பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலிக்கும் தனக்குமிடையே நடந்தது என்ன என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
அமீரகத்தில் நடைபெற்ற 13-ஆவது ஐபிஎல் தொடரின் 48-ஆவது லீக் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில், மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிலைத்து நின்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி வீரரான சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார்.
மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் களத்தில் நிற்கும் போது பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி அவரை சீண்டும் விதமாக நடந்துகொண்டார். இந்திய அணிக்காக இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத ஒருவரிடம், இந்திய அணியின் கேப்டன் இப்படியா நடந்து கொள்வது என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "அது களத்தில் உச்சகட்ட தருணம். எனக்கும் அவருக்கும் இடையே அதற்கு முன்பு எதுவும் நடக்கவில்லை. இந்த விஷயம் எப்படி இவ்வளவு தூரம் கவனிக்கப்பட்டது என்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. விராட் கோலி அனைத்து போட்டிகளிலும் உற்சாகத்துடன் இருப்பதை பார்த்திருக்கிறேன். மும்பை அணிக்கு எதிரான போட்டி மட்டும் விதிவிலக்கல்ல. அது பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான போட்டி. போட்டிக்குப் பிறகு இயல்பாகத்தான் இருந்தார். நன்றாக விளையாண்டீர்கள் என்று அனைவரிடமும் கூறினார். இது சிறிய தருணம் மட்டும்தான். அந்த சூழ்நிலையில் எதிரணியில் முக்கியமான வீரர் யார் என்பது அவருக்கு தெரியும்" எனக் கூறினார்.