ஐபிஎல் 2024இன் 41 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று (ஏப்.25) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி, அனுபவ கோலி, டு பிளசிஸ் இணை ஹைதராபாத் பந்து வீச்சை ஆரம்பத்திலேயே ஆட்டம் காண வைத்தது. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த டு பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வில் ஜேக்ஸும் 6 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த பட்டிதார், கோலியுடன் இணைந்து அசர வைக்கும் விதத்தில் ஆடினார். மார்கண்டேவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் அடித்து ஹைதராபாத் பவுலர்களை திகைக்க வைத்தார். 20 பந்துகளில் அரை சதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலியும் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். க்ரீனின் 20 பந்துகளுக்கு 37 எனும் கடைசி கட்ட அதிரடி கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. சிறப்பாக பந்து வீசிய உனாத்கட் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 2 விக்கெட்டுகளும், மார்கண்டே, கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் 207 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்தியது. கடந்த சில போட்டிகளாக அதிரடியாக ஆடி ரன்கள் குவித்து வரும் ஹைதராபாத் அணி இந்த இலக்கை எளிதில் அடித்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, முதல் ஓவரிலேயே ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளசிஸ் தைரியமாக முதல் ஓவரை ஸ்பின்னரான வில் ஜேக்ஸுக்கு கொடுக்க, சிக்சர்கள் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், ட்விஸ்ட் நடந்தது. தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை மிரட்டி வந்த ஹெட் 1 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் சிறிது அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 31 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஸ்வப்னில் சிங் சுழலில் மார்க்ரம் 7, கிளாசென் 4 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நித்திஷ் ரெட்டியும் 13 ரன்களில் கரன் ஷர்மா பந்தில் போல்டு ஆனார். அடுத்து வந்த அப்துல் சமத்தும், கரன் ஷர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
85-6 என்ற இக்கட்டான சூழலில் கேப்டன் கம்மின்ஸ் களமிறங்கினார். அவருடன் இணைந்து சபாஸ் அஹமதுவும் இணைந்து எவ்வளவோ முயன்றும் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. கம்மின்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை களத்தில் நின்ற சபாஸ் அஹமது 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணியால் 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
சிறப்பாக பந்து வீசிய ஸ்வப்னில் சிங், கரன் ஷர்மா, க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், யாஸ் தயால், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். அட்டகாசமாக ஆடி 20 பந்துகளில் அரை சதம் அடித்த பட்டிதார் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 4 புள்ளிகள் பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.
இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று மற்ற அணிகளின் ஆட்டங்களின் முடிவைப் பொறுத்து பெங்களூரு அணிக்கு கொஞ்சம் பிளே ஆஃப் வாய்ப்பு எஞ்சியுள்ளது. அதனால் இந்த வெற்றியானது 6 ஆட்டங்களாக தொடர் தோல்விகளால் துவண்டிருந்த பெங்களூரு அணிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.