவதற்காக மனித வெடிகுண்டாக மாறி எதிரியின் வெடிமருந்து குடோனை அழித்த குயிலியை யாரும் நினைவில் வைப்பது இல்லை" என்று ஆதங்கமாக சொன்னாள்.
"சித்தி.. போதும் நீங்க உங்க பெண்ணின் பெருமை பாடியது." என்று இடைமறித்தான் ராம்.
"அம்மா நீயும் ஜான்சி ராணி ஆக மாற சந்தர்ப்பம் இருக்கும்மா:, என்று கவி சந்தடி சாக்கில் நண்டுபிடித்தாள்.
”சொல்லு கவி, நான் யாரை என்ன செய்யணும்? சொல்லு கவி .இந்த சமுதாயத்தில் பாலியல் வன்கொடுமையை இல்லாமல் ஆக்க என்ன பண்ணனும்னு சொல்லு "ஆவேசமாக பேசினார்.
"அம்மா.. சமுதாயத்தை திருத்த வேண்டாம். முதலில் வீட்டை திருத்துங்கள். உங்கள் கணவர் பிரின்ஸிபால் செய்த கேடுகெட்ட செயலுக்கு என்ன தண்டனை என்று நீங்களே தீர்மானிங்க. மகளின் தோழி என்றும் பார்க்காமல் மேலே கை வைத்த அந்த மிருகத்திற்கு என்ன தண்டனை"?” என்று கொதித்துக் கொண்டிருந்த கவியின் கன்னத்தில் இடியென பளார் என்று ஒரு அறை விழுந்தது.
(திக் திக் தொடரும்)
சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #47