Skip to main content

பும்ரா கண்ணில் காயம்... ஐபிஎல்-க்காக எடுக்கப்படும் ரிஸ்க்?

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி பேட்டிங்கில் விராட் கோலியை எந்தளவுக்கு நம்பியிருக்கிறதோ, அதே அளவிற்கு பவுலிங்கில் பும்ராவை நம்பியுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளின்போது முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டுமென கோலி மற்றும் சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

 

bumrah

 

ஐ.பி.எல். போட்டிகளுக்காக அதிக ரிஸ்க் எடுக்கப்படுவது போலவே தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய முதல் ஐ.பி.எல். போட்டியில் பும்ராவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. மேலும், அந்த போட்டியில் அவர் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. ஆனால் அடுத்த போட்டியில் ஆர்.சி.பி. அணிக்கு எதிராக மீண்டும் விளையாடினார். டெத் ஓவர் பவுலிங்கில் கலக்கி அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.
 

இந்த நிலையில் சென்னை அணிக்கு எதிராக விளையாடியபோது பும்ராவின் கண்ணில் காயம் இருந்தது. வலது கண்ணுக்கு கீழ் வீக்கம் இருந்தது. இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. "கேட்ச் பயிற்சியின்போது பும்ரா கேட்சை மிஸ் செய்தார். அதனால் அவருக்கு கண்ணுக்கு அருகில் காயம் ஏற்பட்டது” என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்தார்.

 

ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஷ், முஹமது சமி உள்ளிட்ட இந்திய வீரர்கள் அடிக்கடி காயத்திற்கு உட்படக் கூடியவர்கள். ஏற்கனவே பேக் அப் ஃபாஸ்ட் பவுலர்கள் இல்லை. இந்த நிலையில் இவர்களில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலும் அது பெரிய இழப்பாக இருக்கும்.     

 

கடைசி நேரங்களில் பல பரிசோதனைகள் மற்றும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு செட்டில் ஆகாத இந்திய அணி 2007 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியது. பேட்டிங் லைனில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டது. லீக் சுற்றில் தோல்விகளை அடைந்து மோசமான உலகக்கோப்பை தொடராக அணிக்கு மாறியது. சில முக்கிய வீரர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டால், அது போன்றதொரு சூழ்நிலை மீண்டும் ஏற்பட வாய்ப்புண்டு.
 

2015 உலக கோப்பை போட்டிகளின்போது இந்திய அணிக்கு அறிமுகம் ஆகாமல் இருந்தார். 2016 ஜனவரி மாதம் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான பும்ரா குறுகிய காலகட்டத்தில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளார். இந்திய அணிக்கு தற்போது டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என அனைத்திலும் முன்னணி பவுலராக இருந்து வருகிறார். 

 

பேட்டிங்கிலும் முழுமையாக தயாரான பேக் அப் வீரர்கள் இல்லை. நம்பர் 4-ல் எதிர்பார்க்கப்பட்ட ராயுடு சொதப்பி வருகிறார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை அதிகம் நம்பியுள்ளது. காயம் காரணமாக உலக கோப்பையின் சில போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் விளையாட முடியாமல் போனால், அது அணியின் வெற்றியை பாதிக்கும். 
 

“கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலக கோப்பை தொடருக்கான அணியின் தேர்வு நடைபெற்று வந்தது. இந்த காலகட்டத்தில் பல்வேறு காம்பினேஷன்களை சோதனை செய்து பார்த்திருக்கிறோம். அறிவிக்கப்படும் அணி உலக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. வரும் 20-ம் தேதிக்குள் உலக கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள்” என இந்தியத் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு பிறகாவது  தேர்வான இந்திய வீரர்களுக்கு நடந்துவரும் ஐபிஎல் தொடரில் சில முக்கிய கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.