இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்க இருக்கிறது.
இதற்கான முதல் ஒருநாள் போட்டி நாளை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இதனை அடுத்து இரண்டாவது போட்டி ஜனவரி 21ல் ராய்ப்பூரிலும் மூன்றாவது போட்டி ஜனவரி 24ல் இந்தூரிலும் நடைபெற உள்ளது. இதற்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டு நேற்று ஹைதராபாத் சென்று சேர்ந்தனர்.
தற்போது வரை ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் நியூசிலாந்து அணி 115 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து 113 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் 112 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்திய அணி 110 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இந்திய அணி நியூசிலாந்து அணியுடனான மூன்று ஒருநாள் போட்டியிலும் வெல்லும் பட்சத்தில் நான்கு புள்ளிகள் கூடுதலாகப் பெறும். இந்தியாவுடன் மூன்று போட்டிகளிலும் தோற்றால் நியூசிலாந்து அணி புள்ளிகளை இழக்கும். நான்கு புள்ளிகளைக் கூடுதலாகப் பெறும் இந்திய அணி 114 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும். அதற்கு அடுத்த நிலையில் இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கும். 110 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு நியூசிலாந்து தள்ளப்படும்.