அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தனது வாழ்க்கையில் மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளார்.
உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர். சென்ற ஆண்டு குழந்தை பெறுவதற்காக ஓராண்டு ஓய்வில் சென்றவர், சமீபத்தில் நடந்துமுடிந்த விம்பிள்டன்ஸ் மகளிர் டென்னிஸ் தொடரில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்திருந்தாலும், இறுதிப்போட்டி வரை சென்று இரண்டாம் இடத்தைப் பிடித்ததோடு, டாப் 30 தரவரிசையிலும் இடம்பிடித்து நம்பிக்கையளித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவில் சிலிக்கான் வேலி கிளாசிக் என்ற பெயரில் நடத்தப்பட்ட டென்னிஸ் தொடரில் கலந்துகொண்ட செரீனா, முதல் சுற்றில் பிரிட்டனைச் சேர்ந்த ஜோன்னா கோண்டா என்பவருடன் மோதினார். சற்றும் எதிர்பாராத விதமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 6 - 1, 6 - 0 என்ற நேர் செட் கணக்குகளில் தோல்வியைத் தழுவினார். ஏழு டபுள் எர்ரர் மற்றும் 25 அன்ஃபோர்ஸ்டு எர்ரர்கள் என அவரது வாழ்க்கையில் சந்தித்த மிக மோசமான தோல்வி இது என பலரும் விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், செரீனா வில்லியம்ஸைத் தோற்கடிக்கும் முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமையை கோண்டா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.