சிவகாத்திகேயன் மற்றும் சில தனியார் அமைப்புகளுடன் உதவியுடன் நேபால் நாட்டில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்டு நாடு திரும்பியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சச்சின் சிவா.
மதுரை மாவட்டம் அனுப்பானடியை சேர்ந்த சச்சின் சிவா மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். நேபால் நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடியது. இதில் தமிழகதிலிருந்து முதன்முறையாக சச்சின் சிவாவும் விளையாடினர். இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. சச்சின் சிவா முதன்முதலாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய காரணத்தினால் தனது சொந்த ஊரில் கோப்பையை காண்பிப்பதற்காக அவருக்கு கோப்பை வழங்கப்பட்டு நேற்று மதுரை வந்தடைந்தார்.
வறுமை சூழலில் இந்திய அணியில் இடம்பெற பல்வேறு துன்பங்களை சந்தித்துவந்த சிவாவுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஒருசில தனியார் அமைப்புகள் தொடர் உதவிகள் புரிந்து, அவரது ஆட்டத்திறனை வளர்த்துக்கொள்வதற்காக உதவியுள்ளனர். இந்த நிலையில் விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சச்சின் சிவா, "இந்த கிரிக்கெட் போட்டியில் 3 - 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. முதல்முறையாக இந்திய அணிக்காக விளையாடிய காரணத்தினால், கோப்பையை அனைவரிடமும் காட்டுவதற்காக தற்போது இங்கு கொண்டு வந்துள்ளேன்.
இதற்கு உறுதுணையாக இருந்த அனைவரிடமும் இந்த கோப்பையை காண்பித்து பகிர்ந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியைளிக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் முக்கியமாக நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.